இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பிப்ரவரி 07

அர்ச். ரோமுவால்ட். மடாதிபதி (கி.பி. 1027) 

உயர்ந்த வம்சத்தவரான ரோமுவால்ட் என்பவர் வாலிபப் பிராயத்தில் ஆடல் பாடல்களிலும், வேடிக்கை விநோதங்களிலும், வேட்டையாடுவதிலும் காலத்தைச் செலவழித்து தன் ஆசாபாசத்துக்கு அடிமையாய் ஜீவித்து வந்தார். ஓர் வழக்கின் நிமித்தம் ரோமுவால்டின் தந்தை வேறொருவனைக் கொலை செய்துவிட்டார்.

இறந்தவனுடைய ஆத்தும் இளைப்பாற்றிக்காக ரோமுவால்ட் ஒரு மடத்தில் சேர்ந்து, 40 நாள் கடின தபம் புரிந்துவந்தார். இதற்குப்பின் அவர் அச்சபையில் சேர்ந்து சந்நியாசியாகி சில காலத்துக்குப்பின் வேறொரு தபோதனரிடம் போய் புண்ணிய வாழ்வைக் கடைபிடித்து அதில் பூரண தேர்ச்சியடைந்தார்.

பசாசால் இவருக்குண்டான தந்திர சோதனைகளை ஜெபத் தாலும் ஒருசந்தியாலும் ஜெயித்தார். இவர் இராயப்பர் என்னும் வேறொரு பிரபுவுடன் சேர்ந்து கடின தபங்களைச் செய்து அநேக சந்நியாச மடங்களை ஸ்தாபித்து அவைகளுக்கு அதிசிரேஷ்டரானார். இம்மடத்திலிருந்தவர்களில் அநேகர் சிறந்த புண்ணியவாளரும் வேதசாட்சிகளுமானார்கள்.

இவர் ஏழு வருட காலம் ஒரு வனத்தில் தனிமையாய் ஒதுங்கிப் புண்ணிய தவச் செயல்களை கடைப்பிடித்து, தாம் தீர்க்கதரிசனமாகக் கூறிய நாளிலே பாக்கியமான மரணமடைந்து, நித்திய இளைப்பாற்றியை அடைந்தார்.

யோசனை 

நமது துர்மாதிரிகையால் கெட்டுப்போனவர்களுக்காக வேண்டிக் கொள்ள மறக்கலாகாது.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ரிச்சர்ட், இராஜா.
அர்ச். தெயதோருஸ், வே.
அர்ச். திசேயின், து.
அர்ச். ஆகுலஸ், மே.வே.