இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுளோடும், மனுக்குலத்தோடும், தன் சொந்த சுயத்தோடும் தனக்குள்ள தொடர்பில் மாமரியின் மகத்துவத்தின் விளைவுகள்

முந்தின புத்தகங்களில் பிரபஞ்சத் திட்டத்தில் மாமரி வகிக்கும் இடத்தைப் பற்றியும், கடவுள் மாமரிக்குத் தந்த இருமடங்கான மகத்துவத்தைப் பற்றியும் நாம் பார்த்தோம்; அத்தகைய மகத்துவத்தின் மேன்மை மற்றும் பிரமாண்டமான அளவுகளைப் பற்றி அறிந்து பிரமித்தோம்; அவர்களது மகா உன்னதமான அலுவலுக்கு அவர்களைப் பொருத்தமானவர்களாக ஆக்கவும், அவர்களை அலங்கரிக்கவும் அவசியமாயிருந்த இலட்சணங்களைப் பற்றி நாம் பேசினோம். இவ்வாறு, மாமரியின் உன்னத மகத்துவத்தின் கோட்பாடுகள் அனைத்தைப் பற்றியும் நாம் தியானித்திருக்கிறோம். இந்த வேலையை நிறைவு செய்யும்படியாக, இப்போது நாம் அந்த மகத்துவத்தை அதனோடு தொடர்புள்ள காரியங்களின் அடிப்படையில் நாம் ஆராய வேண்டும். இதற்காக இந்தப் புத்தகத்தை நாம் மூன்று அத்தியாயங்களாகப் பிரித்துக் கொள்வோம்: முதல் அத்தியாயம் தமத்திரித்துவ சர்வேசுரனுட னான தொடர்பில் மரியாயின் மகத்துவத்தின் விளைவுகளைப் பற்றி நாம் ஆராய்வோம்; இரண்டாவதில், பிரபஞ்சத்தோடு அவர்களுடைய தொடர்பின் அடிப்படையிலும், மூன்றாவதில், அவர்களுடனேயே அவர்களுக்குள்ள தொடர்பின் அடிப்படையிலும் அவர்களது மகத்துவத்தின் விளைவுகளைப் பற்றி நாம் ஆராய்வோம்.

அத்தியாயம் 1

தமத்திரித்துவ சர்வேசுரனுடனான தொடர்பில் மாமரியின் மகத்துவத்தின் விளைவுகள்

மாமரியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த அலுவல் மூன்று தேவ ஆட்களோடு அனைத்திலும் அதிக நெருக்கமான உறவில் அவர்களை வைக்கிறது. ஆகவே, இந்த உறவைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்கு, மூன்று தேவ ஆட்களில் ஒவ்வொருவரோடும் உள்ள உறவில் மாமரியை நாம் காண வேண்டும்.