இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இஸ்பிரீத்துசாந்துவானவரோடு மாமரியின் உறவு

இஸ்பிரீத்துசாந்துவானவரோடு மாமரிக்குள்ள உறவு, அவர்கள் ஒரு மிகத் தனிப்பட்ட, ஒப்பற்ற முறையில், அந்த மேலான தேவ ஆளின் உயிருள்ள ஆலயமாகவும், பலிபீடமாகவும் இருக்கிறார்கள் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்ட தாகும்.

மூன்றாவது தேவ ஆளை, அவர் இருக்கிறபடியே இருக்கச் செய்வது, அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய ஆள்தன்மையை உருவாக்குவது, நேசம் அல்லது சிநேகம் ஆகும். ஏனெனில் அவர் பிதாவினுடையவும், சுதனுடையவும் தனிப்பட்ட நேசமாக இருக்கிறார்.

ஆகவே, இந்த நேசமான சர்வேசுரன் தமது வரப்பிரசாதத்தை ஓர் ஆத்துமத்திற்குத் தரும்போது, அவர் தம்மையே தருகிறார், அப்போது அந்த ஆத்துமம் இஸ்பிரீத்துசாந்துவானவரின் வாசஸ் தலமாகவும், தேவாலயமாகவும், பலிபீடமாகவும் ஆகிறது.

ஆனால் இஸ்பிரீத்துசாந்துவானவர் மரியாயின் பரிசுத்த ஆத்துமத்திற்குத் தம்மையே தந்தது போல் இவ்வளவு அபரிமிதமாகவும், இவ்வளவு அளவற்ற விதமாகவும் வேறு எந்த ஆத்துமத்திற்கும் தந்ததில்லை. அவர் எந்த அளவுக்குப் பொங்கி வழியும் விதமாகவும், பிரமாண்டமான முறையிலும் தம்மையே மாமரிக்குத் தந்தார் என்றால், மாமரி நேசத்தின் சிகரத்தை அடைந்தார்கள், அவர்கள் நேசத்தால் முற்றிலுமாக நனைந்து பொதும்பியிருந்தார்கள்; அவர்கள் முற்றிலும் நேசமாக, ஒரு பேச்சு முறைக்கு, மற்றொரு இஸ்பிரீத்துசாந்துவானவராக, அல்லது மறு ரூபமடைந்ததால் அவரோடு ஒன்றானவர்களாக இருக்கிறார்கள். இது முற்றிலும் அவசியமான ஐக்கியமாகவும் இருந்தது. ஏனெனில் மாமரியில் நமது ஆண்டவரின் உற்பவம் இதே நேசத்தின் விளைவாகவே இருக்க வேண்டியிருந்தது. அது மனிதனுடைய வேலையாக இல்லாமல், மகா உன்னதருடைய வேலையாக இருக்க வேண்டியிருந்தது. பரிசுத்த சுவிசேஷம் இதைத் தெளிவாக்குகிறது: ‘‘இஸ்பிரீத்துசாந்துவானவர் உம்மேல் வருவார், உன்னதமான வருடைய வல்லமை உமக்கு நிழலிடும்; ஆகையால், உம்மிடமிருந்து பிறக்கிற பரிசுத்தர் தேவசுதன் எனப்படுவார்.''

கிறீஸ்துநாதருடைய திருச்சரீரமும், அவருடைய மனித ஆத்துமத்தோடு அந்தச் சரீரத்தின் ஐக்கியமும், இந்த இரண்டும் தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளோடு கொண்ட ஐக்கியமும், இவையெல்லாமே ஒட்டுமொத்தமாகவும் தனிப்பட்ட முறையிலும் இஸ்பிரீத்துசாந்துவானவரின் வேலையாக இருக்க வேண்டி யிருந்தது. அவர் மரியாயின் ஆத்துமத்தை தேவசிநேகத்தில் அமிழ்ந்து போகச் செய்ததன் மூலம் இதை நிறைவேற்றினார். அவர் அவர்களுடைய ஆத்துமத்தை எத்தகைய நேச பாதாளத்தினுள், எத்தகைய தேவசிநேகத்தினுள், எத்தகைய உயிருள்ள தீச்சுவாலையினுள், எத்தகைய கொழுந்து விட்டெரிகிற பெரும் நெருப்பினுள் அமிழ்த்தினார் என்றால், ஒரு பேச்சு வகைக்கு, அவர் அவர்களுடைய ஆத்துமத்தை அதன் விளிம்பு வரைக்கும் நிரப்பியபிறகு, அவர்களது மாசற்ற சரீரத்திற்குள்ளும் பொங்கி வழிந்து, அதை ஞானத்தன்மையுள்ளதாக்கினார், அதை அர்ச் சித்தார், தெய்வீகமாக்கினார், அதை தேவசிநேகத்தின் பரிபூரண மாசற்ற அக்கினிச் சுவாலையாக மாற்றினார். இத்தகைய ஒரு பரிபூரண மாற்றத்தின் கனியாக இருந்தது, சேசுநாதரின் உற்பவமாகும்.

ஆகவே, இஸ்பிரீத்துசாந்துவானவர் என்னும் உன்னத தேவ ஆளின் தேவாலயம் என்ற முறையில் அவரோடு மாமரி கொண்ட உறவு, தனது தீவிரத்திலும், பிரமாண்டத்திலும், பலனிலும் வேறு எந்த சிருஷ்டியின் உறவிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.