இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சுபாவக் கொடைகள்

மாமரியின் முதலாவது சுபாவ இலட்சணம் அவர்களது திருச் சரீரமாகும். அது முற்றிலும் உத்தமமானதும், உன்னதமானதுமாகிய அச்சில், தன் எல்லா பாகங்களிலும், உறுப்புகளிலும், தனது முழுமையிலும், மிகுந்த வசீகர அழகுள்ள ஒரு சித்திரத்தைப் போல பூரணப் பேரழகோடு வார்த்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. இதற்குத் திருச்சபையின் வேதபாரகர்கள் தரும் காரணங்கள் பின்வரு மாறு: 

அர்ச். பெரிய ஆல்பெர்ட்: ‘‘கடவுள் தமக்கென சுபாவத்திற்கு மேலான முறையில் உருவாக்கிய கிறீஸ்துநாதரின் திருச்சரீரம் இவ்வாழ்வில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிக உத்தம மாகவும், அழகாகவும் இருந்தது போலவே, இதற்காகவே நியமம் செய்யப்பட்டிருந்த திவ்ய கன்னிகையின் திருச்சரீரமும் கற்பனைக் கெட்டாத பேரழகுள்ளதாக இருந்தது.''

கர்த்தூசியரான தியோனிசியுஸ்: ‘‘கிறீஸ்துநாதரின் மனுஷீகம், தேவ- மனித ஒன்றிப்பின் காரணமாக, சுபாவம் மற்றும் வரப் பிரசாதத்தின் ஒவ்வொரு இலட்சணத்தைக் கொண்டும் அதியற்புதமான முறையில் அலங்கரிக்கப்பட வேண்டியதாக இருந்தது போலவே, அவரது திருத்தாயாரின் ஆளுமையும் அதே போன்ற எல்லாக் காரியங்களாலும் நிரப்பப்பட வேண்டியது அவசியமாயிருந்தது. ஏனெனில் தேவ-மனித ஒன்றிப்புக்கு அடுத்ததாக, தேவ தாயார் தமது திவ்ய பாலனோடு நெருங்கி யிருந்தது போல, கடவுளோடு நெருங்கியிருந்த வேறு எந்த ஐக்கியமும் இல்லை. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆதாமின் சரீரத்தின் வடிவமைப்பை நாம் நினைவுகூரலாம். கடவுள் மண்ணால் அதிகபட்சமான அக்கறையோடு அதை உருவாக்கினார். ஏனெனில் அவர் ஆதாமுக்குப் பின் நாற்பது நூற்றாண்டுகளுக்குப் பின் பிறக்க இருந்த தமது திருச்சுதனாகிய கிறீஸ்துவைத் தம் மனதில் கொண்டிருந்தார்.''

தெர்த்துல்லியன் இந்தக் கருத்தை மிகுந்த அழகோடும் நளினத் தோடும் எடுத்துரைக்கிறார்:

‘முழுத் தெய்வீகமும் ஆதாமின் சரீரத்தைத் தமது கையாலும், உணர்வாலும், செயல்பாட்டாலும், விமரிசையாலும், பராமரிப் பாலும், எல்லாவற்றிற்கும் மேலாக பாசமுள்ள ஏக்கத்தோடும் ஆக்கிரமிப்பதை தியானியுங்கள். இவற்றில் தேவசிநேகமே அவனது முகக்கூறுகளை உருவாக்கியது. ஆனால் மண்ணைக் கொண்டு கடவுள் அந்த உடலில் எதை வெளிப்படுத்தினாலும், அவர் கிறீஸ்துநாதரை, அவருடைய திருச்சரீரத்தைப் பற்றிச் சிந்தித்தபடியே அதைச் செய்தார்.''

ஆகவே, ஆதாமின் சரீரத்தை உருவாக்கப் பயன்பட்ட அந்த மண்ணுக்குப் பளபளப்புத் தந்தது நேசமே. அந்த சரீரம் மிக அதிக மான ஞானத்தோடும், விமரிசையோடும், பராமரிப்போடும் உருவாக்கப்பட்டது. ஏனெனில், நூற்றாண்டுகளின் ஒரு நீண்ட வரிசைக்குப் பின்னும், பல தலைமுறைகளுக்குப் பின்னும் கிறீஸ்துநாதரின் திருச்சரீரம் அதிலிருந்து எடுக்கப்பட வேண்டி யிருந்தது. 

அப்படியிருக்க, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகோ, பல தலை முறைகளுக்குப் பிறகோ அன்றி, நேரடியாகவும், உடனடியாகவும் கிறீஸ்துவின் திருச்சரீரத்திற்கான பருப்பொருளைத் தரவும், அவருடைய உண்மையான, நிஜமான தாயாராக இருக்கவும் வேண்டியவர்களாக இருந்த திவ்ய கன்னிமாமரியின் திருச்சரீரத்தை உருவாக்குவதில் கடவுள் எப்பேர்ப்பட்ட அக்கறை எடுத்திருப்பார் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! தெய்வீகம் முழுவதும் பெரும் விமரிசையோடும், ஞானத்தோடும், பாசத்தோடும் அந்த அற்புதத் திருச்சரீரத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தது.

இங்கே, அந்தத் திருச்சரீரத்தை எந்தக் குறைபாடுமற்றதாகவும், உத்தமமானதாகவும் உருவாக்கத் தேவைப்பட்ட காரியத்தைப் பற்றிக் குறிப்பாக நாம் சிந்திப்போம்:

1. குறைபாடுகள் மற்றும் உடல் ஊனத்தை அல்லது நோயை வருவிக்கக் கூடிய காரியங்கள் ஆகியவற்றை விலக்குவது மட்டு மின்றி, ஒவ்வொரு உறுப்பும் முற்றிலும் உத்தமமான முறைப்படி உருவாக்கப்பட வேண்டியது அவசியமாயிருந்தது.

2. ஒரு மிக உத்தமமான, அற்புதமான, கனகச்சிதமான அழகையும், வடிவத்தையும், தோற்றத்தையும் உருவாக்கும்படி ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளோடு மிகச் சரியான அளவு களில் பொருந்தியிருப்பது அவசியமாயிருந்தது.

3. மனுக்குலத்தில் சிதறலாகக் காணப்படுகிற பல வகையான பண்புகள் அனைத்தும் தாங்கள் விளைவிக்கிற சுபாவமான புண்ணியங்கள் அனைத்திற்கும் உதவும்படி, அந்தப் பண்புகள் அனைத்தும் மாமரியில் மிகவும் சமச்சீரான அளவில் ஒன்றாகக் கலந்திருக்க வேண்டியிருந்தது.

4. இதெல்லாவற்றினுடையவும் உத்தமதனம், அதாவது மாமரியின் திருச்சரீரத்தின் உறுப்புகள் மற்றும் ஒவ்வொரு பாகத்தின் உத்தமமான தன்மையும், முழுச் சரீரத்தின் உத்தமமான தன்மையும், இவற்றின் விளைவாகத் தோன்றும் வடிவழகும் அவசியமாக இருந்தது. மேலும் மனநிலையின் உத்தமதனமும் அவசியமாக இருந்தது. அது எந்த மனித ஆளுமையோடும் ஒப்பிடப்படுவதன் மூலம் கணக்கிடப்படவோ, அளவிடப்படவோ கூடாது, ஏனெனில் அதே பாலினத்தைச் சேர்ந்த எந்த ஒரு பெண்ணிலும் வியந்து பாராட்டப்பட்ட மனித ஆளுமையின் அழகெல்லாவற்றையும் அது கொண்டிருக்க வேண்டும், ஆனால் அது எந்த நிலைக்கு உயர்த்தப்பட இருந்ததோ, அந்த உன்னத மகத்துவத்தோடும், அது செய்ய இருந்த பக்திக்குரிய அலுவலோடும் ஒப்பிடுவதன் மூலம் அதை நாம் தியானிக்க வேண்டும். ஏனெனில் அது வேறு யாரையும் விட அதியற்புதமான முறையிலும், அதிக அபரிமிதமான அளவிலும் மேலானதாக இருக்கிற ஓர் ஆன்மாவோடு இணைவதற்கு நியமிக்கப்பட்டதாகவும், இந்தத் திருச்சரீரமும், ஆன்மாவும் தெய்வீகத் தாய்மைக்கென நியமிக்கப்பட்டவையாகவும் இருந்தன.

5. இங்கு மாமரியின் திருச்சரீரத்தில், சுபாவமான காரணங் களின் விளைவாக இல்லாமல், மரியாயின் ஆத்துமத்தை நிரப்பிய பக்திக்குரியதும், வாக்குக்கெட்டாததுமான வரப்பிரசாதத்தின் விளைவாக இருக்கிற மற்ற பண்புகளையும் நாம் சேர்த்துக் கொள் வோம். மாமரியின் வரப்பிரசாதத்தைப் பற்றி நாம் பேசிய பிறகு இந்தப் பண்புகளைப் பற்றிப் பேசுவதே சரியானதாக இருக்கும். என்றாலும், மாமரியின் திருச்சரீரத்தைப் பற்றிப் பேச மேற்கொண்டு நமக்குக் காரணமேதும் இருக்காது என்பதாலும், இந்தப் பண்புகள் முக்கியமாக சர்வேசுரனுடைய அந்த மாசற்ற திருப்பேழை தொடர் பானவையாக இருப்பதாலும், இங்கே நாம் அவற்றைப் பற்றிப் பேசுவோம்.

மாமரியின் வரப்பிரசாதத்தில் எந்த விதத்திலும் கணக்கிடப்பட இயலாதது. இனி, இத்தகைய மிகப் பெரும் வரப்பிரசாதம் அவர்களது ஆத்துமத்தை அர்ச்சித்தது மட்டுமின்றி, அது அவர்களது திருச்சரீரத்திலும் உணரப்பட்டிருக்க வேண்டும். அது அந்தத் திருச் சரீரத்தின் மீது பொங்கி வழிந்து, சுபாவமாக அது கொண்டிராத பண்புகளை அதற்குத் தந்திருக்க வேண்டும். மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்கள் கொண்டுள்ள நான்கு குணங்களாக இவற்றைச் சுருக்கலாம், ஏனெனில் இன்னும் ஆசீர்வதிக்கப்படாத (மோட்ச பாக்கியத்தை அடையாத), ஆனால் அதற்கான ஆயத்த காலத்தில் இருக்கிற ஒருவரில் இருப்பதாக நாம் நம்ப முடியும்; இவை அட்சயம், இலகு, சூட்சம், ஒளி ஆகியவை ஆகும். அட்சயம் என்பது, மகிமைப்படுத்தப் பட்ட சரீரத்தில் சாகாமையையும், அழியாமையையும் குறிக்கிறது. இவ்வுலகில் வாழும் எந்த மனிதனுக்கும் இது பொருந்தாது. தேவ- மனித ஒன்றிப்பின் காரணமாக, இது நம் ஆண்டவருக்கு மட்டும் சொந்தமானதாக இருந்தது. இது அவசியமான முறையில் மோட்சத் தின் தேவ காட்சியையும் குறித்துக் காட்டியது. ஆனால் இந்த குணம் சரீர அழுகலிலிருந்து விலக்கப்படுதல், அதன் மூலம் சரீரத்திற்கு அதன் ஆரோக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட மாறாத தன்மை தரப் படுதல் என்று பொருள் கொள்ளப்படும்போது, அதை இன்னும் ஆயத்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் பொருத்திக் கூறப்படலாம்.

இலகு என்பது சரீர எடையிலிருந்து முற்றிலுமாக விடுபட் டிருத்தல், அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புவி ஈர்ப்பு விதியிலிருந்து விடுபட்டிருத்தல் என்று பொருள்படும். இந்தப் பொருளில் இதை மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களுக்கு மட்டுமே நாம் பொருத்திக் கூற முடியும். இவ்வாழ்வில் இது நம் ஆண்டவருக்கு மட்டும், அதே தேவ மனித ஒன்றிப்பின் காரணமாக, சொந்தமாக இருந்தது.

ஆனால் மற்ற வழிகளிடையே (உதாரணமாக, திவ்ய நற்கருணை), தேவ இஷ்டப்பிரசாதத்தால் அந்தச் சலுகை சரீரத்தில் வைக்கப்படும்போது, தேவ இஷ்டப்பிரசாத நிறைவின் காரணமாக, ஒரு புனிதரின் சரீரத்தில் புவி ஈர்ப்பு விதி தற்காலிகமாகவும், அவ்வப் போதும் நிறத்தி வைக்கப்படுவது சாத்தியமாகிறது. பூமியிலிருந்து விடுபட்டு அந்தரத்தில் மிதத்தல் மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்திற்கு மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. ஆனால் தேவ இஷ்டப்பிரசாதத் தால் நிறைந்திருக்கிற ஒருவரில் தற்காலிகமாக, அல்லது அவ்வப் போது, இது சாத்தியமாகலாம்.

பிரகாசம், அல்லது மகிமைப் பிரதாபம், அல்லது மகிமைப் படுத்தப்பட்ட சரீரத்திலிருந்து வெளிப்படும் ஒளி தேவ காட்சியின் ஒரு பிரதிபலிப்பாகவும், ஒரு கசிவாகவும், ஒரு புறப் பொழிவாகவும் இருக்கிறது. பரலோகததில் தேவ காட்சியை அனுபவிப்பவர்கள் மட்டுமே அதன் முழுமையிலும் உத்தமதனத்திலும் அதை அனுபவிக்கிறார்கள் என்று சொல்லப்பட வேண்டும். ஆனால் தேவ இஷ்டப்பிரசாதம் தேவ காட்சியின் வித்தாக இருப்பதால், அது ஓர் ஆத்துமத்தில் தனது முழுமையான அளவில் இருக்கும்போது, அது தன்னையே அந்த சரீரத்தில் பொழிந்து, அதைப் மகிமைப் பிரகாச முள்ளதாக ஆக்க வேண்டும். தேவ இஷ்டப்பிரசாதத்தின் அளவு எவ்வளவு அதிகமாயிருக்குமோ, அவ்வளவுக்கு சரீரத்தின் பிரகாசமும் அதிகமாயிருக்கும்.

இந்தத் தலைப்பில் நாம் ஒளிப் பிரகாசத்தோடு தொடர்புள்ள இனிய வாசனை போன்ற வேறு பண்புகளையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அர்ச்சியசிஷ்டவரின் சரீரத்திலிருந்து அடிக்கடி இந்த இனிய நறுமணம் வருகிறது. நாம் குறிப்பிட்டுள்ளபடி, நமதாண்டவரின் திருச்சரீரத்திற்கு மட்டுமே அவரது இவ்வாழ்வில் இந்தப் பண்புகள் அவற்றின் முழு அளவில் தரப்பட்டிருந்தது. ஏனெனில் நம் ஆண்டவர் தேவ காட்சியை அனுபவித்து வந்தார்; சர்வ வல்லபரின் ஒரு தொடர்ச்சியான புதுமையினாலேயே நமதாண்டவர் மற்ற மனிதர்களைப் போல காட்சியளித்தார்; அவரது சரீரம் மகிமைப்படுத்தப்படாத ஒன்றைப் போல, மற்ற சரீரங்களின் எல்லா நிபந்தனைகளுக்கும் உள்ளாகியிருந்தது. அவரது திருப்பாடு களின் போது இந்த சர்வ வல்லபத்தின் புதுமை அதன் உச்சக் கட்டத்தை அடைந்தது; நமதாண்டவர் கடல் மீது நடந்தது, தமது அப்போஸ்தலர்களுக்கு முன்பாக மறுரூபமானது போன்ற சந்தர்ப்பங் களில் மட்டும் இந்தப் புதுமை சற்று நேரம் விலக்கிக் கொள்ளப் பட்டது.

திவ்ய கன்னிகை இவ்வுலக வாழ்வில் தேவ காட்சியை அனுபவிக்கவில்லை, குறைந்தபட்சம் தொடர்ச்சியாகவாவது அவர்கள் அதை அனுபவிக்கவில்லை. அவர்களுடைய திருச்சரீரம் மகிமைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தின் நான்கு குணங்களையும் அவற்றின் முழுமையில் மாமரி தன்னிடம் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஒரு சிருஷ்டியால் அனுபவிக்க இயலாத அதிகமான வரப்பிரசாதம் அவர்கள் மீது பொழியப்பட்டிருந்தது, இது சாதாரண சிருஷ்டிகளுக்குக் கடவுள் தராத ஒன்றாக இருந்தது என்பதால், இந்த நான்கு குணங்களையும் ஒரு சலுகை பெற்ற சிருஷ்டி எவ்வளவு அதிகமாக இவ்வுலக வாழ்வில் கொண்டிருக்க முடியுமோ அந்த அளவுக்கு மாமரியின் சரீரம் தன்னில் கொண்டிருந்தது என்பது தெளிவு. எந்த ஓர் அர்ச்சிய சிஷ்டவரும் தனியாக, அல்லது எல்லா அர்ச்சியசிஷ்டவர்களும் ஒன்றுசேர்ந்து, கொண்டிருந்திருக்கக் கூடிய அளவுக்கு மிகவும் அதிகமான, பாரதூரமான அளவில் மாமரியின் திருச்சரீரம் இவற்றைக் கொண்டிருந்தது. இவை மரியாயின் திருச்சரீரத்தில் எவ்வளவு அதிகமாக இருந்திருக்க வேண்டுமென்றால், இவை அவர்களுடைய சரீரத்தில் பிறர் காணும் விதத்தில் வெளிப் படாதபடி மறைத்துக் கொள்வது உண்மையில் சர்வ வல்லபத்தின் ஒரு பெரும் புதுமையாகவே இருந்தது. மாமரியிடம் ஒப்படைக்கப் பட்டிருந்த பணியை அவர்கள் நிறைவேற்ற இவை தடையாயிராத படி இந்தப் புதுமை அவசியமாயிருந்தது. மாமரி நம் ஆண்டவரோடு சேர்ந்து துன்பப்பட வேண்டியிருந்தது. அவர்களது ஆத்துமம் பூரண பரிசுத்ததனம் உள்ளதாக இருந்ததால், இந்தப் புதுமையாலன்றி அவர்களது ஆத்துமம் வேதனையையும், துக்க துயரத்தையும் அனுபவிக்க இயலாததாகவே இருந்திருக்கும். (இதே காரியத்திற்காக நமதாண்டவரின் ஆத்துமத்திற்கும் இந்தப் புதுமை தேவையா யிருந்தது.)

அவர்களது திருச்சரீரத்திலிருந்து பிரகாசித்த ஒளியும் கூட பிற மனிதர்களின் பார்வையிலிருந்து தடை செய்யப்பட்டதாகவே இருந்திருக்க வேண்டும். இல்லாவிடில், மற்றொரு சூரியனைப் போல அவர்களைக் கண்டவர்கள் அனைவரின் கண்களையும் அது கூசச் செய்திருக்கும். ஏனெனில் மிகத் துல்லியமான, உத்தமமான முகக் கூறுகளைக் கொண்டுள்ள ஒரு முகம் தனது புருவத்திலும், கண்களிலும், வாயிலும், உதடுகளிலும், முகத்தின் முழுத் தோற்றத் திலும், முழு பாவனையிலும் ஈடு இணையற்றதும், ஆழங்காண முடியாததுமான ஒரு வரப்பிரசாதத்தைப் பிரதிபலிக்கிற ஒரு முகம், பிறருடைய கண்களுக்கு எவ்வளவு வசீகரமாகவும், அழகாகவும் தோன்றியிருக்கும், எந்த அளவுக்கு, உன்னதமான விதத்தில் அவர்களது மனங்களைக் கவர்வதாகவும், சம்மனசுக்களையும் கூட அதிசயத்திலும் பரவசத்திலும் ஆழ்த்துவதாகவும், அந்தத் திருமுகத்தின் ஒளி எந்த அளவுக்கு காண்போரின் கண்களைக் கூசச்செய்வதாகவும் இருந்திருக்கும் என்று நாம் மிக எளிதாகக் கற்பனை செய்ய முடியும். மோட்சத்தின் ஓர் உயிருள்ள சித்திரத்தைக் கற்பனை செய்வது சாத்தியமற்றதாகவே இருந்திருக்கும்; ஆனால் அந்தப் பரலோக வாசஸ்தலத்தில், அதற்கு வெளியே இருந்த ஒரு பொருள், தான் கொண்டிருக்கும் மகத்துவ கம்பீரத்தோடும், பேரழகோடும் சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கும் என்றால், அது மாமரியின் திருமுகம் மட்டுமே.

இந்தத் திருமுகம் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு புண்ணியத் தையும், பொதுவில் அவை எல்லாவற்றையும் பிரதிபலிப்பதாக இருந்தது. அனைத்திலும் உயர்ந்ததும், ஆழமானதும், மிகத் தீவிர மானதுமான தேவசிநேகத்தாலும், மனிதன் மீதுள்ள மிகுந்த அர்ப்பணமுள்ளதும், தன்னையே மறப்பதும், மிக இனியதும், மிகுந்த கனிவுள்ளதுமான அன்பாலும் அந்தத் திருமுகம் பிரகாசித்தது; மேலும் அனைத்திலும் மிக ஆழமான தாழ்ச்சியாலும், சம்மனசுக் களின் பரிசுத்ததனத்தையும் கூட மறைக்கக்கூடிய அளவுக்கு அதியற்புதமான பரிசுத்ததனத்தாலும், கடவுளுக்கு மிகப் பிரிய மானதும், நேசததிற்கு உரியதும், தெய்வீகத் தாய்மையின் மகத் துவத்தையும் விட மேலானதுமான மகா பரிசுத்த கன்னிமையாலும், கனிவாலும், இனிமையாலும், தயவிரக்கத்தாலும், ஒவ்வொரு வேதனை, துன்பத்தையும் பற்றிய பரிதாப உணர்வாலும், தங்கள் முழு உத்தமதனத்தில் உணரப்பட்டவையும், அனுசரிக்கப் பட்டவையுமான சகல புண்ணியங்களின் பிரதிபலிப்பாலும், ஏற்கெனவே மிக அற்புதமாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்ட அந்தக் கன்னிகையின் திருமுகத்தில் தங்கள் பூரண பிரகாசத்தோடு இவை அனைத்தும் சுடர் வீசியதாலும், எத்தகைய பேரழகோடு அத்திருமுகம் மகிமையோடு துலங்கியிருக்கும் என்பதை யார் கற்பனை செய்ய முடியும்?

மேலும் அந்தத் திருமுகம், அவர்களது புண்ணியங்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் தக்கபடி வசீகர அழகின் ஓராயிரம் பாவனைகளோடும், நிறங்களோடும் பிரகாசித்திருக்க வேண்டும், அவை எந்த அளவுக்கு அவர்களது உத்தமமான ஆத்துமத்தில் ஆதிக்கம் செலுத்தியிருக்க வேண்டும்! கிறீஸ்தவ ஓவியர்கள் எண்ணற்ற அதியற்புதக் கலைப்படைப்புகளில் அந்தத் திருமுகத்தின் அந்த நிறங்களையும், அழகின் பல்வேறு தோற்றங்களையும் வெளிப்படுத்துவதில் தங்கள் திறமைகளையெல்லாம் செலவழித் திருக்கிறார்கள். கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட அந்தத் திருக் குழந்தையானவர்கள், தனது நேசருக்காகத் தனிமையில் காத்திருக் கும்படி, ஒரு புறாவைப் போல தேவாலயத்தின் கதவுகளுக்குப் பின்னால் தன்னை அடைத்துக்கொள்ளும்படி அதன் படிக்கட்டு களில் மழலை மாறாத தள்ளாட்டத்தோடு ஏறிச் சென்றபோது எப்பேர்ப்பட்ட வசீகரமிக்க எளிமையும், வரப்பிரசாதமும் அந்தத் திருமுகத்தில் பிரதிபலித்திருக்கும்! மகா பரிசுத்த கன்னிகை சாலமோனை விட ஞானத்தில் மிக உயர்ந்தவர்களாக இருந்தார்கள். ஏனெனில் அவர்களது திவ்ய மணவாளரான இஸ்பிரீத்து சாந்துவானவர் வெகு காலமாகவே அவர்களுடைய இருதயத்தில் தமது வாசஸ்தலத்தை ஸ்தாபித்து, அதை அனைத்திலும் அதிக மாசற்றதும், அதிக பக்திக்குரியதும், அதிக உயர்ந்ததுமான அறிவின் ஊற்றாக ஆக்கியிருந்தார் என்பதால், எத்தகைய ஞானத்தின் பேரழகு அந்தத் திருமுகத்தில் சுடர்வீசியிருக்கும்!

எதிர்பார்க்கப்பட்ட மெசையாவின் மீதுள்ள நேசத்தையும், ஆசையையும் விட, தனது அப்பழுக்கற்ற கன்னிமையின் மீதான நேசம் அவர்களது ஆத்துமத்தில் மிக அதிகமாயிருந்ததால், ‘‘இது எப்படி ஆகும்? நானோ புருஷனை அறியேனே'' என்ற வார்த்தைகளை அவர்கள் கூறியபோது அந்த முகத்தில் எத்தகைய மாசற்றதனம் பிரகாசித்திருக்கும்! ‘‘பிரியதத்தத்தினாலே பூரணமானவளே, வாழ்க!'' என்ற அந்த பக்திக்குரிய வாழ்த்தைக் கேட்டபோது, இயல்பாகவே அவர்களது முகத்தில் தோன்றிய நாணச் சிவப்பு அந்தத் திருமுகத்தின் பேரழகை இன்னும் எவ்வளவு அதிகமாக அதிகரித்திருக்கும் என்பதை யார் எடுத்துரைக்க முடியும்? அச்சமயம் அத்திருமுகம் தனது நிறத்தை மாற்றி ஆழ்ந்த இளஞ் சிவப்பு நிறத்தை எடுத்துக் கொண்டு, அழகிலும், வசீகரத்திலும், நறுமணத்திலும் அதிகரிக்கிற ஒரு ரோஜா மலரைப் போலத் தோன்றியிருக்கும்! அல்லது, ‘‘இதோ, ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது'' என்று அவர்கள் சொன்னபோது, அந்தத் திருமுகத்தில் எத்தகைய தாழ்ச்சியும், தேவ பக்தியும், சுய அர்ப்பணிப்பும் வெளிப்பட்டிருக்கும்! அந்தத் தாழ்ச்சியும், பக்தியும், சுய அர்ப்பணிப்பும் உடனேயே மிக ஆழ்ந்த தெய்வபயம் மற்றும் ஆராதனையின் பாவனைக்கு மாற்றப்பட்டன. ஏனெனில் கண நேரத்தில் பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தவர் தன்னில் கருவாக உருவாவதையும், தனது திருவுதரத்தில் வந்து தங்குவதையும் அவர்கள் உணர்ந்தார்கள்! உதவியற்றவரைப் போல, தமது பச்சிளங் கரங்களை அவர்களை நோக்கி ஏற்கெனவே உயர்த்தியிருந்த தனது திவ்ய பாலனை அவர்களது கண்கள் முதன்முதலாக உற்றுநோக்கியபோது அந்த அழகுத் திருமுகத்தில் பிரதிபலிக்கப்பட்ட கனிவுள்ள பரவசம், மகா இனிமையுள்ள நேசம், தாய்மையின் சுடரொளி ஆகியவற்றின் உணர்வுகளை யாரால் சித்தரித்துக் காட்ட முடியும்? அல்லது, கல்வாரியில், கடைசித் தடவையாக, மரண அவஸ்தையில் இருந்தபடி நான் தாகமாயிருக்கிறேன் என்று கதறிய தனது திருக் குழந்தையானவர் மீது தனது தாய்மையின் பார்வையைப் பதித்த போது, அவர்களுடைய திருமுகத்தில் இருந்த மிகக் கொடூர மானதாகிய அளவற்ற வேதனை, மிகத் தீவிரமான துயரம், மிகுந்த பக்திக்குரிய அமைந்த மனது ஆகியவற்றின் பாவனைகளை யாரால் கற்பனை செய்ய முடியும்?

மேலும் கடவுளின் மக்களுக்கேயுரிய இனியதும், சமாதான முள்ளதும், நிலையானதுமான மன அமைதியும் அத்திருமுகத்தில் பிரதிபலித்தது. தன்னில் நித்தியமாகத் தங்கியிருந்த தெய்வீகத்தின் முழுமையின் காரணமாக அத்திருமுகம் உன்னத மகிமையால் பிரகாசித்தது. இவை அவர்களுடைய ஆளுமையை எத்தகைய மேலான கம்பீரத்தாலும், மகத்துவத்தாலும் அலங்கரித்திருக்க வேண்டும் என்றால், அவர்களைக் கண்டவர்கள் அனைவரும் அச்சமும் ஆழ்ந்த பக்தியுமுள்ள உணர்வுக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டும். அதே வேளையில், அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக வெளிப்பட்டு, அவர்களைச் சூழ்ந்திருந்த காற்றை நிரப்பியிருந்த இனிய பரலோக நறுமணம், அவர்களை அணுகி வருபவர்கள் பரலோக இன்பங்களின் முன்சுவையை அனுபவிக்கச் செய்து, அந்த அச்சமும், பக்தியுமுள்ள உணர்வை ஏவாளின் புதல்வியரில் எல்லாம் அதிக உன்னதப் பேரழகுள்ள இந்த இராக்கினியின் நேசத்திலும், கருணையிலும் தன்னைத்தானே கரைத்துக் கொள்ளும் ஓர் ஏக்கமாக மாற்றும் அளவுக்கு, அந்த நறுமணம் ஆத்துமத்தை ஊடுருவுவ தாகவும், பரவசத்தில் ஆழ்த்துவதாகவும் இருந்திருக்க வேண்டும்!