இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியைப் பற்றிய அறிவு - முடிவு

மாமரியைப் பற்றிய நம் புத்தகத்தை முடிப்பதில், ஒரு சிறு வட்டத்திற்குள் அவர்களைப் பற்றிய முழுமையான அறிவை நம் வாசகர்களுக்கு முன்பாக வைக்கும்படியாக, இந்தப் புத்தகத்தில் நாம் கூறியுள்ள அனைத்தையும் சுருக்கமாத் தர வேண்டும் என்று நாம் எண்ணினோம்.

ஆனால் இந்தப் பணியைச் செய்வதற்காக எழுது மேஜையருகில் நாம் அமர்ந்திருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் தமது பழமொழிகள் ஆகமத்தின் முப்பத்தோராம் அதிகாரத்தில், பூமியில் உள்ள அரசர்களில் எல்லாம் அதிக ஞானமுள்ளவராய் இருந்தவரைக் கொண்டு ஏற்கெனவே இதைச் செய்து விட்டார் என்ற உண்மை நமக்கு உறைத்தது. உடனே, லாப்பிதேயின் கொர்னேலியுஸ் தருகிற ஒரு விளக்கவுரையை இந்த அத்தியாயத்தில் தந்து, அதன் மூலம் நம்முடைய இந்தப் புத்தகத்தை முடிப்பது என்று நாம் தீர்மானித்துக் கொண்டோம். இப்படிச் செய்வது ஓர் இரட்டை அனுகூலத்தைக் கொண்டிருக்கும்:

முதலாவது, இந்தப் புத்தகத்திலுள்ள அதே வரிசைப்படி இல்லாவிட்டாலும், நம் மகா மகிமையுள்ள திருத்தாயாரைப் பற்றி நாம் சொன்ன அனைத்தையும் சுருக்கித் தருதல்;

இரண்டாவது, அது நாம் எழுதிய அனைத்தின் மீதும் பரிசுத்த ஆவியானவரின் அதிகாரத்தின் முத்திரையை இட்டு வைக்கும்.

‘‘வீரமிக்க ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? தூரமாய்க் கடைகோடிகளில் இருக்கிறது அவளுடைய விலைமதிப்பு.''

மாமரியே அந்த வீரநாயகி, போராடுபவர்கள், வேதசாட்சிகள் அனைவருடையவும் இளவரசியும், இராக்கினியும் அவர்களே. ‘‘ஏனெனில், ‘‘உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்'' என்று சர்வேசுரன் யாரிடம் சொன்னாரோ, அந்த சர்ப்பத்தின் தலையை நசுக்கும் அளவுக்கு அவர்கள் மிகுந்த பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள்'' என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார்.

இதன் காரணமாக, அவர்களே எல்லா விலைகளுக்கும் அப்பாற்பட்ட அந்த விரையேறப் பெற்ற முத்தாக இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் சகல சம்மனசுக்களையும், சகல மனிதர் களையும், பிரபஞ்சம் முழுவதையும் விட அதிக மதிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும் அர்ச். அகுஸ்தீனார் இதை எடுத்துரைப்பது போல், ‘‘அவர்களே தன் அணிகலன்களின் விலையாக இருக் கிறார்கள்.''

‘அவள் கணவனின் இருதயம் அவளில் நம்பிக்கை கொள்கிறது; கொள்ளைப் பொருட்களும் அவனுக்குக் குறைவுபடாது.''

பரிசுத்த ஆவியானவரே மாமரியின் மணவாளராக இருக்கிறார், ஏனெனில் மாமரியின் கிறீஸ்துநாதரின் உற்பவத்திற்கு ஞான முறையில் அவரே காரணமாக இருந்தார். மற்றப் பெண்களில் ஆண்மகன் நிறைவேற்றுவதை அவர் சுபாவத்திற்கு மேலான விதத்தில் செய்து முடித்தார்.

இதனாலேயே திவ்ய கன்னிகை தேவ தூதரிடம்:

‘இது எப்படியாகும்? நானோ புருஷனை அறியேனே?'' என்று கேட்டார்கள். தேவதூதர் பதிலளித்தார், இங்கே ஞான முறையில் செயல்பட இருப்பவரை அவர் அறிவித்தார்: 

‘இஸ்பிரீத்துசாந்து உம்மீது வருவார்; உன்னதமானவருடைய வல்லமை உமக்கு நிழலிடும்;'' அதாவது அவர் முழுமையாகவும், பூரணமாகவும், தம்முடைய பரிபூரண முழுமையோடு உம்மீது வருவார், அவர் உம்மில் நம்பிக்கை வைப்பார், அதாவது, உம்மில் நம்பிக்கையோடும், பாதுகாப்போடும் தம்மை ஒப்படைப்பார், உம்மில் தங்கி, தம்முடைய கொடைகள் அனைத்தையும் உமக்குத் தந்து, தம்மையும், தம்முடைய எல்லாக் கொடைகளையும் உமக்குத் தந்து, தம்முடைய எல்லா உடைமைகளையும், தம்மையுமே உம்மிடம் ஒப்படைப்பார், அதை விட மேலாக, உம்மிலும், உம்மோடும் தேவ வார்த்தையானவரை அவருடைய முழு தெய்வீகத்தோடும் உம்மில் சேமித்து வைப்பார்.''

மீளவும்: ‘‘பரிசுத்த ஆவியானவரின் திரு இருதயம் மாமரியில் தன் நம்பிக்கையை வைக்கிறது, ஏனெனில் அவர் பாவிகளுக்காகப் பரிந்து பேசுபவர்களாக அவர்களை ஏற்படுத்தியிரக்கிறார்; அவர்கள் வழியாக, அவர்களுடைய ஒத்தாசையைக் கொண்டு பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுகிறவர்களாகிய ஏராளமான கொள்ளைப் பொருளை அவர் சம்பாதித்துக் கொள்வார். இதனால்தான் அவர்கள் பாவிகளின் நம்பிக்கை என்றும், ஏழைகளின் அடைக்கலம் என்றும் அழைக்கப் படுகிறார்கள்.''

‘அவள் அவனுக்குத் தன் சீவிய நாட்கள் அனைத்திலும் தின்மையை அல்ல, நன்மையையே அளிப்பாள்.''

கடவுளின் சகல கொடைகளுக்கும் பிரமாணிக்கமாய் இருப் பதிலும், அவருடைய எல்லா சீராட்டல்களுக்கும் பதிலளிப்பதிலும், அவருடைய எல்லா வரப்பிரசாதங்களுக்கும் நன்றி செலுத்துவதிலும் எந்த சிருஷ்டியும் மாமரியோடு ஒப்பிடப்பட இயலாது. மாமரியைப் போல வேறு எந்த சிருஷ்டியும் இவ்வளவு பிரமாண்ட மான, பக்திக்குரிய சங்கை மரியாதையையும், மகிமையையும் செலுத்தியதில்லை. ஆகவே அவர்களைப் பற்றி உண்மையோடு: ‘‘அவள் அவருக்குத் தன் வாழ்நாட்கள் அனைத்திலும் தின்மையை அல்ல, நன்மையையே தந்தாள்'' என்று சொல்லப்பட முடியும்.

‘அவள் ஆட்டு உரோமத்தையும் சணல் நூலையும் தெரிந் தெடுத்துத் தன் கரங்களின் சாமர்த்தியத்தால் வேலை செய்தாள்.''

கம்பளியையும், சணல் நூலையும் கொண்டு செய்யும் இந்த வேலை மிகவும் மேன்மையான விதத்தில் மாமரிக்குச் சொந்த மானது. முதலாவதாக, அர்ச். எப்பிஃபானியுஸ் எழுதுவது போல், உள்ளபடியே:

‘அவர்கள் கீழ்ப்படிதலும், நேசமும் உள்ளவர்களாக இருந் தார்கள், பரிசுத்த வேதாகமங்களில் மட்டுமின்றி, ஆட்டு உரோமத்திலும், சணல் நூலிலும் கூட அவர்கள் வேலை செய் தார்கள்.''

இரண்டாவதாக, உபமான முறையில்:

ஏனெனில், அதே அர்ச்சியசிஷ்டவர் குறிப்பிடுவது போல:

‘பெண்களுக்கு ஞானத்தின் நெய்தல் வேலையையும், அறிவாகிய நூற்பின்னலையும் தந்தவர்கள் யார்?'' 

செம்மறிப்புருவையானவரைப் பெற்றெடுக்கும் வேலை மாமரிக்குத் தரப்பட்டிருக்கிறது. ஞானத்தின் கம்பளியிலிருந்து தரப்படுவது போல, அதே செம்மறிப்புருவையானவரின் மகிமை யிலிருந்து, அழியாமையின் நூல் வேலை நமக்கென ஏற்படுத்தப் பட்டுள்ளது. 

மாமரியே இந்த ஆட்டு உரோமமாக இருக்கிறார்கள். அர்ச். புரோக்குலுஸ் கூறுவதுபோல, கடவுள் நம்மிடம் இறங்கி வந்திருக்கிற பாலமாக அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்; அவர்களே அந்த அற்புதமான நற்குணமாகிய கம்பளி நூல் வேலையாக இருக்கிறார்கள், அவர்களிடமிருந்தும், அவர்களிலும் தான் அந்த அற்புதமான ஐக்கியத்தின் மேலாடை தயாரிக்கப் பட்டது, பரிசுத்த ஆவியானவரே அதன் நெசவாளராக இருந்தார்.

‘தூரத்தினின்று தன் அப்பத்தைக் கொண்டுவருகின்ற வணிகக் கப்பல் போல் இருக்கிறாள்.''

அப்பத்தின் வீடாகிய பெத்லகேமில் நம் ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துநாதராகிய ஜீவிய அப்பத்தைப் பெற்றெடுத்த போது, மாமரி உண்மையாகவே அப்பத்தைக் கொண்டு வருகிற வணிகர்களின் கப்பலாக இருந்தார்கள்.

அவர்கள் தன்னுடைய மாசற்ற திருவுதரத்தில் மிகத் தொலை வான காரியங்களை, தற்காலிகமானதும், நித்தியமானதுமான காரியங்களை, சர்வ வல்லபமுள்ளதும், பலவீனமுள்ளதுமான காரியங்களை, அளவுக்கு உட்பட்டதும், அளவற்றதுமான காரியங்களை, கடவுளையும் மனிதனையும் ஒன்றித்ததால் அவர்கள் அவரைத் தூரத்திலிருந்து கொண்டு வந்தார்கள். அவர் மெய்யாகவே அவருடைய அப்பமாக இருந்தார், ஏனெனில் மனிதனின் ஒத்தாசை யின்றி, தன்னுடைய மாசற்ற கன்னிமையாகிய லீலிகளின் மத்தியில் அவர்கள் அவரைக் கருத்தரித்தார்கள்.

‘அவள் இரவில் எழுந்து தன் வீட்டாருக்கு உணவையும் தன் ஊழியக்காரிகளுக்கு உணவு வகைகளையும் தந்தாள்.''

மாமரியை விட இது அதிகமாக வேறு யாருக்குப் பொருந்தும்? பிரமாணிக்கமின்மை, இருள், விசுவாசத்தில் பற்றுதலின்மை ஆகியவற்றின் இரவில், சம்மனசானவரின் உத்தரவுப்படி, அவர்கள் எழுந்து, வார்த்தையானவரின் மனிதாவதாரத்தைப் பற்றிய செய்தியைப் பெற்றுக்கொண்டார்கள், தனது சம்மதத்தைத் தந்ததன் மூலம், திவ்விய நற்கருணையில் வார்த்தையானவரை நமக்குத் தரும் படியாக, அவரைத் தன்னில் சேர்த்துக் கொண்டார்கள்.

மேலும், சிநேகம், தாழ்ச்சி, பொறுமை, இன்னும் மற்றப் புண்ணியங்களுடையவும் மிகத் தீவிரமுள்ள செயல்களால் அளவிடப்பட முடியாதவையும், மிகப் பெரியவையுமான வரப் பிரசாதத்தையும், பேறுபலனையும் அவர்கள் சம்பாதித்தார்கள்; அர்ச். பெர்னார்ட் சொல்வது போல, அவர்களுடைய நிறைவில் இருந்து நாம் அனைவரும் பெற்றுக்கொள்ளும்படியாக, தனக்கென்று மட்டும் வைத்துக்கொள்வதற்காக அல்லாமல், எல்லாக் கிறீஸ்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும்படியாக அவர்கள் இவற்றைச் சம்பாதித்தார்கள்.

‘அவள் ஒரு வயலைப் பற்றிச் சிந்தித்து, அதை வாங்கினாள்; தன் கைகளின் பலனால் ஒரு திராட்சைத் தோட்டத்தை நட்டிருக்கிறாள்.''

மாமரி சகல புண்ணியங்களையும் தொடர்ந்து அனுசரித்ததன் மூலம் தன்னுடைய சரீரத்தையும் தன்னுடைய ஆத்துமத்தையும் பண்படுத்தியபோது, அவர்கள் உண்மையாகவே ஒரு வயலையும், ஒரு திராட்சைத் தோட்டத்தையும் தன்னில் நட்டார்கள்.

இரண்டாவதாக, அவர்கள் தன்னுடைய ஞானத்தாலும், தன்னுடைய பராமரிப்பாலும், தன்னுடைய பேறுபலன்களாலும், தன்னுடைய மாதிரிகைகளாலும் ஆதித் திருச்சபையாகிய வயலையும், திராட்சைத் தோட்டத்தையும் நட்டு, அதைப் பண்படுத்தி, அது முழுமையான அர்ச்சியசிஷ்டதனத்தில் பலன் மிக்கதாகி, அப்போஸ்தலிக்க மனிதர்களையும், வேதசாட்சிகளையும், கன்னியர்களையும் பிறப்பிக்கும் அளவுக்கு அதை வளமுள்ளதாக்கினார்கள். எவ்வளவு அதிகமாக அதை வளப் படுத்தினார்கள் என்றால், கிறீஸ்தவர்கள் அனைவரும் கிறீஸ்தவ வாழ்வை மட்டுமல்லாமல், தரித்திரத்திலும், கற்பிலும், கீழ்ப் படிதலிலும் துறவற வாழ்வும் வாழ்ந்தார்கள். தொடர்ந்து வரவிருந்த எல்லாத் தலைமுறைகளுக்காகவும் மாமரி திருச்சபையாகிய வயலை சகல மக்களினங்களுக்கு நடுவிலும் பரவச் செய்து, அவற்றில் மிக அநேக துறவற சபைகளாகிய திராட்சைத் தோட்டத்தை அவற்றில் நட்டு வைத்தார்கள்; தன் சொந்த வயலிலும், திராட்சைத் தோட்டத்திலும் இருந்து அவர்கள் விசுவாசிகளைத் தாங்குகிற தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய கோதுமையையும், கன்னியர் களைப் பிறப்பிக்கிற திராட்சை இரசத்தையும் விசுவாசிகளுக்கு வழங்குகிறார்கள்.

மூன்றாவதாக, ஒவ்வொரு விசுவாசமுள்ள ஆத்துமத்தையும் புதிய வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் போல விசுவாசத்திலும் அர்ச்சியசிஷ்டதனத்திலும் பண்படுத்துகிறார்கள். ஏனெனில் தன் விசுவாசமும், அர்ச்சியசிஷ்டதனமும் எப்பேர்ப்பட்ட தாக இருந்தாலும் அவற்றிற்காக ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகைக்குக் கடன்படாத எந்தக் கிறீஸ்தவனுமில்லை, எந்த அர்ச்சியசிஷ்டவருமில்லை; ஏனெனில் அவர்கள் குடும்பத்தின் தாயாராக கிறீஸ்துநாதரால் ஏற்படுத்தப்பட்டார்கள், கிறீஸ்து நாதருக்கென்று அவர்கள் பெற்றெடுப்பவர்களும், அவர்களால் உணவூட்டப்பட்டு, உத்தமமாக்கப்படுபவர்களுமான அந்தக் குடும்பத்தின் குழந்தைகள் அனைவரும் விசுவாசிகளாகவும், நீதிமான் களாகவும் இருக்கிறார்கள்.

‘அவள் பலத்தால் தன் இடைகளை வரிந்து கட்டித் தன் புயத்தையும் பலப்படுத்தினாள்.''

‘அவள் பலத்தால் தன் இடைகளை வரிந்துகட்டினாள்'' என்னும் வாக்கியத்தில் கன்னிமை மறைமுகமாகக் குறித்துக் காட்டப்பட்டது, அதில் மாமரியின் தெய்வீகமான திடம் வெளிப்படையாயிருக்கிறது; ஏனெனில் முதலாவதைப் பொறுத்த வரை, தன் கன்னிமையை இழக்காமல் தான் கடவுளுக்குத் தாயாராவது நிகழ்ந்திருக்க முடியாது என்றால், தேவ தாயாராக இருக்கும் புத்திக்கெட்டாத மகா பெரிய சலுகையையும் கூடத் துறந்து விட அவர்கள் தயாராக இருந்தார்கள். இரண்டாவதைப் பொறுத்த வரை, அவர்களுடைய முழு வாழ்வும் திடம் மற்றும் மிகுந்த தாராளத்தின் மிகவும் பக்திக்குரியதொரு செயலாக இருந்தது, ஏனெனில் அவர்களுடைய வாழ்வு முழுவதும், மனுக்குலத்தின் இணை இரட்சகியாவதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்த அந்த ஃபியாத் என்னும் வார்த்தையின் தொடர்ச்சியாகவே இருந்தது. இதற்காக அவர்கள் அனுபவித்த வேதசாட்சியம் மீட்பரின் துயரங்களோடு மட்டுமே ஒப்பிடப்படக் கூடியதாக இருந்தது.

‘அவள் சுவைபார்த்துத் தன் வியாபாரம் நலமானதென்று கண்டாள். அவளுடைய விளக்கு இரவில் அணைக்கப்படாது.''

கடவுளுடைய மகிமையுள்ள தாயாரை விட அதிகமாகத் தனக்குத் தரப்பட்ட வரப்பிரசாதத்தால் அதிக பயனடைந்தது யார்? மாமரியை விடத் தனது தாலந்துகளை நன்றாகப் பயன்படுத்தியது யார்? ஒரு தனிப்பட்ட சலுகையால் அவர்களில் நடக்கும் இந்த இடைவிடாத கொடுக்கல் வாங்கல் இரவில் நின்று போகாது, ஏனெனில் அவர்ளைப் பற்றி: ‘‘நான் உறங்கினாலும், என் இருதயம் விழித்திருக்கிறது'' என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், நம் ஆண்டவரின் திருப்பாடுகளின் இரவில் அப்போஸ்தலர்கள் மற்றும் சீடர்களின் விசுவாசம் தோற்றுப் போனது, அவருடைய மரணத் திற்குப் பின் அவருடைய உயிர்ப்பைப் பற்றி அவர்கள் அவநம்பிக்கைப்பட்டார்கள், அப்போது மேன்மேலும் அதிகப் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த ஒரே விளக்கு, தன்னுடைய திருமகனின் வல்லமையிலும் தெய்வீகத்திலும் மாமரி கொண்டிருந்த விசுவாசமும், அசைக்கப்படாத அவர்களுடைய நம்பிக்கையும்தான்.

இப்போது, தெய்வீக சாலமோனின் வலது பக்கத்தில் தான் மகிமையோடு வீற்றிருக்கிற பரலோகத்தில், மாமரி தன்னுடைய இந்த வியாபாரத்தை நிறுத்தி விடவில்லை, ஏனெனில், விசுவாசிகள் மற்றும் சகல மனிதர்களின் இரட்சணியத்தைப் பற்றி மிகுந்த கவலையுள்ளவர்களாக அவர்கள் அல்லும் பகலும் வேலை செய் கிறார்கள், எல்லோரும் அதைப் பெற்றுக்கொள்ளும்படி விழித் திருந்து ஜெபிக்கிறார்கள், அனைவருடையவும் இரட்சணியத்தைத் தான் செயல்படுத்திய மனிதாவதாரம் மற்றும் இரட்சணியமாகிய பரம இரகசியங்களுக்குத் தான் சம்மதம் கொடுத்ததன் மூலம் பூமியின் மீது தான் தொடங்கி வைத்த ஊழியத்தை அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள்.

இதனாலேயே நாம் அர்ச். பெர்னார்டுடன் (றீerது. 2, de Peஐமி) சேர்ந்து: ‘‘ஓர் ஊடகத்தை, கடவுளின் திருப் பெட்டகத்தை, எல்லாவற்றிற்கும் காரணமாயிருப்பதை, இப்போது மோட்சத்தில் இருப்பவர்கள், நரகத்தில் இருப்பவர்கள், நமக்கு முந்திச் சென்றவர்கள், இப்போது பூமியில் வாழ்பவர்கள், நம்மைத் தொடர்ந்து வரவிருப்பவர்கள், நம் குழந்தைகளின் குழந்தைகள், இவர்களுக்குப் பிறக்க இருப்பவர்கள் ஆகிய எல்லாத் தலைமுறை களினுடையவும் வியாபாரமாக இருப்பதை நோக்குவது போல, மாமரியை நோக்கிப் பாருங்கள்'' என்று நாம் சொல்லலாம். பரலோகத்தில் இருப்பவர்கள் (அதாவது, தங்களில் அநேகரை இழந்து விட்ட சம்மனசுக்கள்) மீண்டும் தங்கள் பழைய நிலையில் ஸதாபிக்கப்படும்படியாகவும், பாதாளத்தில் (லிம்போ) இருப்பவர்கள் விடுவிக்கப்படும்படியாகவும், வரவிருப்பவர்கள் மகிமைப்படுத்தப்படும்படியாகவும் மாமரியை நோக்கிப் பார்ப் பார்களாக. உம்மில் தேவதூதர்கள் சந்தோஷத்தையும், நீதிமான்கள் வரப்பிரசாதத்தையும், பாவிகள் என்றென்றும் மன்னிப்பையும் கண்டடைந்தார்கள். காரணத்தோடு ஒவ்வொரு சிருஷ்டியும் உம்மை நோக்கிப் பார்க்கிறது, ஏனெனில் உம்மிலும், உம் வழியாகவும், உம்மாலும், சர்வ வல்லபமுள்ள கடவுளின் மிகுந்த தயாளமுள்ள திருக்கரம், அவர் சிருஷ்டித்திருந்தது எதுவாயினும் அவை அனைத்தையும் அவற்றின் ஆதிநிலையில் ஸ்தாபித்துள்ளது.

‘பலமான காரியங்களில் அவள் தன் கரங்களை வைத்திருக் கிறாள்; அவளுடைய விரல்கள் நூற்புக் கழியைப் பிடித்துள்ளன.''

மாமரி எப்போதுமே பக்திக்குரியவையும், வீரத்துவமுள்ளவை யுமான செயல்களாகிய பலமான காரியங்களைச் செயல்படுத்தி னார்கள்; இந்த எல்லாச் செயல்களும் சுத்தக் கருத்து என்னும் நூற்புக் கழிக்குக் கீழ்ப்பட்டிருந்தன, அது அனைத்திலும் எளியதாகவும், அனைததிலும் பரிசுத்தமானதாகவும், எப்போதும் கடவுளின் அளவற்ற மகிமையாகவும் ஆராதனையாகவும் இருந்தது.

‘வகை இல்லாதவனுக்குத் தன் கரங்களைத் திறந்தாள்; தன் கைகளை ஏழைக்கு நீட்டினாள்.'' இரக்கத்தின் மிக உள்ளரங்க பாகங்களைக் கொண்டு கடவுளை உடுத்தியவர்களும், நம் நோய்களின் மீது தயவு காட்டக்கூடிய ஒரு பரிசுத்த பிதாவை நமக்குத் தந்தவர்களும், கடவுளின் உயிருள்ள இரக்கத்தைக் கருத்தரித்துப் பெற்றெடுத்தவர்களுமான மாமரியை விட வேறு யாரைப் பற்றி இந்த வார்த்தைகள் அதிகக் காரணத்தோடு சொல்லப் பட முடியும்?

இதனால்தான் அவர்களை நோக்கி: ‘‘கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க!'' என்ற பிரியமுள்ள வார்த்தைகள் சரியான விதத்தில் சொல்லப்படுகின்றன.

‘பனியின் குளிர் நிமித்தம் தன் வீட்டாரைப்பற்றிப் பயப்பட மாட்டாள்; ஏனெனில் அவளுடைய வீட்டார் அனைவருமே இரட்டை ஆடையால் உடுத்தப்பட்டிருக்கிறார்கள்.''

மாமரியை நேசிக்கிறவர்களும், அவர்களுடைய வீட்டைச் சேர்ந்தவர்களும் பாவமாகிய குளிருக்குப் பயப்பட வேண்டிய தில்லை; ஏனெனில் மாமரியே உள்ளரங்கமானதும், வெளியரங்கமானதுமான இரட்டை ஆடையால் உடுத்தப்பட்டிருப்பது போல, அவர்களுடைய வீட்டார் அனைவரும் இரட்டை ஆடையால் உடுத்தப்பட்டிருக்கிறார்கள். உள்ளரங்க ஆடை சிநேகமாகிய பொன்னாலான ஆடையாகும்; வெளியரங்க ஆடை அடக்க வொடுக்கம் மற்றும் மட்டுத்திட்டம் என்னும் ஆடையாகும்.

சுவாரெஸ் போன்ற மற்ற வேதபாரகர்கள் இந்த இரட்டை ஆடையைப் பற்றி விளக்கும்போது, நாம் இந்தப் புத்தகத்தில் ஏற்கனவே விளக்கியுள்ளது போல், மாமரியின் ஒவ்வொரு புதிய செயலும் அவர்களுடைய வரப்பிரசாதத்தை இரு மடங்காக்கியதை இது குறிப்பதாகப் புரிந்துகொள்கிறார்கள்.

‘அவள் வண்ண வேலைப்பாடுகள் உள்ள ஆடையைத் தனக்குச் செய்திருக்கிறாள்; மெல்லிய சணலாடையும் செந்நிற வஸ்திரமும் அவளுடைய போர்வையாம்.''

இந்தக் காரியங்கள் எல்லாம் மிக மேன்மையான முறையில் மாமரியிடம் காணப்பட வேண்டியவையாகும். அவர்களுடைய ஆடை லினன் துணியாலானது, அதாவது, அவர்கள் சம்மனசுக்களை விட மேலானதொரு கன்னிமையை அணிந்திருக்கிறார்கள்; செந்நிற ஆடை, அதாவது, மிகுந்த ஆர்வமுள்ள சிநேகம். அது பரிசுத்த ஏவுதல்களும் ஆசைகளுமாகிய பல வகை நூல்களால் நூற்பின்னல் வேலை செய்யப்பட்டது. மாமரி மிகுந்த வீரத்துவமுள்ள செயல் களைச் செய்யும்படியாகவும், குறிப்பாக கடவுளின் நேசத்தில் அவர்கள் வளரும்படியாகவும், இவை இரண்டையும் சம்மனசுக் களும் கடவுளும் மாமரியின் ரூபிகரத்திற்குத் தொடர்ந்து தந்து கொண்டிருந்தார்கள். இது அவர்களுடைய உற்பவத்தின் கணத்தில் தொடங்கி, அவர்களுடைய வாழ்வின் முடிவு வரை அதிகரித்துக் கொண்டே சென்றது.

‘அவள் கணவன் நாட்டின் ஆலோசனைச் சங்கத்தாருடன் உட்கார்ந்திருக்கையில் வாசல்களில் மகிமை பெறுவான்.''

ஏனெனில், கடவுளின் திருத்தாயாரின் கணவராகவும், அவர் களுடைய கன்னிமையின் பாதுகாவலராகவும் இருக்கும் அர்ச். சூசையப்பர் மற்ற எல்லோரையும் விட மேலானவராக ஒருவேளை இல்லை என்றாலும், அவர் சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆலோசனைச் சங்கத்தில் மேன்மை மிக்கவராயிருக்கிறார்.

‘அவள் மெல்லிய சணலாடை செய்து விற்றாள்; கானானேய னுக்கு ஓர் அரைக் கச்சை தந்தாள்.''

சணலாடை மாசற்றதனத்தின் அடையாளம்; இடைக்கச்சை என்பது ஒருசந்தி மற்றும் ஒறுத்தலின் அடையாளம். சகல சிருஷ்டி களிலும் பரிபூரண மாசற்றவர்களாகிய மாமரி, அனைவருக்கும் மாசற்றதனத்தைத் தந்தருள்கிறார்கள். சரீரப் பாவங்களில் விழுந்து விட்டவர்கள் சிநேகத்தையும், மட்டுத்திட்டத்தையும் சம்பாதித்துக் கொள்ளும்படியாக, ஒருசந்தி மற்றும் ஒறுத்தலின் இடைக்கச்சையை அவர்களுக்குத் தந்தருள்கிறார்கள்.

‘பலமும் அழகும் அவளுடைய உடையாம்; கடைசி நாளிலும் அவள் சிரிப்பாள்.''

மாமரியை விட அதிக வல்லமையுள்ளவர் யார்? கடவுளின் வரப் பிரசாதத்தின் இந்த அற்புதத்தை விட அதிக அழகானவர் யார்? மாமரியின் மரணத்தை விட வேறு யாருடைய மரணம் இன்னும் அதிகமாக சந்தோஷத்தால் நிரம்பியதாகவும், பரலோகத்தின் ஒரு மேலதிக முன்சுவையாகவும் இருந்தது?

‘அவள் ஞானத்துக்குத் தன் வாயைத் திறந்தாள்; அவளுடைய நாவில் இனிமையின் சட்டம் இருக்கிறது.''

பிதாவின் நித்திய ஞானமானவரும், அவருடைய உயிருள்ள இனிமையுமானவருக்கு மாமரி பிறப்பளித்தார்கள். இதன் காரணமாக, அவர்கள் ஞானத்தாலும், இரக்கத்தாலும் நிரப்பப் பட்டார்கள்.

‘தன் இல்லத்தின் வழிகளை அவள் நன்றாகப் பார்த்திருக் கிறாள்; சோம்பலாய்த் தன் அப்பத்தை அவள் புசித்ததில்லை.'' 

இந்த வாக்கியத்தின் பொருள் நாம் சொல்லியுள்ள எல்லாவற்றிலிருந்தும் தெளிவாயிருக்கிறது. ஏனெனில் இல்லம் என்னும் வார்த்தையை நாம் மாமரியின் சொந்த ஆத்துமம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி, அல்லது திருச்சபை என்று அர்த்தப் படுத்தினாலும் சரி, அவர்கள் இவ்விரண்டையுமே நல்ல அக்கறை யோடு கவனித்துக்கொண்டார்கள். தான் எதைக் கொண்டு போஷிக்கப்பட்டிருக்கிறார்களோ அந்த வரப்பிரசாதத்தை அவர்கள் தனக்கென்று சம்பாதித்துக் கொண்டார்கள்.

‘அவளுடைய புத்திரர் எழுந்து அவளை மகா பாக்கியவதி யென்று அழைத்தார்கள்; அவளுடைய கணவனும் அவளைக் புகழ்ந்தான்.''

சம்மனசானவரின் வாயில் தாங்கள் வைத்த வார்த்தைகளில் தமத்திரித்துவம் முழுவதும் மாமரியை பாக்கியவதி என்று அழைத்தது. ‘‘பிரியதத்தத்தினால் பூரணமானவளே, வாழ்க! கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.''

அர்ச். எலிசபெத்தம்மாள் அவர்களை பாக்கியவதி என்று அழைத்தாள்: 

‘விசுவசித்ததால் நீர் பாக்கியவதியாயிருக்கிறீர்.''

அன்று முதல் திருச்சபை முழுவதும், சுவீகாரத்தால் மாமரியின் சொந்தக் குழந்தைகளாக இருப்பவர்கள் அனைவரும், சற்றுமுன் குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பத்தில் மாமரியே கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறும்படியாக, அவர்களை பாக்கியவதி என்று அழைத்து வருகிறார்கள்:

‘இதோ, இந்நாள் முதல், எல்லாத் தலைமுறையாரும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.''

‘பல புதல்வியர் திரவியங்களைச் சேகரித்தார்கள்; நீயோ அவர்கள் அனைவரையும் மேற்கடந்திருக்கிறாய்.''