இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரி எல்லா விதத்திலும் அழகானதற்கு முற்றிலும் பொருத்தமானவர்களாகவும், அதன் மாபெரும் நிறைவேற்றமாகவும் இருந்தார்கள்

இந்தத் தலைப்பு பற்றி நாம் விளக்கத் தொடங்குமுன், பொதுவாக அழகானது என்பது பற்றியும், அழகாயிருப்பது என்பதன் பல்வேறு வகைகளைப் பற்றியும் ஒரு கருத்தை உருவாக்குவது அவசியமாகும்.

நாம் ஒவ்வொருவரும் அறிந்துள்ளபடி அழகாயிருத்தல் என்பதற்கு எண்ணற்ற விளக்கங்கள் தரப்படுகின்றன. அது பல வகைகளில் வரையறுக்கப்படுகிறது. பிளேட்டோ அதை நன்மைத் தனத்தின் ஒளி என்று வரையறுத்தார். அரிஸ்டாட்டில், இன்பம் தரும் காரியம் என்றார். பிளேட்டோ தமது கருத்தைப் பின்வருமாறு விளக்கினார்: சத்தியத்திற்கு நிதர்சனத்தையும், இருத்தலையும் தருவதில் நன்மைத்தனம் அடங்கியிருக்கிறது, அழகாயிருத்தல் என்பது நன்மைத்தனத்தின் ஒளியில் அடங்கியிருக்க வேண்டும்; இவ்வாறு பிளேட்டோவின் கருத்துப்படி, பக்திக்குரியவையும், அரியவையுமான இலட்சணங்களைப் பெற்றுள்ள ஒரு சிருஷ்டியை நீங்கள் காண்கிறீர்கள். இந்த இலட்சணங்களின் தீவிரத்தின் காரணமாக, அவை உங்கள் கண்களை ஈர்க்கின்றன. இதன் காரணமாக, அவற்றின் ஒளியும் பிரகாசமும் கண்களைக் கூசச் செய்கிறது, அது உங்களில் அதிசய உணர்வையும், வியப்பையும் பிறப்பிக்கிறது. இதுதான் அழகாயிருத்தல் எனப்படுவது. 

அரிஸ்டாட்டிலும் அர்ச். தாமஸ் அக்குயினாஸும், இருத்தல், நல்லதாயிருத்தல், அழகாயிருத்தல் மூன்றும் ஒன்றுதான் என்று கூறியிருக் கிறார்கள்; இதன் காரணமாக, நிதர்சனத்தின் ஒழுங்கில், இருக்கிறது என்று சொல்வதும், நல்லது, அழகானது என்று சொல்வதும் ஒன்றுதான். ஆனால் இவற்றைக் கட்டுப்படுத்து பவையும், ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்துவதுமான வரம்புகளை வரையறுப்பதில், அவர்கள் தொடர்ந்து, இருத்தல் என்பது வெறுமனே, உயிரோடு இருத்தலைக் குறிக்கிறது; நன்மைத்தனம் என்பதற்கு ஏதாவது ஒரு சத்துவத்தின் மீதான ஆசையின் நோக்கமாக இருக்கிற ஓர் இருத்தல் என்பது பொருள்; அழகாயிருத்தல் என்பது பார்வையின் ஏதோ ஒரு சத்துவத்தின் நோக்கமாக இருக்கிறது. நல்ல வடிவழகும், கச்சிதமான அளவும் உள்ள காரியங்களில் மட்டுமே பார்வை இன்பம் காண்கிறது என்பதால் அழகாயிருத்தல் என்பது பொருத்தமான அளவுகளோடு இருத்தலில் அடங்கியுள்ளது. நவீன தத்துவவாதிகள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்திருக்கிறார்கள். நாம் அர்ச். அகுஸ் தினாரின் கருத்தைப் பின்பற்றுவோம். அதனுடன் பின்வருவதையும் இணைத்துக் கொள்வோம்: அழகாயிருத்தல் ஐக்கியத்தின் அளவுக்கு குறைக்கப்பட்ட பலதரப்பட்ட நிலைகளில் அடங்கியுள்ளது. இதுவே அழகாயிருத்தல் என்பதும் உண்மையான கருத்து என்பது பின்வரும் காரணங்களிலிருந்து தெளிவாகிறது:

பிளேட்டோவின் கருத்துப்படி, அழகாயிருப்பது பார்ப்பவரில் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் பிறப்பிக்கிறது -- (இது) தன் பலத்தைக் கொண்டு அடக்கியாளாத ஆச்சரியமும், பிரமிப்புமாக இருக்கிறது. ஆயினும் ஓர் உற்சாகமான இன்பத்தோடு கலந்திருக்கிற ஓர் ஆச்சரியத்தால் இது அடக்கப்படுகிறது. அர்ச். தாமஸ் அக்குயினாஸ் மற்றும் அரிஸ்டாட்டிலைப் பொறுத்த வரை, அழகாயிருப்பது ஒரு பெரும் இன்பத்தைத் தருவதாகவும் இருக்க வேண்டும். அழகாயிருப்பது நம்மில் உண்டாக்குகிற இந்த இரு விளைவுகளையும் ஏறக்குறைய எல்லா நாத்திகத் தத்துவவாதிகளும் ஒப்புக்கொள்கிறார்கள். இனி, இந்த இரு விளைவுகளும் பலதரப்பட்ட காரியங்களை உள்ளடக்கிய ஐக்கியத்தை விடச் சிறப்பான வேறு எதனாலும் உருவாக்கப்பட இயலாது. ஏனெனில் நம் ஆன்மா எளிமையானது, அது ஒன்றாகவும், அனைத்துமாகவும் இருக்கிறது. அதை மகிழ்விப்பதற்கு ஐக்கியத்தின் முத்திரை அவசியமாயிருக்கிறது. அது இல்லாமல் அது தனது சுபாவத்திற்கு வெறுப்புக்குரியதாக இருக்கும், அருவருப்பைப் பிறப்பிக்கும். மறுபுறத்தில், ஐக்கியத்தில் பன்முகத்தன்மை இல்லாமல் இருந்து, அது எளிய, வெறும் ஐக்கியமாக மட்டும் தன்னை ஆத்துமத்திற்கு வெளிப்படுத்தும் என்றால், அதுவும் அளவுக்கு மீறியதாகவும், அருவருப்பைப் பிறப்பிப்பதாகவும் இருக்கும். ஐக்கியமோ, பன்முகத்தன்மையோ இல்லாத எதுவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் எந்த ஒரு பந்தனமோ, ஐக்கியமோ இல்லாமல் ஒன்றாக சேர்த்துக் கட்டப் பட்ட குழப்பமான காரியங்கள் யாருக்கு என்ன ஆச்சரியத்தைத் தர முடியும்? ஆனால் மறு புறத்தில், எளியதும், எப்போதும் ஒரே விதமாகத் தோன்றுவதும், வேறெதையும் பற்றி சிந்திக்க விடாமல் செய்ய உதவாததுமான ஒரு காரியத்தைப் பற்றி யார் வியப்புக் கொள்ள முடியும்?

ஆனால் அழகாயிருத்தலைக் குறிப்பதற்கு, பன்முகத்தன்மையை உள்ளடக்கிய ஐக்கியம் போதாது. அழகாயிருத்தல் என்ற கூட்டமைப்பில் சேரும் பாகங்கள் அனைத்தும் எட்டப்பட வேண்டிய நோக்கத்தின்படி அமைக்கப்பட்ட ஒழுங்கின்படி தத்தமக்குரிய இடத்தில் பொருந்துவதும், ஒவ்வொரு பாகமும் ஒன்றோடொன்று ஒரு விதமான ஒட்டுறவுள்ளதாக இருப்பதும், பொருத்தமான அளவு என்று அழைக்கப்படும் நோக்கத்தோடு இசைந்திருப்பதும் அவசியமாகும்.

பன்முகத்தன்மை ஐக்கியத்தை மறைக்காத விதத்திலும், ஐக்கியம் பன்முகத்தன்மையை அழிக்காத விதத்திலும் பன்முகத் தன்மை யோடு ஐக்கியத்தை இணக்கமாக்குவது அழகாயிருத்தலைக் கொண்டிருப்பதாக இருக்கிறது.

அழகாயிருத்தலின் வெவ்வேறான அனைத்து வகைகளையும், முழுமையானது, இயற்கையானது மற்றும் செயற்கையானது என்ற மூன்று பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்; இரண்டாவதாக அவற்றை ஆன்ம ரீதியானது, சரீர ரீதியானது என்று சுருக்கிக் கூறி விடலாம்.

முழுமையான அழகுள்ளவராயிருப்பவர் கடவுளே; ஏனெனில் அர்ச். அகுஸ்தினார் சொல்வது போல, அழகு அனைத்தும் உன்னத அழகாகிய கடவுளிடமிருந்தே வருகின்றன. அவரில் உண்மை யாகவே அழகின் சகல அம்சங்களையும் நாம் காண்கிறோம். அவரது அழகு ஒழுங்கோடும், சரியான அளவுகளோடும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிற ஐக்கியமாக இருக்கிறது. ஏனெனில் கடவுளின் நித்திய ஜீவியம் எதில் அடங்கியிருக்கிறதோ, அந்த மாபெரும் பரம இரகசியத்தை நாம் கண்டுதியானிக்கும்போது, ஒரே சாராம்சத்திலும், ஒருவருக்கொருவர் வேறுபட்டிருக்கிற மூன்று தேவ ஆட்களிலும் அழகின் முழுமையான, உன்னதமான அம்சங்களை நாம் காண்கிறோம்; இவர்களில் முதலாயிருப்பவர் சுதந்திரமானவர், இரண்டாவதாயிருப்பவர் முதல்வரைச் சார்ந்திருப் பவர், மூன்றாமவர் இருவரிடமிருந்தும் புறப்படுகிறவர், இருவரையும் சார்ந்திருப்பவர். முதலாமவர் தமது தெய்வீக ஆளுமையில் தெய்வீகத்தின் அறிவின் பலத்தைக் குறிப்பவராக இருக்கிறார்; இரண்டாமவர் புரிந்துகொள்ளக் கூடியதாக தெய்வீகத்தை வெளிப்படுத்துகிறார், மூன்றாமவர் நேசிக்கப்படக் கூடியதாக தெய்வீகத்தைக் காட்டுகிறார். முதல்வரும், இரண்டா மவரும், மூன்றாமவரும், தங்களில் ஜீவிப்பவர்களாக இருந்தாலும், சாராம்சத்தின் ஐக்கியத்தின் காரணமாக ஒருவரில் ஒருவர் ஜீவிப் பவர்களாகவும், ஒரே ஜீவியத்தையும், வாக்குக்கெட்டாத ஒரே பேரின்பத்தையும் அனுபவித்துத் திளைப்பவர்களாக இருக் கிறார்கள்.

சிருஷ்டிக்கப்பட்ட அழகு என்பது சிருஷ்டிகளினுடையது. அது தனித்தனியாக, அல்லது கூட்டாக மதிக்கப்பட முடியும், அல்லது பிரபஞ்சம் என்று அழைக்கப்படும் ஒரு முழுமையை உருவாக்கு வதாகக் கருதலாம். அவற்றைத் தனித்தனியாக எடுத்துக் கொண் டால், அவற்றின் அழகு சாராம்சத்தின் ஐக்கியத்திலும், அவற்றின் சத்துவங்கள், செயல்கள் மற்றும் செயல்பாடுகளிலும் அடங்கியிருக்கிறது. இவை அனைத்தும் அததற்குரிய முறையான இடத்திலும் அளவிலும் இருப்பது அவசியம். இது சுபாவ அழகு என்று அழைக்கப்படலாம். இது சுபாவ வேறுபாட்டின்படி ஞான ரீதியானதாக, அல்லது சரீர ரீதியானதாக இருக்கலாம். தார்மீக அழகு என்பது ஒரு சிருஷ்டியின் சுதந்திரமான செயல்களை அவற்றின் முறையான தார்மீக நோக்கத்திற்குத் தக்கபடி அமைத்துக் கொள்ளுதல் ஆகும்.

சிருஷ்டிகளே பிரபஞ்சத்தின் பாகங்களாக இருக்கின்றன என்று நிலையில், அவை அனைத்தையும் எண்ணற்ற பன்முகத்தன்மையில் நாம் காண்கிறோம். ஒவ்வொன்றும் அதற்கேயுரிய முறையான ஒழுங்கோடு இருக்கிறது, அவை ஒன்றோடொன்றும், நோக்கத் தோடும் இணக்கமான அளவில் பொருந்துகின்றன. ஆனால் இந்த மிகப் பெரும் எண்ணிக்கையிலான வகைகளைக் கொண்ட சிருஷ்டிகள் அனைத்தையும் ஆளுகிற ஐக்கியம் பிரபஞ்சத்தில் காணப்பட முடியாது, மாறாக, அது பிரபஞ்சத்திற்கு வெளியிலும், அதற்கு அப்பாலும் தேடப்படவேண்டும். சிருஷ்டிகளின் ஒரு கூட்டுப் பன்முகத்தன்மையில், ஐக்கியம் சடத்தன்மையில் காணப் பட முடியாது, மாறாக அது ஞானத் தன்மையுள்ளதாக இருக்க வேண்டும். ஒரே வார்த்தையில் கூறுவதானால், சிருஷ்டிகளின் இந்த மிகப் பெரும் எண்ணிக்கையிலான வகைகள் தங்களுக்குள் ஐக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டும், பிரபஞ்சத்தில் சிருஷ்டிகரின் அளவற்ற உத்தமதனமாக இருக்கிற ஒரு கருத்தை அவை பிரதிபலிக்கவும், அதை நிதர்சனமாக்கவும் வேண்டும்.

செயற்கையான அழகு, அல்லது, சிலரால் அழைக்கப்படுவது போல பிளாஸ்டிக் அழகு என்பதும் அதேதான். அது தங்கள் முறையான இடங்களில் வைக்கப்பட்டுள்ளவையும், ஒன்றோ டொன்று பொருந்துபவையும், இவ்வாறு அனைத்தும் சேர்ந்து ஒரு கருத்தைக் குறித்துக் காட்டுபவையுமான பாகங்களின் பன்முகத் தன்மையில் அடங்கியுள்ளது.

இனி, மாமரி, அழகாயிருத்தல் என்பதை நிறைவாக்கும் அனைத்திலும் பெரிய தகுதியைக் கொண்டிருந்தார்கள் என்பது முந்திய மூன்று அத்தியாயங்களில் நாம் தியானித்த காரியங்களி லிருந்து தெளிவாகிறது. உயர்விலும், ஆழத்திலும், பரப்பிலும் விரைவிலும் சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஆளுமையையும் விட மேலான ஓர் அறிவும், மிகுந்த புரிந்துகொள்ளும் ஆற்றல் நிரம்பிய ஒரு சித்தமும் அவர்களுக்குத் தரப்பட்டிருந்தன. அனைத்திலும் அதிக பலமானதும், மிக மென்மையானதும், அற்புதமானதுமான அச்சில் உருவாக்கப்பட்ட ஒரு சரீரமும், கூர்மையான, உத்தமமான உணரும் திறனும் அவர்களுக்குத் தரப்பட்டிருந்தன. ஆகவே, ஒவ்வொரு ஒழுங்கிலும் அழகாயிருத்தல் என்பதை மதித்து, அதை நிறைவுள்ளதாக்கக் கூடிய, முடிந்த வரை மிகப் பெரிய சுபாவமான தகுதியை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பது விளங்குகிறது. மேலும், அவர்கள் தனது இருத்தலில் அனைவரிலும் மிக மேலான கலைஞராகவும் இருந்தார்கள், உண்மையில் அவர்கள் சுபாவத்திற்கு மேலான கலைஞராக இருந்தாலும், தனது சுபாவமான தகுதியையும், பண்பையும் அவர்கள் இழந்து விடவில்லை. 

இவை அழகின் அனைத்திலும் மிக உயர்ந்த பிளாஸ்டிக் வேலையாகிய கிறீஸ்து நாதரைக் கருத்தரிக்க அவர்களுக்கு உதவின. இவரோ தம்மில் அளவற்றதும், அளவுக்கு உட்பட்டதுமான அழகையும், சிருஷ்டிக்கப்பட்டதும், சிருஷ்டிக்கப்படாததுமாகிய வனப்பையும் நிறைவுறச் செய்தார், அவற்றை முற்றிலும் இணக்கமுள்ள ஐக்கிய நிலைக்குக் கொண்டு வந்தார். ஏனெனில் தமது மனித சுபாவத்தில் சகல மனித வனப்பையும் அவர் தம்மில் ஒருசேரப் பெற்றிருந்தார். தமது தேவ சுபாவத்தில் அவர் முழுமையான அளவற்ற வசீகரத்தையும், அழகையும் தம்முள் கொண்டிருந்தார். தமது ஒரே ஒரு தெய்வீக ஆளின் பந்தனத்திலும், ஐக்கியத்திலும், முத்தத்திலும் அவற்றை ஒன்றுசேர்த்து, அவற்றை ஒன்றோடொன்று இணக்க மானவையாக ஆக்கினார்.

அதியற்புதக் கன்னிகையாகிய மாமரி தனது மாசற்ற முத்திரை யிடப்பட்ட தோட்டத்தில் (தனது திருவுதரத்தில்) செய்தது போல, ஒவ்வொரு ஒழுங்கிலும் சாத்தியமான அளவுக்கு பூரண வனப்பையும் அழகையும் தன்னுள் அடக்கியதும், முழுமையானதும், ஒப்பற்றதும், சிருஷ்டிக்கப்பட்டதும், செயற்கை அழகுள்ளதுமாகிய இந்த மாபெரும் கலைப் படைப்பைக் கருத்தரித்துப் பெற்றெடுக்கக் கூடிய வேறு ஒரு கலைஞன் உலகில் எப்போதாவது இருந்ததுண்டா? மாமரிக்கு முன்னால் ஃப்ரா ஆஞ்சலிக்கோவும், மைக்கிள் ஆஞ்சலோவும், ரஃபேலும் எவ்வளவு பரிதாபமான கலைஞர்களாக இருக்கிறார்கள்!