புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அநியாயமாய் சம்பாதித்த பணம் தர்மத்திற்கு செலவாகுமட்டும் ஓர் ஆத்துமத்திற்கு உண்டான ஆக்கினை.

ஹங்கேரி நாட்டில் கிளமெண்ட் என்ற இராணுவ வீரன் ஒருவன் பணத்தாசையால் ஒருவனிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தவனுடைய பகைவனைக் கொலை செய்தான். இக்கொலையைச் செய்த பிறகு அவன் மனசாட்சி அவனை உறுத்தியது. மேலும் இப்பாவத்தினால் தனக்கு ஆண்டவர் கடும் தண்டனை அளிப்பாரென்று பயந்தவனாய் ஆண்டவரின் கோபத்தைத் தணிக்க தான் பெற்ற இலஞ்சப் பணத்தை வியாகுல மாதாவின் சுரூபம் செய்வதற்குச் செலவழிப்பதாக ஆண்டவரிடம் பொருத்தனை வைத்தான். ஆனால் அவன் சொன்ன வாக்கை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வந்தவன் ஒரு நாள் திடீரென்று இறந்து போனான்.

உத்தரிக்கிற ஸ்தலத்திற்குப் போய் தன் பாவங்களுக்காக கடுமையான நெருப்பில் வெந்து வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த அவன் ஆத்துமம் ஆண்டவரின் சித்தப்படி ஒரு நாள் பூமிக்கு வந்து கன்னியாஸ்திரீ ஒருவருக்குத் தோன்றியது. அவரிடம் “நீங்கள் என் மனைவியைச் சந்தித்து ஒரு பெட்டியில் நான் வைத்திருக்கும் பணத்தை அவளிடமிருந்து வாங்கி  அதைத் தேவமாதாவின் சுரூபம் செய்வதற்கு கொடுங்கள். ஏனெனில் நான் உலகில் வாழ்ந்தபோது இவ்விஷயமாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் உத்தரிக்கிற ஸ்தலத்திலே மிகுந்த வேதனை அனுபவிக்கிறேன்” என்று கூறி மறைந்தது.

கன்னியாஸ்திரீயோ கூச்சப்பட்டுக் கொண்டு இச்செய்தியை யாருக்கும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் அந்த ஆன்மா மேலும் இரண்டு மூன்று முறை அவருக்குத் தோன்றி தன் சேதியை தன் மனைவியிடம் தெரிவிக்கச் சொல்லி மன்றாடியது. இப்போதும் அந்தக் கன்னியாஸ்திரீ அந்த ஆத்துமத்தின் வேண்டுகோளை சட்டை பண்ணாததால் “அம்மா, என் மனைவிக்கு நான் உங்களிடம் சொல்லச் சொன்ன செய்தியை அவளிடம் கூறும்வரை உங்களை விடப்போவதில்லை. காரணம், உத்தரிக்கிற ஸ்தல நெருப்பில் கடுமையாக வெந்து கொண்டிருக்கிறேன்” என்று கூறி மறைந்தது. இதனால் நடந்த நிகழ்ச்சியை கன்னியாஸ்திரீ சில மனிதர்களிடம் தெரிவித்தார்.

கன்னியாஸ்திரீ சொன்ன செய்தியைக் கேட்ட பிரபு ஒருவர் அந்த ஆத்துமத்தின் பேரில் இரக்கம் கொண்டு ஒரு தச்சனை வரவழைத்து தானே பணம் கொடுத்து தேவமாதாவின் சுரூபம் ஒன்றை செய்யச் சொன்னார். அவன் சொற்படி அந்தத் தச்சனும் சுரூபம் செய்யத் தகுந்த மரம் தேடி காட்டில் அலைந்து நல்ல மரம் கிடைக்காமல் வீடு வரும் வழியில் தச்சனின் எதிரே ஒரு முதியவர் தோன்றி "என்ன தேடி வந்தாய்?” என்று கேட்க அவனும் விவரத்தைச் சொன்னான். உடனே அம்முதியவர் வலப்புறத்தே தம் கையைக் காட்டி அங்கே நான்கு வருடங்களுக்கு முன் வெட்டிப் போடப்பட்ட மரம் ஒன்று கிடப்பதாகவும், அது சுரூபம் செய்வதற்கு ஏற்றதாக இருக்குமென்றும் தெரிவித்தார். அவர் சொன்னபடி தச்சன் அவ்விடத்திற்குப் போய் அம்மரத்தைக் கண்டுபிடித்து தன் வீட்டுக்கு எடுத்துப் போய் தன் வேலையைத் துவங்கினான்.

சில நாட்களுக்குப் பிறகு கிளமெண்டின் ஆன்மா மீண்டும் கன்னியாஸ்திரீக்குக் காட்சி கொடுத்து “என் வேதனை தீர நான் இலஞ்சம் வாங்கிய பணத்தைக் கொண்டே சுரூபம் செய்ய வேண்டும்" என்று கூறிற்று. இந்தச் செய்திகளை அவன் மனைவி அறிந்தவுடன் பண ஆசையால் இவ்வளவு நாட்கள் அப்பணத்தை தொடாமலிருந்தாலும் கணவனுடைய ஆத்துமத்தின் பேரில் கொண்ட இரக்கத்தினால் அப்பணத்தை உடனே தச்சனிடம் அளித்தாள்.

சுரூபம் அழகுற முடிக்கப்பட்டு தேவமாதாவின் கோயிலில் வைத்தார்கள். பின்னர் கிளமெண்டின் ஆன்மா  மகிமையோடும், மகிழ்ச்சியோடும் கன்னியாஸ்திரிக்குத் தோன்றி அவரிடம் "இப்போது என் வேண்டுதல் நிறைவேறி விட்டதால் தேவமாதாவின் இரக்கத்தினால் என் வேதனை முடிந்து நான் சந்தோஷமாக மோட்சத்துக்குப் போகிறேன்" என்று சொல்லி மறைந்தது.

கிறிஸ்தவர்களே! உங்கள் ஆத்துமங்கள் பேரில் சுமந்த கடன் தீர்ப்பது பற்றியும், புண்ணிய செயல்களைச் செய்வதிலும் வாழும்போது கவனம் செலுத்தி வாருங்கள். ஏனெனில், நீங்கள் மரித்த பின்னர் உங்கள் மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ அவரவர் தாங்கள் பிழைக்கிற வழியைத்தான் பார்ப்பார்களேயொழிய, உங்கள் ஆன்மாவுக்கு உதவி செய்ய மறந்து போவார்கள். இப்படி கெட்டதனத்தினால்தான் கிளமெண்டின் ஆன்மா  உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகு காலம் கடின துன்பம் அடைய வேண்டியதாயிற்று. 

இப்படி ஏதேனும் பின்னால் நிகழ்ந்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவஸ்தைப்படுவதற்குப் பதில் உயிருடன் இருக்கும் பொழுது லஞ்சம் வாங்குவதோ, யாரையேனும் பணம் மோசம் பண்ணுவதோ வேண்டாம். பிறகு உத்தரிக்கிற ஸ்தலத்தில் இதை நிறைவேற்றுவது வரை கடினமாக கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை மறவாதீர்கள்.