இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மனிதன் புலன்களால் உணரப்படக்கூடிய ஒரு செயல்முறையால் காணப்படாததும், அரூபமானதுமான முந்திய நிலையில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

மாமரியின் ஊழியம்

மனிதன் மாம்சத்தில் பொதியப்பட்டுள்ள ஓர் அரூபியாக இருக் கிறான். அவனில் உண்மையில் அரூபிக்கும் மாம்சத்திற்கும் இடையிலான ஓர் அதிசயத்திற்குரிய ஐக்கியத்தைக் கண்டு நாம் வியக்கிறோம், தெய்வீகமான ஒன்றுக்கும் மாம்சத்திற்கும் இடையில் உள்ள ஐக்கியம் என்று கூட நாம் சொல்லலாம், ஏனெனில் மனிதனின் ஆத்துமம் தெய்வீகத்தின் சாயலாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதன், இவ்வுலகில் நாம் கண்டு பிரமிக்கிற, காணக்கூடிய சடத் தன்மையுள்ள பொருட்களில், காணப்படாத, அரூபமான காரியங்கள் ஒன்றாக இணைக்கப் படுவதன் அதிக உத்தமமான, அதிக பக்திக்குரிய ஒரு பொது அமைப்பின் வெளிப்பாடாக இருக்கிறான்; ‘‘கண்ணுக்கெட்டாத அவருடைய இலட்சணங்கள் உலகம் உண்டானது முதல் சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களாலே புத்திக்கு எட்டும்படியாகின'' (உரோ.1:20) என்று அர்ச். சின்னப்பர் கூறுவது போல, இந்த ஐக்கியத்தில் உத்தமமானதும் புலன்களால் உணரப்படுவதும், பரலோகத்திற்குரியதும் பூலோகத்திற்குரியதும், தார்மீக மானதும் மாம்சம் சார்ந்ததும், ஒன்றோடொன்று ஓர் அற்புதமான தக அமைதலின் மூலம் நன்றாக ஒத்திசைந்திருக்கின்றன.

ஆகவே, மனிதன் மாம்சத்தோடு இயல்பாக இணைந்திருக்க வேண்டும். உத்தமமானதும் நிஜமானதும் நெருக்கமாக இணைந் திருக்கிற ஓர் அமைப்பின் ஒரு பகுதியாக அவன் இருக்கிறான். 

வீழ்ச்சிக்கு முன்பாக, மனிதனின் ஆத்துமத்தின் சத்துவங்கள் அனைத்தும் சரீரத்தினுடையவும், சுபாவத்தினுடையவும் புலன் களின் மீது ஆண்டு நடத்திய காலத்தில், அவன் இப்படி இருந்தான் என்றால், தன் புரட்சியாலும், கலகத்தாலும், ஒரு பண்டைய எழுத்தாளர் கூறுவதுபோல், அவனுடைய ஆத்துமம் ஓர் உயிருள்ள கல்லறைக்குள் அமிழ்த்தப்பட்டது போல, மாம்சத்தினுள் அமிழ்த் தப்பட்டு, அவன் காணப்படாத உலகத்தோடு தன் உறவைத் துண்டித்துக்கொண்டு புலன்களால் கிரகித்துக்கொள்ளப்பட்ட போது, புலன் சார்ந்தவையும் மாம்சம் சார்ந்தவையுமான காரியங்களின்மீது அவனுடைய சார்புடைமை எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!

அர்ச். விக்டரின் ஹியூக் இந்தக் கலகத்தை அற்புதமான முறையில் விளக்கிக் காட்டியிருக்கிறார். சரீரம், ஆவி, கடவுள் என்னும் மூன்று காரியங்கள் இருந்தனர். சரீரம் என்பது உலக மாகவும், ஆவி என்பது ஆத்துமமாகவும் இருந்தது, இந்த ஆத்துமம் ஒரு குறிப்பிட்ட ஊடகமாக வைக்கப்பட்டது, அது தனக்கு வெளியே உலகத்தையும், உள்ளே கடவுளையும் கொண்டிருந்தது. ஆத்துமத்திற்கு ஒரு கண் கொடுக்கப்பட்டிருந்தது, அதைக் கொண்டு தனக்கு வெளியே உள்ள உலகத்தையும், அதில் இருக்கும் அனைத்து காரியங்களையும் அதனால் காண முடிந்தது. மற்றொரு கண்ணும் அதற்குக் கொடுக்கப் பட்டிருந்தது. அதைக் கொண்டு அது தன்னையும் எல்லாவற்றையும் கண்டது, இது தன்னிலேயே அறிவின் கண்ணாக இருக்கிறது. இறுதியாக மற்றொரு கண்ணும் அதற்குத் தரப்பட்டிருந்தது. அதைக் கொண்டு அது கடவுளையும், கடவுளில் உள்ளவற்றையும் கண்டது. அது காட்சிதியானத்தின் கண்ணாக இருந்தது.

தெளிவானவையும், பிரகாசமானவையுமான இந்த மூன்று கண் களையும் ஆத்துமம் கொண்டிருந்த வரையிலும், காணக் கூடியதும், ஆத்துமம் சார்ந்ததும், தெய்வீகமானதுமான மூன்று பகுதிகளையும் அதனால் காண முடிந்தது. ஆனால் பாவ இருள் அதை ஆக்கிரமித்த பிறகு, காட்சிதியானத்தின் கண் அணைந்து போனது, அந்தப் பகுதியில் இருக்கும் எதையும் அன்று முதல் அதனால் காண முடிய வில்லை. அறிவுக் கண் திரையிட்டு மூடப்பட்டது. கருக்கலான வெளிச்சத்தில்தான் அதனால் காண முடிகிறதே தவிர, எதையும் அதனால் தெளிவாகக் காண இயலவில்லை. அணைந்து போகாமலும், தன் பிரகாசத்தை முழுவதுமாக அனுபவிக்கும்படியும் விடப்பட்ட ஒரே கண் மாம்சத்தின் கண் மட்டுமே. இதன் காரண மாக, மனிதனின் இருதயம், ஆத்துமத்தின் கண்களால் மிக அரிதாகவே உணரப்படுகிற காரியங்களை நோக்கிச் செல்வதை விட அதிகமாக, மாம்சத்தின் கண் வழியாகத் தான் காண்கிற காரியங்களைத்தான் அதிகமான நெருங்கிச் செல்கிறது.

சரீரங்களின் உலகத்தை மனிதன் தெளிவாகக் காண்கிறான், ஆனால் ஆத்துமத்தின் காரியங்களை மங்கலாகத்தான் காண்கிறான், கடவுளுடைய காரியங்களையோ அவன் காண்பதேயில்லை.

இந்த அழிவுக்குரியதும், பேராபத்துள்ளதுமான மாற்றத்தின் காரணமாக, கடவுளோடு நாம் தொடர்பு கொள்ளும் முறையிலும் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அறிவுப் புலன் பலவீனமாக்கப்பட்ட தாலும், தெய்வீகப் புலனை இழந்து போனதாலும் அதிகரிக்கப்பட்ட புலன்களால் உணரக்கூடிய காரியங்களின் மீதான இச்சை எந்த அளவுக்குக் கெட்டுப் போனதாக ஆகியிருந்தது என்றால், அது சுபாவம் முழுவதையும் கெடுக்கக் கூடியதாக இருந்தது. இதன் காரணமாக, காணப்படாத காரியங்கள் இந்தக் காணக்கூடிய சித்தரிப்புகளால் மனிதனின் கைக்கெட்டும் தூரத்தில் வைக்கப் பட்டுள்ளதால், அவை சிருஷ்டிகரை நோக்கி அவனை இட்டுச் செல்வதற்குப் பதிலாக, அவரிடமிருந்து அவனைத் தொலைவாக இழுத்துச் சென்று விட்டன; தெய்வங்களாக மாற்றப்பட்டு விட்ட சிருஷ்டிகள் கடவுளைப் பற்றிய அறிவை இடைமறித்தன. ஆனால் இந்த சிருஷ்டிகளோ இந்தத் தேவ அறிவுக்குத்தான் தூதர்களாக இருந்திருக்க வேண்டும் (காண்க. உரோ.1:23,26).

கடவுள், மனிதன் மீது தாம் கொண்ட இரக்கத்தில், இந்தத் தீமைக்கு எதிராக, மிக அற்புதமான ஓர் உதவியை ஆயத்தம் செய்தார். பாவம் தனக்கே தண்டனையாக இருக்கிறது என்னும் மாற்றப்பட முடியாத நீதியின் சட்டத்தின்படி, கடவுள் தம்முடைய புத்திக்கெட்டாத அளவுள்ள இனிமையால், நோயே அதன் மருந்தாக இருக்க வேண்டுமென்றும், நம்மை விழச் செய்த காரியமே நம்மை உயர்த்தக் கூடிய வழியாக இருக்க வேண்டும் என்றும், அந்தக் காணக்கூடிய காரியங்கள் காணப்படாதவை பற்றிய அறிவுக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றும் சித்தங் கொண்டார். நோயைக் கடினப்படுத்துவதில் கடவுள் அதை அதிகரித்திருப்பார் என்றும், ஆனால் அதற்கு ஒருவன் பிரியத்தோடு தன்னை விட்டுக் கொடுக்கும்போது, அவர் அதை ஆற்றுகிறார் என்றும் ஒரு வேதசாஸ்திரி கூறுகிறார். தவறு செய்யும் புலன்களை அவற்றின் சொந்தத் தவறின் வழியாக இழுத்துச் செல்வதன் மூலம் அவற்றின் தவறை அவை நினைவுகூரும்படி அவர் செய்கிறார்; நோயைக் கொண்டே நோயை அவர் வெல்கிறார், பொய்க்குள் அவர் உண்மையைப் புகுத்துகிறார். மனுஷீகத்தின் கனவாயிருந்த போலியான, சடப் பொருண்மை சார்ந்த தெய்வத்தை, மனிதனாக அவதரித்த தேவனாயிருந்து எதிர்க்கிறார், பித்துப் பிடித்த நிலையை அவர் முன்னறிவித்தலாக மாற்றினார். மனித ஆத்துமம் கடவுளைப் பற்றிய சிந்தனை இன்றியோ, சரீரத்தைப் பற்றிய சிந்தனை இன்றியோ இருக்க முடியாது, அதாவது, அது தான் ஏமாற்றப் படுவதைத் தடுக்க இயலாதிருந்தது, கடவுள் ஒரு சரீரத்தில் மெய்யங் கடவுளையும், கடவுளில் ஒரு மெய்யான சரீரத்தையும் அது காணும்படி செய்கிறார், இது இனியும் ஏமாற்றப்படாதிருக்கும்படி அவர் இப்படிச் செய்கிறார். மனிதன் உணரக்கூடிய காரியங்களால் நசுக்கப்படுகிறான்; அதுவே அவனுடைய தீமையாக இருந்தது. மனிதன் ஏறக்குறைய தன் சித்தத்திற்கு எதிராகக் கடவுளைக் கண்டுபிடிக்கும்படியாக, கடவுள் புலன்களால் உணரக்கூடிய காரியங்களோடு தம்மையே கலந்து விடுகிறார்.

நாம் இப்படி ஒப்பிடலாம் என்றால், மனிதன் சிருஷ்டிகளின் கெடுக்கக்கூடிய உலக/சரீர இன்பத்தின் மீதான பற்றுதலால், தெய்வீக அழகின் மாசற்றதும், பரிசுத்தமானதுமான அரவணைப்புகளில் இருந்து விலக்கப்படுகிற பிரமாணிக்கமற்ற கணவனைப் போலிருக் கிறான். தகுதியற்றவர்களாகிய வேசிகளுக்குத் தன்னைக் கையளிப்பது போல் அவன் இவற்றிற்குத் தன்னைக் கையளித் திருந்தான்.

அவன் மீதுள்ள நேசத்தாலும், தயவிரக்கத்தாலும் தெய்வீகப் பேரழகானது, தன்னுடைய எதிரிகளின் நடுவில் இறங்கி, தனக்கு மட்டுமே நியாயமானதாக இருக்கும் அவற்றின் வெளிக் கவர்ச்சி களைப் பயன்படுத்துகிறது, அவற்றைத் தான் அணிந்து கொள்வதால், அவற்றை அது சுத்தப்படுத்தி அழகுபடுத்துகிறது. இவ்வாறு அந்தப் பிரமாணிக்கமற்ற கணவன் தன்னையே தேர்ந்துகொள்ளும்படி அது செய்து, இந்த அற்புதமானதும், இரக்கமுள்ளதுமான முறையில் அவனைக் ‘‘கெடுத்து'' அவனைத் திரும்ப அழைத்துக் கொண்டு வருகிறது!

ஆக, தம்முடைய இரக்கமுள்ள தயாளத்தின் மிகவும் புத்திசாலித் தனமான இந்தத் திட்டத்தை நிறைவேறச் செய்யும்படி கடவுள் தேர்ந்துகொண்ட பரம இரகசியம் என்னவாக இருந்தது? வாசகர் ஏற்கனவே அதைப் புரிந்துகொள்கிறார். அதுவே மனிதாவதார மாகும். அதில், புத்தியுள்ளதும், ஞானத் தன்மையுள்ளதுமான அனைத்தினுடையவும் பொருண்மை சார்ந்த உருவகமாகிய நித்திய வார்த்தையானவர், காணக்கூடியதும், சடத்தன்மை சார்ந்ததுமான, அனைத்திலும் உயர்ந்த உருவகமாகிய மாம்சத்தோடு தம்மை இணைத்துக் கொண்டு, இந்த மனுஷீகத்தின் வழியாக மனிதனைக் கவர்ந்திழுத்து, காணப்படாததும், ஞானத் தன்மையுள்ளதும், தெய்வீகமானதுமான அனைத்தையும் பற்றிய அறிவுக்கு அவனை அழைத்து வந்தார்.

ஆனால் காணப்படக் கூடியதும், சடப்பொருள் சார்ந்ததுமான அனைத்தினுடையவும் மிக உயர்ந்த உருவகமாக, நம் ஆண்டவரின் மனித சுபாவத்தின் ஒரு பகுதியாக இருந்த மாம்சம், மாமரியால் அவருக்கு வழங்கப்பட்ட மாம்சமாக இருந்தது என்றும், அது சுதந்திரமாகவும், தானே முன்வந்தும், மனிதாவதாரத்தைப் பற்றிய முழு அறிவோடும் மாமரியால் வழங்கப்பட்டது என்றும், அவர்கள் அதை அவருக்குத் தர மறுத்திருக்க முடியும் என்றும், அவரோ, கடவுள் என்ற முறையில், தம்முடைய அளவற்ற தயாளத்திலும், ஞானத்திலும், அதைத் தருவது அல்லது தர மறுப்பது ஆகிய இரண்டில் ஒன்றை மாமரியே தேர்ந்தெடுக்கும்படி விட்டு விடத் தயவுகூர்ந்தார் என்றும், முதலில் மாமரி அவருக்குத் தந்தது மட்டுமின்றி, தன்னுடைய மாசற்றதாகிய அடைபட்ட மடத்தில் வளர அனுமதித்து, தன் சொந்தப் பொருண்மையாலும், தன் கன்னிமையுள்ள கொங்கைகளின் பனியைக் கொண்டும் போஷித்து வளர்த்ததுமான மாம்சம் அது என்றும் வாசகர்கள் குறித்துக் கொள்ள வேண்டும். ஆகவே, மாமரி, ஏற்கனவே விளக்கப்பட்டவற்றின் அடிப்படையில், மனுக்குலத்தின் இரட்சணியத்திற்கு அவசியமா யிருந்த முதல் நிபந்தனையை நிறைவேற்றினார்கள், அதாவது, சடத் தன்மையிலும், புலன் சார்ந்த காரியங்களிலும் மூழ்கியிருந்த மனிதர்களின் மனங்களை ஞானத்தன்மையானதும் தெய்வீகமானது மான காரியத்தை நோக்கி நடத்திச் செல்லும்படியாக, காணப்படா தவராகவும் அரூபியாகவும் இருந்தவரை மாமரியே காணப்படக் கூடியவராகவும், தொட்டுணரப்படக் கூடியவராகவும் ஆக்கினார்கள்!