இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரிக்குப் பொருத்திக் காட்டுதல்

அத்தியாயம் 3

மாமரிக்குப் பொருத்திக் காட்டுதல்

சுபாவத்திற்கு மேலான உலகத்தை அதன் சாராம்சத்திலும், சத்துவங்களிலும், சாதாரண, மற்றும் அசாதாரணச் செயல்களிலும் நாம் முந்தின அத்தியாயத்தில் சற்று விளக்கிக் காட்டியிருக்கிறோம். இனி வரும் காரியங்கள் வாசகர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக இதைச் செய்திருக்கிறோம்; ஏனெனில், நம் கருத்துப்படி, மாமரிக்கு வழங்கப்பட்டிருந்த வரப்பிரசாதங்களை வாசகர்கள் புரிந்து கொள்ளும்படி செய்யாமல், மாமரிக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்கள் என்னென்ன என்று மட்டும் சொல்வது வாசகர்களுக்கு நிச்சயமாகப் போதாததாகவே இருக்கும். இனி, மாமரியின் பக்திக்குரிய மாபெரும் மகத்துவத்திற்கு அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கும்படி அவர்கள் மீது பொழியப் பட்ட இந்த வரப்பிரசாதங்கள் என்னென்ன என்பதை நாம் விளக்கப் போகிறோம்.

பிரிவு 1

மாமரியின் அமல உற்பவத்தின் முதல் கணத்திலேயே-- அதாவது, அவர்களது வாழ்வின் முதல் கணத்திலேயே—சுபாவத்திற்கு மேலான உலகத்தை உருவாக்குகிற வரப்பிரசாதங்களின் ஓட்டுமொத்த வகைகளும் அவர்கள் மீது பொழியப்பட்டன-- அதாவது, சுபாவத்திற்கு மேலானதின் சாராம்சமும், அர்ச்சிப்பு எதில் அடங்கியுள்ளதோ, அந்த விசுவாசமும், நம்பிக்கையும், தேவசிநேக மும், இஸ்பிரீத்துசாந்துவின் சகல கொடைகளும், சற்றுமுன் விளக்கப் பட்ட அசாதாரணச் செயல்களும் அவர்கள் மீது பொழியப்பட்டன --சகல சம்மனசுக்களும், மனிதர்களும் தங்கள் உத்தமதனத்தின் சிகரத்திற்கு வந்தடைந்தபோது அவர்கள் அனைவரும் ஒருசேர கொண்டிருந்த எல்லா வரங்களும் பாரதூரமான வகையில் மிக அதிகமான அளவில் மாமரியின் உற்பவத்திலேயே அவர்கள் மீது பொழியப்பட்டன. 

இந்த நம்முடைய அறிக்கையைத் திருச்சபைத் தந்தையரிட மிருந்தும், வேதபாரகர்களிடமிருந்தும் எடுக்கப்பட்ட பல்வேறு வாதங்களைக் கொண்டு எண்பிக்க நாம் முயற்சி செய்வோம். முதலாவதாக, மாமரியின் ஈடிணையற்ற மகத்துவத்திற்கு அவர்கள் தகுதி பெறும்படி அவர்களுக்கு முற்றிலுமாகத் தேவைப்பட்ட வரப் பிரசாதத்தின் மிகுதியே இதைப் போதுமான அளவுக்கு எண்பிக் கிறது. 

இத்தகைய வரப்பிரசாதத்தின் மேன்மை மற்ற சிருஷ்டிகளுடனான ஒப்புமையால் அல்லாமல், அந்த மகத்துவத்துடனான ஒப்புமையால் அளவிடப்பட வேண்டும்.

இனி, திருச்சபைத் தந்தையர்களும், வேதபாரகர்களுமாகிய அனைவரின் கருத்துப்படியும், இந்த மகத்துவம் அளவற்றதாக இருக்கிறது. ஏனெனில் ஒரு சிருஷ்டியின் செயல், நித்தியத்திலிருந்து ஓர் அளவற்ற வல்லமையால் கருத்தரிக்கப்படுகிற அதே ஆளில் முடிவடையும்படியாகவும், அவரைத் தன் விளைவாகக் கொண் டிருக்கும்படியாகவும், அது அளவற்ற பக்திக்குரிய தன்மைக்கும், ஆற்றலுக்கும், வல்லமைக்கும், மகத்துவத்திற்கும் உயர்த்தப்பட வேண்டியதாக இருக்கிறது. இது அந்த அளவற்ற வல்லமைக்கு சுபாவமானதாக இருக்கும் அதே வேளையில், ஒரு சிருஷ்டிக்கு அப்படி இல்லாதிருக்கிறது. அர்ச். சியென்னா பெர்னார்தீன் சொல்கிறபடி, இத்தகைய ஒரு செயலுக்கு இத்தகைய ஒரு சிருஷ்டி யைத் தகுதியுள்ளதாக ஆக்குவதற்கு, அந்தப் பெண் கிட்டத்தட்ட தெய்வீகத்திற்குச் சமமாயிருக்கும் ஒரு நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும், வேறு எந்த சிருஷ்டிக்கும் ஒருபோதும் தந்தருளப்படாத வகையில் ஓர் அளவற்ற தன்மையாலும், பிரமாண்டமான உத்தம தனத்தாலும் இது செய்யப்பட வேண்டும்.

ஆகவே, மாமரியின் மகத்துவத்திற்கு அவர்களைத் தகுதி யுள்ளவர்களாக ஆக்குவதற்கு அவசியமான வரப்பிரசாதம் எந்த அளவுக்கு மிகப் பிரமாண்டமானதாக இருந்தது என்றால், அது படிப் படியாக அவர்களுக்குத் தரப்பட்டு வந்தது என்று வைத்துக் கொண்டால், அவர்களது இருத்தலின் முதல் விடியற்காலத்தில் அவர்களுக்குத் தரப்பட்ட முதல் தவணை வரப்பிரசாதமும் கூட, சகல சம்மனசுக்களும், புனிதர்களும் தங்கள் உத்தமதனத்தின் சிகரத்திற்கு வந்து சேர்ந்தபோது பெற்றிருந்த வரப்பிரசாதங்களின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகைக்கு வெகுவாக அப்பாற்பட்டதாக இருந்தது.

அர்ச். தாமஸ் அக்குயினாஸ் மற்றொரு காரணத்தைத் தருகிறார்: ஏதாவது ஒன்று எவ்வளவு அதிகமாக ஒரு வகையான காரணியை அல்லது காரணத்தை நெருங்கி வருகிறதோ, அந்த அளவுக்கு அது அந்தக் காரணத்தின் அல்லது காரணியின் செயலிலும், விளைவிலும், அதன் செல்வாக்கிலும் பங்குபெறுகிறது. இவ்வாறு, நாம் சூடாயிருக்கும் ஒரு பொருளை எவ்வளவு நெருங்கி வருகிறோமோ, அவ்வளவு அதிகமாக அது தனது வெப்பத்தைத் தன்னைச் சுற்றிலும் பரப்புவதை உணர்கிறோம். இந்தக் கொள்கை யின் அடிப்படையில், சம்மனசுக்கள் பூரண உத்தமதனத்தின் ஊற்றாகிய கடவுளுக்கு அதிக நெருக்கமானவர்களாக இருப்பதால், அவர்கள் மனிதர்களை விட அதிகமாக அவருடைய அளவற்ற நன்மைத்தனத்தில் பங்குபெறுகிறார்கள் என்ற முடிவுக்கு அர்ச். டெனிஸ் வருகிறார்.

இனி, சேசுக்கிறீஸ்துநாதர் தமது மனுஷீகமாகிய கருவியைப் பயன்படுத்தி, கடவுள் என்ற முறையில் அதிகாரபூர்வமான முறையில் வரப்பிரசாதத்தின் காரணராக இருக்கிறார்; எனவே, அவருக்குக் கூடக்குறைய அருகில் இருப்பவர்கள் யாராயினும், அவர்கள் அவரது வரப்பிரசாத நிறைவில் கூடக்குறைய பங்குபெறுகிறார்கள். இனி, அவருக்குத் தாயாராக இருக்கும்படி தேர்ந்துகொள்ளப்பட்ட பக்திக்குரிய அந்த சிருஷ்டியை விட வேறு யார் தனது உற்பவத்தின் முதல் கணத்திலிருந்தே அவருக்கு அதிக நெருக்கமாக இருந்திருக்க முடியும்? மாமரியை விட வேறு யார் சேசுநாதரோடு அதிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்க முடியும்? எனவே, வேறு யாரையும் விட, அல்லது ஒட்டுமொத்த சிருஷ்டிப்பையும் விட அதிகமாக, அவர்களே அவரது வரப்பிரசாத நிறைவில் பங்கடைந்தார்கள்.

அர்ச். பெர்னார்ட் மற்றொரு காரணத்தைத் தருகிறார்: கடவுள் நம்மீது கொண்ட நேசமே ஒவ்வொரு வரப்பிரசாதத்திற்கும் காரணமாக இருக்கிறது. இனி, நேசம் தனது சாராம்சத்தின்படி பரவக் கூடியதாக இருக்கிறது -- அதாவது, நாம் ஓர் ஆளை நேசித்து, அவர்மீது பிரியமாயிருக்கும்போது, அனைத்திலும் மேலான உத்தமதனத்தை அவர்மீது பொழிய நம்மால் முடியும் என்றால், அதை நாம் உடனே செய்வோம்; ஏனெனில் நேசிப்பது என்பது நேசிக்கப்படுபவருக்கு நல்லதையே நினைப்பதாகும். நம் நேசத்தைப் போலன்றி கடவுளில் நேசம் பல சந்தர்ப்பங்களில் மலடாகவும் பலனற்றதாகவும் இருப்பதில்லை; அது சிருஷ்டிக்கும் தன்மை யுள்ளதாக இருக்கிறது. ஆகவே கடவுளைப் பொறுத்த வரை நேசிப்பது என்பது கொடுப்பதும், வரப்பிரசாதத்தைப் பொழிவதும், உத்தமதனங்களை எங்கும் பகிர்ந்தளிப்பதும், அழகாக்குவதும், தமது நேசத்தின் தீவிரத்தின் அளவுக்கேற்ப அப்படிச் செய்வதுமாக இருக்கிறது. இனி, மாமரியின் இருத்தலின் விடியற்காலையில் கடவுள் மாமரியை நேசித்தார், ஒட்டுமொத்த சிருஷ்டிகளையும் விட அதிகமாக அவர்களை நேசித்தார். ஏனெனில் தமது எதிர்காலத் தாயாராக அவர் அவர்களை நேசித்தார். இதன் காரணமாக, அவர் அவர்களைத் தமது வரப்பிரசாதத்தினால், சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொரு மற்றும் அனைத்து அழகையும் விட மதிக அழகுள்ளவர் களாக ஆக்கினார்.

இறுதியாக மாமரி, தனது இருத்தலின் முதல் கணத்தில் எதிர் காலத்தில் கடவுளோடு ஒத்துழைப்பவர்களாக, அதாவது சகல வரப் பிரசாதங்களுடையவும் இரண்டாந்தரக் காரணியாக, இருந்தார்கள். அல்லது, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடவுளை நேசிக்க எந்த ஒரு சிருஷ்டிக்கும் உதவுகிற இரண்டாந்தர வழியாக இருந்தார்கள். எனவே, அந்தக் கணத்தில், மொத்தமாக, மற்ற அனைத்து சிருஷ்டிகளின் பேறுபலனுள்ள வாழ்வில் எந்த ஒரு கால கட்டத்திலும், அல்லது அவர்களது வாழ்வின் கடைசிக் கட்டத் திலும் அவர்கள் கடவுளை மகிழ்வித்ததை விட அதிகமாக மாமரி அவரை மகிழ்வித்திருக்க வேண்டும். ஏனெனில் இதில்தான் மத்தியஸ்தியின் அலுவல் அடங்கியிருக்கிறது: இந்த மத்தியஸ்தத்திலிருந்து பலன் பெற இருக்கும் அனைவரையும் விட கடவுளுக்கு அதிகம் உகந்தவர்களாக இருப்பது. இந்த சிருஷ்டி கடவுளுக்கு மிக உகந்தவர்களாக இருந்தார்கள் என்பதன் பொருள், யாருக்காக இந்த மத்தியஸ்தம் செயல்படுத்தப்பட்டதோ, அவர்கள் அனைவரையும் விட அதிகமான வரப்பிரசாதமும், புண்ணியமும், உத்தமதனமும் அவர்கள் மீது பொழியப்பட்டிருந்தன என்பதாகும். எனவே, கடவுள் அவர்களை அதிகமாக நேசித்து, தமது வரப்பிரசாதத்தால் மற்ற யாரையும் விட அவர்களை அதிக அழகுள்ளவர்களாக்கினார்.