இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரி பிதாவை நிறைவு செய்கிறார்கள்.

நித்தியப் பிதா தமது நித்திய வார்த்தையானவரின் வழியாகப் பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறார். இந்த சத்தியத்தை அர்ச். தாமஸ் அக்குயினாஸ் ஆழ்ந்த விதமாகவும், அழகாகவும் எடுத்துரைக்கிறார். கடவுள் தம்மை அறிவதால், சகல சிருஷ்டிகளையும் அறிகிறார். மனதில் கருக்கொள்ளப்படும் வார்த்தை மனதால் உள்ளபடி புரிந்துகொள்ளப்படும் எல்லாவற்றிற்கும் பிரதிநிதியாக இருக்கிறது. ஆனால் நாம் நம்மில் வெவ்வேறான வார்த்தைகளை அல்லது புரிந்து கொள்ளக்கூடிய எண்ணங்களைக் காண்கிறோம்; ஏனெனில் பல்வேறு செயல்களால் நாம் காரியங்களைப் புரிந்துகொள்கிறோம். கடவுளில் இது இப்படி இல்லை; ஒரு செயலால் அவர் தம்மை அறிகிறார், எல்லாவற்றையும் அவர் புரிந்துகொள்கிறார். ஆகவே, அவருடைய வார்த்தை பிதாவானவரின் சிந்தனையை மட்டுமின்றி, சிருஷ்டிகளின் சிந்தனையையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கடவுளின் அறிவு அவரைப் பொறுத்த வரையில், வெறும் புத்தி சார்ந்ததாகவும், சிருஷ்டிகளைப் பொறுத்த வரையில், புத்தியையும், சிருஷ்டிப்பின் வல்லமையையும் சார்ந்ததாகவும் இருப்பது போலவே, கடவுளின் வார்த்தை பிதாவானவரைப் பொறுத்த வரை, அவருடைய வெறும் வெளிப்பாடாகவும், ஆனால் சிருஷ்டிகளைப் பொறுத்த வரை, அவர்களுடைய வெளிப்பாடாகவும், காரண மாகவும் இருக்கிறது.

ஆனால் சிருஷ்டிகள் பிதாவின் அளவற்ற இலட்சணங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன, தம்முடைய வார்த்தையானவர் வழியாக அவர் அவற்றைப் படைக்கிறார், என்றாலும், அவை ஒரு மங்கலான, தொலைவான வெளிப்பாடாக மட்டுமே இருக்கின்றன, படைக்கும் செயலுக்குக் காரணமாயிருக்கிற கடவுளின் நாட்டத்தை அவை புரிந்துகொள்வதில்லை. இந்தப் படைக்கும் செயல்தான் பிதாவானவருடைய அளவற்ற மகத்துவத்தின் சாத்தியமான மிக உன்னதமான வெளிப்பாடாக இருக்கிறது.

பிதாவானவர் அளவுக்கு உட்பட்டதாக இருக்கிற தம்மைப் பற்றிய வெளிப்பாடு அளவற்றதாகவும் இருக்க வேண்டுமென்றே விரும்புவார். ஆனால் இது எப்படி செய்யப்பட முடியும்? மரியாயின் தலையீட்டின் வழியாகவும், மனிதாவதாரத்திற்கு அவர்கள் சம்மதம் கூறுவதன் வழியாகவும்தான் இது செய்யப்பட முடியும். அர்ச். அத்தனாசியார் இந்தச் சிந்தனையைப் பின்வருமாறு அழகாக விளக்குகிறார்:

‘ஒரு மனிதனுடைய வார்த்தை இரு வகையான வெளிப் பாடுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் ஒன்று மனதிலிருந்து வருவது, மற்றொன்று உதடுகளிலிருந்து வருவது. அதுபோலவே, சர்வேசுரனுடைய வார்த்தையானவரும் இரு வகையான உற்பவத் தைக் கொண்டிருக்கிறார்--ஒன்று பிதாவாகிய சர்வேசுரனிடமிருந்து வருவதாகும், இது முதல் உற்பவம் எனப்படுகிறது; இரண்டாவது, மாம்சத்தில் இருந்து வருவதாகும், இது இரண்டாவது உற்பவம் எனப்படுகிறது. நம்முடைய வார்த்தை, நம் மனதிலிருந்து பிறக்கும்போது, அது பிறரால் அறியப்படாததாக இருப்பது போலவே, சர்வேசுரனுடைய வார்த்தையானவரும் நித்தியப் பிதாவிடமிருந்து காலங்களுக்கு முன்பிருந்தே உற்பவித்து வரும்போது, அவர் மனிதர்களால் அறியப்படாதவராக இருந்தார். நாம் விரும்பும்போது, நம்முடைய வார்த்தை நம் வாயினின்று பிறக்கக் கூடியதாக இருப்பது போலவே, தேவ வார்த்தையானவரும், தனக்குப் பொருத்தமானதென்று தோன்றிய காலத்தில், தீர்க்க தரிசிகளின் வாய்களிலிருந்தும், திவ்விய கன்னிகையின் மகா கற்புள்ள திருவுதரத்திலிருந்தும் பிறந்தபோது, அவர் மனிதரால் அறியப்படக் கூடியவராக ஆனார்.''

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிதாவானவர் தம்முடைய அளவற்ற மகத்துவப் பிரதாபத்தை முற்றிலும் போதுமான அளவிலும், அளவற்ற விதமாகவும் வெளிப்படுத்தும் படியாக, தம்முடைய வார்த்தையானவரைக் கருத்தரிக்கிறார். ஆனால் இந்த அவருடைய சுய வெளிப்பாடு அறியப்படாததாக இருந்தது, அவரும் கூட அறியப்படாதவராகவே இருந்தார். பிதா தம்மை வெளிப்படுத்தும்படியாக, தம்முடைய வார்த்தையானவரின் வழியாக (சிருஷ்டிகளைப்) படைக்கிறார். ஆனால் சிருஷ்டிப்பு என்பது அவருடைய போதுமான, உத்தமமான வெளிப்பாடாக இருக்க முடியாது, ஆகவே, அதன் வழியாக அவர் போதுமான அளவுக்கு அறியப்படவில்லை. அவர் தம்முடைய உள்ளரங்க வார்த்தையானவரை, மகா கன்னிமையுள்ள மாமரியின் திருவுதரத்தின் வழியாக உச்சரிக்கிறார், இவ்வாறு அவர் போதுமான அளவில் வெளியே அறியப்படக் கூடியவராக ஆகிறார்.

ஆகவே, மாமரி பிதாவாகிய சர்வேசுரனுடைய உள்ளரங்க வெளிப்பாட்டை, அவருடைய அந்தரங்கத்தை வெளிப்படுத்து கிறார்கள் என்பதால், அவர்கள் அவருடைய வெளியரங்க ஜீவியத்தை முழுமைப்படுத்துகிறார்கள். இந்த அத்தியாயம் முழுவதிலும் இந்தச் சிந்தனை படிப்படியாக, முழுமையாக வெளிப் படுத்தப்படும்.