இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அது பலியின் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஆயினும் கடவுளின் ஆராதனை மகிமைக்காக ஒரு கடவுளே பலியாக்கப்படுவதும் மாமரியின் வழியாக நிகழ்ந்தேற வேண்டியிருந்தது.

இந்த ஆராதனை மகிமையின் அனைத்திலும் மேலானதும், அனைத்திலும் அதிக மகத்துவமுள்ளதுமான செயல்பாடு பலி ஆகும். அது பின்வரும் காரணங்களில் தன் அஸ்திவாரத்தைக் கொண் டுள்ளது. முதலாவது: மனிதன் கடவுளின் சிருஷ்டியாக இருக்கிறான். அவன் தன் இருத்தலுக்கும், சத்துவங்களுக்கும், தனது பராமரிப் பிற்கும், தன் செயல்களுக்கும், தன் வாழ்வைப் பராமரிக்கிற சகல வெளிப் பொருட்களுக்கும் கடவுளுக்கு எல்லா விதத்திலும் கடன்பட்டிருக்கிறான். இது மனிதனில் கடவுளின் மட்டில் ஓர் அச்ச உணர்வையும், வணக்க உணர்வையும் தூண்டியெழுப்புகிறது, மேலும், தன் ஒன்றுமில்லாமையையும், முழு செயலற்றதனத்தையும், கடவுளையே எல்லாவற்றிற்காகவும் சார்ந்திருக்கும் நிலையையும் தியானிக்கும்போது, அவருக்கு முழுவதுமாகத் தன்னை அர்ப் பணிக்கும் உணர்வும், இவ்வளவு அதிகமானவையும், இவ்வளவு மதிப்பு மிக்கவையுமான நன்மைகளுக்காக நன்றியுணர்வும், கடமையுணர்வும் அவனில் தூண்டப்படுகின்றன.

இரண்டாவது: மனிதன் கடவுளின் அளவற்ற மகத்துவத்தை நிந்தித்து அவரை நோகச் செய்து விட்டான், அவருக்குத் தான் இழைத்த அவமானத்திற்காக, அவருடைய நிந்திக்கப்பட்ட மகிமைக்குப் பரிகாரம் செய்யவே அவன் விரும்பியிருப்பான்; தன் சுயநலத்தாலும், சரீர இச்சையாலும் தான் கடவுளை நோகச் செய்தது பற்றி அவன் சிந்திக்கும்போது, கடவுளின் நீதிக்கும், திருடப்பட்ட அவருடைய மகத்துவத்திற்கும் பரிகாரம் செய்வதற்கு, முழு அர்ப்பணம் மற்றும் சுய நிந்தித்தலின் மூலம் சுயநல உணர்வை நசுக்க வேண்டும் என்றும், தனக்குத்தானே உடல் வேதனையை வருவித்துக் கொள்வதன் மூலம் சரீர இச்சையை வேரறுக்க வேண்டும் என்றும் அவன் உணர்கிறான்.

மூன்றாவதாக: கடவுளை நோகச் செய்தது பற்றிய அதே உணர்வு, அவருடைய சமூகத்திற்கு முன்பாகச் செல்வது பற்றிய அச்சத்தையும் திகிலையும் அவனுக்கு உண்டாக்குகிறது, சாத்திய மானால், அவருக்கு முன்பாகத் தோன்றுவதை விட ஓடி ஒளிந்து கொள்ளவே அவன் விரும்புவான்.

எல்லாக் காரியங்களுக்கும் சர்வேசுரனையே முற்ற முழுக்கச் சார்ந்திருப்பது பற்றிய இந்த உணர்வுகளும், அவருடைய அளவற்ற மகத்துவத்தின் மட்டில் அச்ச, வணக்க உணர்வுகளும், அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள சகல நன்மைகளுக்காகவும் நன்றியுணர்வும், தன்னையே குற்றமுள்ளவனாகப் பார்க்கும் அச்சமும், கடவுளுக்கு முன்பாகத் தன் சுயநேச உணர்வையும், புலனின்பத்தின் தேடல்களையும் நசுக்கி விடுவதற்கான உள்ளரங்க முயற்சியும், ஓர் உள்ளரங்க பலியை உருவாக்குகின்றன, இது இஸ்பிரீத்துவின் பலியாக இருக்கிறது, கடவுளின் இரக்கங்களுக்காக மனிதன் அவருக்குத் துதிபுகழ்ச்சியும், நன்றியறிந்த தோத்திரமும் செலுத்துகிறான், தன்னையும் தன் சத்துவங்கள் அனைத்தையும் கடவுளுக்கு ஒரு சுதந்திரமான கொடையாகவும், காணிக்கை யாகவும் ஒப்புக்கொடுக்கிறான், அவரைச் சகல காரியங்களினுடை யவும் ஆதிகாரணராகவும், தன் ஆதித் தொடக்கமாகவும், கடைசி முடிவாகவும், ஜீவியத்தையும், மரணத்தையும் தீர்மானிப்பவராகவும், அவற்றின் உன்னத எஜமானராகவும் ஏற்றுக்கொள்வதன் மூலம் அவன் அவரை ஆராதிக்கிறான், தன் மனதில் கடவுளுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுகிறான், சாத்தியமானால், அவருடைய அளவற்ற மகத்துவத்திற்கு முன்பாகத் தன்னையே வெறுமை யாக்கவும், அழித்துக்கொள்ளவும் விரும்புகிறான். தான் கடவுளுக்குச் செய்த அவமானங்களையும் நிந்தைகளையும் அதிக உயிரோட்ட முள்ள முறையில் உணர்ந்து, கடவுளுக்கு முழுக் கையளித்தலிலும், அர்ப்பணத்திலும் தன் சொந்த உணர்வை நசுக்கி விட அவன் விரும்புகிறான், தன்னைப் பாவத்திற்குத் தூண்டிய மாம்சத்தை ஒறுக்கவும், கொல்லவும், தான் நோகச் செய்த கடவுளைப் பிரியப் படுத்தவும் அவன் விரும்புகிறான். இந்த எல்லா உணர்வுகளும் சேர்ந்து உள்ளரங்கப் பலியை உருவாக்குகின்றன.

ஆனால் மனிதன் மாம்சத்தில் பொதியப்பட்ட ஆத்துமமாக இருக்கிறான்; அரூபத் தன்மை மற்றும் சடத்தன்மை என்னும் இந்த இரட்டை சுபாவத்தின் விளைவாக, அவன் தன் உணர்வுகளுக்கு மாம்சமும் இரத்தமும் தர வேண்டியவனாக இருக்கிறான்; ஏதாவது ஓர் உணரக்கூடிய முறையில் அவற்றிற்கு அவன் உருவம் தர வேண்டும். இந்த உணரக் கூடிய முறை தன் இயல்பால், அவனுக்குள் அடக்கப்பட்டுள்ள அவனுடைய உணர்வுகளின் தன்மையையும், தீவிரத்தையும் உயிரோட்டமான முறையிலும், வலிமையான விதத் திலும், தவறாத விதத்திலும் குறித்துக் காட்டவும், உருவப்படுத்தவும் செய்யலாம். இதிலிருந்தே சகல மக்களினங்களின் வரலாற்றிலும் நாம் காணும் பலி வருகிறது. ப்ரொட்டஸ்டான்ட் சபையினர் திவ்விய நற்கருணைப் பலிக்கு எதிராகத் தாங்கள் கொண்டுள்ள வெறுப்பில் பலியின் தன்மையைத் திரித்து விட்டாகள், அவர்கள் அதன் கண்ணோட்டத்தை வெறும் ஜெபத்தின் அளவுக்குக் கட்டுப் படுத்தி விட்டார்கள். ஜெபம் என்பது ஞான பலி என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது. ஆனால் இங்கே பிரச்சினை ஆத்துமத்தின் உள்ளரங்கப் பலி அல்ல, மாறாக, அந்த உள்ளரங்க பலியை, ஏதாவது ஒரு தெளிவான, வலிமையான, தனிப்பட்ட, புலன்களால் உணரக்கூடிய விதத்தில் வெளிப்படையாகக் காட்டுவது, அதை உருவப்படுத்திக் காட்டுவது எப்படி என்பதுதான்.

இந்தக் குறிப்புகளுக்குப் பிறகு, பலி என்பதற்குப் பொதுவாக அனைவரும் தரும் வரையறை எளிதாகப் புரிந்துகொள்ளப்படலாம். அது சட்டபூர்வமான ஒரு தேவ ஊழியரால் கடவுளுக்கு ஏதாவது ஒரு புலன்களால் உணரப்படக் கூடிய பொருள் ஒப்புக்கொடுக்கப் படுவதாகும். எல்லாக் காரியங்களின் மீதும் கடவுளுக்கு இருக்கிற உன்னதமான ஆளுகையை ஏற்றுக்கொள்ளும்படியாகவும், ஜீவியத் தையும் மரணத்தையும் தீர்மானிக்கிறவர் என்றும், சகல நன்மைகளின் ஆதாரமும் தொடக்கமுமாக இருப்பவர் என்றும் ஏற்றுக்கொள்ளும் படியாகவும், பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகவும், இப்படி ஒப்புக்கொடுக்கப்படும் பொருளின் பொருண்மை அழிக்கப் படுகிறது, அல்லது மாற்றப்படுகிறது. இந்த ஸ்தாபகம் எவ்வளவு நன்றாக, மேலே குறிப்பிடப்பட்ட மனிதனின் எல்லா உணர்வுகளையும் எடுத்துரைக்கிறது!

புலன்களால் உணரக்கூடிய ஒரு பொருளின் காணிக்கை நன்றியறிதல் உணர்வை வெளிப்படுத்துவதற்காகச் செய்யப்படு கிறது. ஒரு சட்டபூர்வமான தேவ ஊழியரால்; ஏனெனில் மனிதன் தான் குற்றமுள்ளவன் என்று அறிந்திருப்பதால், சர்வேசுரனுடைய மகத்துவத்தினுடையவும், பரிசுத்ததனத்தினுடையவும் திருச்சமூகத் திற்கு முன்பாகத் தான் செல்லக் கூடாது என்று உணர்கிறான், எனவே, தன்னுடைய இடத்திலிருந்து மற்றொருவர் செயல்படும்படி அவன் செய்கிறான். இவர் கடவுளுக்குத் தம்முடைய அர்ப்பணத்தாலும், தம்முடைய வாழ்வின் மாசற்றதனத்தாலும் கடவுளுக்கும் மனித னுக்குமிடையே செல்ல அதிகத் தகுதியுள்ளவராக மதிக்கப் படுகிறார்; இந்த ஸ்தாபகத்தால் மனிதனை மேற்கொள்கிற அச்சம், திகில், பயத்தோடு கூடிய வணக்க உணர்வு ஆகிய உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இந்த உணர்வு ஒரு மாசற்ற பலிப் பொருளைத் தேர்ந்து கொள்வதன் மூலமாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. பலிப் பொருளின் மாற்றம் அல்லது அழிக்கப்படுதல், மனிதனுடைய விதியைத் தீர்மானிப்பவராக கடவுளின் வல்லமை பற்றிய உணர்வையும், சுய நேசத்தை நசுக்குவது மற்றும் புலனின்பத்தை அழிப்பது பற்றிய உணர்வையும், கடவுளுக்கு முன்பாக முற்றிலும் உதவியற்றவனாயிருப்பது பற்றிய அடக்கியாளும் உணர்வையும் சித்தரித்துக் காட்டுகிறது, மேலும், அந்த மகத்துவத்திற்கு முன்பாக தன் முழு சுயத்தையும் வெறுமையாக்க அவன் தயாராயிருக்கச் செய்யும்படியாக, மனிதனை ஊடுருவுகிற அச்சத்தோடு கூடிய வணக்க உணர்வையும் அது சித்தரித்துக் காட்டுகிறது. 

இவ்வாறு மனிதன் எல்லாக் காலங்களிலும், எல்லா நாடுகளிலும் பலியின் வழியாகக் கடவுளை அங்கீகரித்திருக்கிறான். ஆனால் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட எல்லாப் பலிகளுமே, அவருடைய அளவற்ற மேன்மை மற்றும் மகத்துவத்திற்குத் தகுதியுள்ளவையாக இருக்கவில்லை என்பதை நாம் இங்கே குறித்துக் காட்டத் தேவையில்லை.

கடவுளின் அளவற்ற மாசற்றதனத்திற்குத் தகுதியுள்ளதாகவும், அவருடைய அளவற்ற பரிசுத்ததனம் மற்றும் நீதியின் பார்வைக்குப் பிரியமானதாகவும் உகந்ததாகவும் இருக்கும் அளவுக்கு, மிகவும் பரிசுத்தமானதாகவும், மிகவும் சுத்தமானதாகவும், முற்றிலும் கறைதிரைற்றதாகவும், மிகவும் மாசற்றதாகவும் இருக்கிற ஒரு பலிப்பொருளையும், ஒரு காணிக்கையையும் எங்கே கண்டு பிடிப்பது?

சர்வேசுரன் மிகுந்த தாராளமுள்ள கரத்தால் மனிதனின் மீது பொழிந்துள்ள அவருடைய அளவற்ற நன்மைகளுக்காக, அவருக்கு உரிய துதி புகழ்ச்சியிலும், கனத்திலும் நன்றியறிதலிலும் ஆயிரத்தில் ஒரு பகுதியையாவது அவருக்குச் செலுத்த வல்லதாக இருக்கும்படி போதுமான அளவுக்கு மேலானதும், பக்திக்குரியதுமான ஒரு பலிப் பொருளை எங்கே கண்டுபிடிப்பது? நற்கொடை கொடுப்பவரின் மகத்துவத்தையும், கொடையின் உயர்வையும் மதித்துப் போற்ற வல்லதாயிருக்கும்படி போதுமான அளவுக்கு மேலானதாக இருக்கிற ஒரு பலிப்பொருளை எங்கே கண்டுபிடிப்பது?

பாவத்தால் கடவுளிடமிருந்து எடுக்கப்பட்ட சங்கை வணக்கத்தை அவருக்குத் திருப்பித் தர வல்லதாகிய ஒரு பலிப் பொருளையும் காணிக்கையையும் எங்கே கண்டுபிடிப்பது? பாவம் அளவற்றவராகிய ஓர் ஆளின் மகத்துவத்தைக் குறைப்பது என்பதாலும், அதன் அம்புகள் அளவற்ற மகத்துவத்தின் சங்கை வணக்கத்திற்கு எதிராக எய்யப்படுகின்றன என்பதாலும், பாவம் ஓர் அளவற்ற குற்றமாக இருக்கிறது என்றால், நிச்சயமாக, தனது தன்மையில் அதற்கு ஒப்பானதும், குற்றத்தைப் போல மதிப்பில் அளவற்றதுமான ஒரு பரிகாரம் அவசியமாயிருக்கிறது. எந்தப் பலிப் பொருள் கடவுளுக்கு ஓர் அளவற்ற சங்கை வணக்கத்தைச் செலுத்த முடியும்? அவருடைய நிந்திக்கப்பட்ட மகத்துவத்திற்கு நேர்ந்த அவமானத்திற்குச் சமமான ஒரு பரிகாரத்தைச் செய்து, அந்த மகத்துவத்தை மீண்டும் ஸ்தாபிக்க எந்தப் பலிப்பொருளால் இயலும்?

இந்த எல்லாக் காரணங்களாலும், கடவுளுக்குப் பலியிடப்படக் கூடிய ஒரு கடவுளே தேவையாயிருந்தார் என்பது தெளிவாகிறது. அப்போது, அப்போது மட்டுமே, தம்முடைய படைப்பால் தமக்கு முழுத் தகுதியுள்ள முறையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு பலியைக் கடவுள் கொண்டிருப்பார்.

ஆனால் கடவுளோ, தாம் இருக்கிற இருப்பில், துன்பப்படவோ, பலியிடப்படவோ இயலாது. அதற்கு ஒரு தேவ-மனிதர், நம்மோடு இருக்கும் கடவுளாகிய எம்மானுவேல், சேசுக்கிறீஸ்துநாதர் தேவைப்படுகிறார். அவர்தான் கடவுளின் அளவற்ற மகத்துவத் திற்குத் தகுதியுள்ள ஒரு பலியைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க முடியும். ஏனெனில் அவர் தம்மிலேயே மாசற்றதனமாகவும், தம் செயல்கள் அனைத்திலும் அளவற்றவராகவும் இருக்கிறார். அவர் தம் மனித சுபாவத்தில் மட்டும் துன்பப்பட்டாலும், இந்தத் துன்பங்கள் அந்த மனித சுபாவத்தைத் தம்மில் தாங்கியுள்ளவரும், தம் வழியாக அதைச் செயல்படச் செய்பவருமான அளவற்ற தேவ ஆளிடமிருந்து தங்கள் அளவற்ற மதிப்பைப் பெற்றுக்கொண்டன.

ஆனால் கண்டிப்பான முறையில் பேசும்போது, இரண்டு நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படாவிட்டால், நம் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரால் கடவுளுக்குச் செலுத்தப்பட்ட பலி மனுக்குலத்திடமிருந்து வந்ததாகச் சொல்லப்பட்டிருக்க முடியாது.

முதலாவது அந்த மனுஷீகம், மனுக்குலத்தின் மனிதத் தலைமையும், மனுஷீகத்தின் அனைவரிலும் உயர்ந்த பிரதிநிதி யுமானது, கடவுளுக்குத் தகுதியுள்ள ஒரு பலியைச் செலுத்துவது தொடர்பாக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டது என்று சொல்லப்படும்படியாக, அது சுயாதீனமான முறையிலும், தானே முன்வந்தும், பலியிடப்பட வேண்டிய அந்த சுபாவத்தை அவருக்குத் தர வேண்டும். இரண்டாவது நிபந்தனை, அதே பிரதிநிதி, அதே அனைவரிலும் உயர்ந்த அந்த மனித ஆளுமை, பலிச் செயலில், அதே ஒப்புக்கொடுத்தல் மீண்டும் செய்யப்படவும், அந்த உன்னதச் செயலில், அதற்குத் தேவையான, ஒரு மாசற்ற சிருஷ்டி யால் இயலக் கூடிய சகல புண்ணியங்களோடும், விசேஷமாக ஓர் உன்னதமான வேதசாட்சியத்தாலும் இணைந்திருக்கவும், அந்தப் பலிச் செயல் முழுவதிலும் பலிப் பொருளானவரோடு உடன் இருக்கவும் சம்மதிக்க வேண்டும்.

இந்த இரண்டு நிபந்தனைகளும் இன்றியமையாதவையாக இருந்தன. ஏனெனில் நாம் அடிக்கடி குறிப்பிட்டுள்ளபடி, மனிதர்கள் செலுத்தும் ஆராதனை, மகிமையை, அதன் மாதிரியும் அச்சுமான காரியத்தின் சிகரத்திற்கு மேலெழும்பச் செய்வதில், மனிதன் செய்ய சாத்தியமே இல்லாத எல்லாவற்றையும் செய்வதற்குச் சித்தமாயிருந் தார்; ஆனால் அவர் அதற்கு மேல் செய்ய விரும்பாமல், மனிதன் செய்யக் கூடியது அவனால் செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தார். மனிதன் இந்த நோக்கத்திற்காக, சுதந்திரமான முறையில் கிறீஸ்துநாதருக்கு மனித சுபாவத்தைத் தரவும், பலிச் செயலில் முறைப்படியான தன் சம்மதத்தைத் தரவும், துன்பத்தில் தன் பங்கை எடுத்துக்கொள்ளவும் முடியும். இந்த இரு நிபந்தனை களையும் கடவுள் மனிதனிடமிருந்து எதிர்பார்த்தார்.

மனுக்குலத்தின் மனிதத் தலைவி என்னும் முறையிலும், மனுக் குலத்தின் பிரதிநிதி என்னும் முறையிலும், மங்கள வார்த்தை திருநாளன்று தன்னுடைய அற்புதமான ஆகட்டும் என்னும் வார்த்தையை உச்சரித்தபோது, முதல் நிபந்தனையை நிறைவேற்றி னார்கள். கல்வாரியில், சிலுவையின் அடியில் நின்றபோது அவர்கள் இரண்டாம் நிபந்தனையை நிறைவேற்றினார்கள். அந்த இரத்தம் தோய்ந்த மலையின் மீது, இரண்டு பலிப் பொருட்களும், இரண்டு குருக்களும் இருந்தார்கள்: ஒருவர் அளவற்றவரும், மாசற்றவருமான பலிப்பொருளான நம் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதர், அவர் தம் சிலுவையாகிய பலிபீடத்தின் மீது இருந்தார்; மற்றொருவர், மனிதப் பலிப் பொருள், அவர்களும் மாசற்றவர்களாகவே இருந் தார்கள், அவர்கள் அவருடைய கறைதிரையற்ற திருமாதாவான மாமரி. சேசுக்கிறீஸ்துநாதர் தலைமைக் குருவாயிருந்து, உண்மை யாகவே பலியை ஒப்புக்கொடுத்தார்; மாமரி அந்தப் பலியில் ஒத்துழைத்த பெண்குருவாக இருந்தார்கள். அவர்கள் பலியாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த முந்தின காணிக்கையை மீண்டும் ஒப்புக்கொடுக்க சம்மதிக்கும்படியாகவும், அந்தப் பலிச் செயலில், அந்தப் பலியில் உடன் இருக்கவும், ஒத்துழைக்கவும் அவசியமான புண்ணியங்கள் அனைத்தையும் அனுசரிக்கும்படியாகவும், மனுஷீகத்தின் பங்கிற்கு, அவர்கள் அங்கே இருந்தார்கள். சிருஷ்டிகரின் மகிமையிலும, மகத்துவத்திலும் அவருடைய அளவற்ற இலட்சணங்களிலும், கடவுளின் பரிபூரண சார்பற்ற நிலை மற்றும் இராஜரீகத்திலும், சகல காரியங்களின் மீதும் அவருடைய ஆளுகையிலும், ஜீவியத்தின் மீதும் மரணத்தின் மீதும் அவருடைய முழுமையான ஆதிக்கத்திலும் ஒரு முற்றிலும் பக்திக்குரியதும், அற்புதமானதுமாகிய விசுவாசத்தால் நிரம்பியவர்களாக, மாமரி சிலுவையடியில் நின்றார்கள். மனுக்குலத்திற்குச் செய்யப்பட்ட அவருடைய நன்மைகளின் உயர்வான தன்மையையும், தாராளத் தையும் பற்றிய மிகுந்த பக்திக்குரியதும், அற்புதமானதுமான நன்றியறிதலால் நிரப்பப்பட்டவர்களாக அவர்கள் நின்றார்கள்; படைப்பின் ஒன்றுமில்லாமை மற்றும் கடவுளின்றி எந்த விதத்திலும் செயலற்ற தன்மையில் மிகுந்த பக்திக்குரிய விசுவாசத்தோடு அவர்கள் நின்றார்கள்; அவருடைய அளவற்ற மகத்துவத்தையும், அர்ச்சியசிஷ்டதனத்தையும், அவருடைய மகிமையையும், அவருடைய மேன்மையையும் பற்றிய மிக மேன்மையுள்ளதும், மிகத் துல்லியமானதும், மிகப் பரந்ததும், மிக ஆழ்ந்ததுமான மதிப்பை அவர்கள் கொண்டிருந்த அதே சமயத்தில் பாவத்தின் அருவருப்பு மற்றும் கெடுமதி பற்றியதும், அது கடவுளின் அளவற்ற மகத்துவத்தின் மீது ஏவுகிற நிந்தை அவமானங்களின் தன்மையைப் பற்றியதுமான மிகுந்த இராஜரீக உணர்வோடும், அறிவோடும் அவர்கள் இருந்தார்கள். மனுக்குலத்திலும் படைப்பிலும் மற்ற அனைவருக்கும் மேற்பட்டதாகிய ஓர் அறிவைக்கொண்டு அவர்கள் இதையெல்லாம் அறிந்திருந்தார்கள். இந்தக் காரியங்களைப் பற்றிய மிகவும் உயர்ந்த அறிவால் நிரப்பப்பட்டு, மனிதர்களுடையவும், சம்மனசுக்களுடையவும் அறிவுகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து நின்றாலும், அந்தக் கணத்தில் மாமரி கொண்டிருந்த அறிவோடு அவை ஒப்பிடப்படவும் இயலாதவையாக இருந்தன.

மேலும் தன் முழு மனதையும் ஆத்துமத்தையும் இருதயத் தையும், மாம்சத்தையும் உருக்கப் போதுமான தெய்வீக மகத்துவத்தின் மீதான ஒரு அச்சத்தையும் வணக்கத்தையும் அவர்கள் உணர்ந்தார்கள். தேவ துதிபுகழ்ச்சியிலும், நன்றியறிந்த தோத்திரத் திலும் தன்னையே கரைத்து விடுவதற்கான ஓர் ஆசையையும், உந்துதலையும், தன்னை முழுமையாக ஆட்கொண்ட ஓர் ஏக்கத் தையும் அவர்கள் உணர்ந்தார்கள். தன்னை ஒன்றுமில்லாமைக்குள் ஏறக்குறைய மூழ்கடித்து விடக் கூடிய ஒரு செயலற்றதனத்தைக் கடவுளுக்கு முன்பாக அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் கடவுளின் மகிமையின் மீது தன்னை ஆட்கொள்ளும் எத்தகைய ஒரு பக்தி யார்வத்தையும், அவருடைய மகிமை மீண்டும் ஸ்தாபிக்கப்படுவதில் எத்தகைய ஏக்கத்தையும், நிந்திக்கப்பட்ட கடவுளின் மகத்துவத் திற்காகத் தன் மனதில் கொழுந்து விட்டெரிந்ததும், மிகப் பலமானதும், மிக வலிமையானதும், மிகவும் ஆட்கொள்வதுமான எத்தகையதொரு துக்கத்தையும் உணர்ந்தார்கள் எனில், அவர்களுடைய சுயம் முழுவதுமே, ஒரு பேச்சு வகைக்கு, அச்ச வணக்கமாகவும், அர்ப்பணமாகவும், துதி புகழ்ச்சியாகவும், துயரமாகவும் மாற்றப்பட்டது. இந்த எல்லாவற்றையும் அவர்கள் தனக்காக அனுபவித்தார்கள். இதையெல்லாம், தான் எதனுடைய பிரதிநிதியாக இருந்தார்களோ, அந்த மனுக்குலத்திற்காக அவர்கள் அனுபவித்தார்கள். ஓ! இத்தகைய உணர்வுக்கு மாம்சத்தையும் இரத்தத்தையும் கொடுக்கிற பலிப்பொருளும் காணிக்கையாகவும் இருந்தவர்களே! ஓ! இந்தப் பிரமாண்டமான அந்தரங்க தகனப் பலியின் கொந்தளிக்கும் பேரலைகளுக்கு, இந்த பக்திக்குரிய, சுயத்தை எரிக்கிற ஒப்புக்கொடுத்தலுக்கு, வடிகால் தருகிற பலிப் பொருளும் காணிக்கையாகவும் இருந்தவர்களே! அவர்கள் தன் இருதயமாகிய பீடத்தின் மீது தன்னையே பலியாக்க விரும்பி னார்கள். தன் மாசற்ற இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் சிந்த அவர்கள் விரும்பினார்கள். ஆனால் இவற்றால் என்ன பயன் இருந்திருக்கும்?

கடவுளின் கனத்திற்காகவும் மகிமைக்காகவும் பலியாக்கப் பட்டிருக்கக் கூடிய அவர்களுடைய வாழ்வு அவருக்குத் தகுதியான விதத்தில் அவருக்குரிய ஆராதனையைச் செலுத்தியிருக்காது. நன்றியறிதல் கீதங்களின் ஒரு வெடிப்பில் கையளிக்கப்பட்டிருக்கக் கூடிய அவர்களுடைய வாழ்வு போதுமான அளவுக்கு அவரைப் போற்றித் துதித்திருக்காது. கடைசித் துளி வரை சிந்தப்பட்டிருக்கக் கூடிய அவர்களுடைய இரத்தம் கடவுளின் திருடப்பட்ட மகத்துவத்தை அவருக்குத் திரும்பத் தந்திருக்காது; அது கடவுளுக்குச் செய்யப்பட்ட நிந்தை அவமானத்திற்குப் பரிகாரமாக இருந்திருக்காது. அது மனுக்குலத்தை இரட்சித்திருக்காது. ஓ! கடவுளுக்குத் தகுதியுள்ள ஒரு பலிப்பொருளுக்காக! அவர்கள் தன் கண்களை உயர்த்தி, சிலுவையோடு பிணைக்கப்பட்டிருக்கிற தன் திருமகனின் மாசற்ற சரீரத்தின் மீத அவற்றைப் பதிக்கிறார்கள். நிஜமான பலிப்பொருளானவரும், நிஜமான குருவானவரும் அதோ இருக்கிறார்!

எல்லா விதத்திலும் பிரமாண்டமுள்ளதும், கடவுளுக்கு மெய்யாகவே தகுதியானதுமான காணிக்கை அங்கே இருக்கிறது. அவர்கள் தன் மனதினுடையவும், ஆத்துமத்தினுடையவும், இருதயத்தினுடையவும், உணர்வினுடையவும் முழுமையான தீவிரத்தோடு, தான் முன்பு ஒரு முறை செய்த காணிக்கை ஒப்புக் கொடுத்தலைப் புதுப்பிக்கிறார்கள். அதைத் தன் சார்பாகவும், மனுக்குலத்தின் சார்பாகவும் அவர்கள் புதுப்பிக்கிறார்கள். அவர்கள் சேசுநாதரின் மனதோடும், உணர்வுகளோடும், அவருடைய இருதயத் துடிப்புகளோடும் தன்னை ஒன்றிணைத்துக்கொண்டு, அவரை தகுதியுள்ள ஆராதனைப் பலியாகவும், புகழ்ச்சிப் பலியாகவும், பாவ மன்னிப்புக்குரிய பலியாகவும், பாவப் பரிகாரப் பலியாகவும், கடவுளுக்கு முற்றிலும் தகுதியுள்ள மறு ஒன்றிப்பின் பலியாகவும் ஒப்புக்கொடுக்கிறார்கள்.

இந்த ஒப்புக்கொடுத்தல் அவர்களுடைய தாய்க்குரிய இருதயத்திற்கு துக்கம், மரண அவஸ்தை ஆகியவற்றின் பிரசவ வேதனையை விளைவித்தது என்பது உண்மைதான், உண்மையில் மாமரியின் துக்கத்தையும் அவஸ்தையையும் வேறு எந்த சிருஷ்டியோ, அல்லது தாயோ ஒருபோதும் அனுபவித்ததில்லை, அந்த வேதனை அவர்களை வேதசாட்சிகளின் இராக்கினியாக ஆக்குவதாக இருந்தது, பொங்கிப் பெருகி நிரம்பி வழிகிற கசப்பின் பெருங்கடல் ஒன்றோடு மட்டுமே அவர்களுடைய வேதனை ஒப்பிடப்பட முடியும். ஆனால் அவர்கள் அப்போது வெறுமனே தாயாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் பெண் குருவாக, மனுக் குலத்தின் பிரதிநிதியாக, மிக உன்னதமான ஸ்திரீயாக, இரண்டாம் ஏவாளாக இருந்தார்கள். ஒரு மிக உத்தமமான தாராளத்தோடு அவர்கள் தன் தாய்க்குரிய உணர்வுகளை அடக்குகிறார்கள்! கடவுளின் சங்கை மகிமையின் மீதான ஆர்வமும், அவருடைய நிந்திக்கப்பட்ட மகத்துவத்தைப் பற்றிய துக்கமும், மனுக்குலத்தின் மீதான நேசமும் மற்ற எல்லாச் சிந்தனைகளையும் மேற்கொள் கின்றன, மேலதிக தீவிரத்தோடும், மேலதிக நேசத்தோடும், மேலதிக பக்திப் பற்றுதலோடும், மேலதிக சுய மறத்தலோடும், மேலதிக பக்தியோடும் அவர்கள் தன் அதியற்புதமான ஆகட்டும், அப்படியே ஆகக் கடவது என்னும் வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் தான் தந்த அதே சம்மதத்தை அவர்கள் திரும்பத் திரும்ப இப்போது தருகிறார்கள், இதோ, சேசுக்கிறீஸ்நாதர் பலியாக்கப்படுகிறார். சேசுக்கிறீஸ்துநாதரைத் தன் சொந்தக் கரங்களால் சிலுவையில் அறைவது அவசியமாயிருந்திருந்தால், அவர்கள் அதற்கும் அதே வார்த்தையைச் சொல்லியிருப்பார்கள். கடவுளின் சங்கை மகிமைக்காகவும், அவருடைய நிந்திக்கப்பட்ட மகத்துவத்தைப் பரிகரிக்கவும், மனுக்குலத்தின் இரட்சணியத்திற்காகவும் ஒரு சர்வேசுரன் பலியாக்கப்படுகிறார், ஒரு சர்வேசுரனுடைய பலியால் சர்வேசுரன் மகிமைப்படுத்தப்படுவதற்கு மாமரியே கருவியாக இருக்கிறார்கள்!