புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சில பாவங்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் கிடைக்கும் நெடுங்கால தண்டனைகள்.

ஸ்பெயின் தேசத்தில் பிரான்சிஸ்கா என்ற நற்குணவதி ஒருத்தி இருந்தாள். இவள் கணவன் தன்னுடைய பணிநிமித்தம் வேறு நாட்டுக்கு வெகுநாட்களாய் சென்றிருந்தான். இதையறிந்திருந்த தீய எண்ணம் கொண்ட மனிதன் ஒருவன் பிரான்சிஸ்கா பேரில் ஆசை வைத்து அவளை அடையத் தீர்மானித்து தன் ஆசையையும் அவளிடம் வலியுறுத்தினான். நல்ல புண்ணியவதியான அப்பெண் அதற்குச் சம்மதிக்கவில்லை.

ஆனாலும் அக்கொடியவன் அவளைத் திரும்பத் திரும்ப விடாமல் தொடர்ந்து கட்டாயப்படுத்தி ஒரு நாள் அவளோடு பாவம் கட்டிக்கொண்டான். இதனால் மிகுந்த வேதனையடைந்த பிரான்சிஸ்கா சில மாதங்களுக்குப் பிறகு தான் கர்ப்பமாயிருப்பதை உணர்ந்தாள். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை கணவனுக்கும், பிறருக்கும் தெரியாமல் மறைக்க கருத்தடைக்கான மருந்தை வாங்கி உண்டு கருச்சிதைவு செய்தாள். அத்தோடு நில்லாமல் தன்னைக் கெடுத்தவனைக் கொலையும் செய்தாள்.

இந்த உண்மைகளையெல்லாம் தன்னை அறிந்த குருவானவரிடத்தில் கூட சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு கள்ளப் பாவசங்கீர்த்தனம் செய்து வந்த அவள் ஒரு நாள் தன்னுடைய மரணப் படுக்கையில் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பும் பெற்று மரித்தாள். பிரான்சிஸ்காவுக்கு புனித வின்சென்ட் பெரியே என்பவர் சகோதரர் அவளுக்கு நேர்ந்தவை பற்றி அறியாத அப்புனிதர் தன் சகோதரியின் ஆன்மாவுக்காக தவறாது ஆண்டவரை வேண்டிக் கொண்டார்.

ஒரு நாள் அவர் இப்படி வேண்டிக் கொண்டிருந்தபோது ஒரு பெண் நெருப்பிலே வெந்து துன்புறுவதையும் அவளுடைய கையில் இருந்த ஒரு சிறு குழந்தையை அவளே துண்டு துண்டாய்க் கடித்துத் தின்பதையும் தரிசனமாகக் கண்டார். வியப்பும் பயமும் கொண்ட அவர் “நீ யார்? குழந்தையை இத்தனை கொடூரத்தோடு ஏன் தின்கிறாய்? இயேசுநாதர் நாமத்தினால் கேட்கிறேன்" என்று கேட்க அவளோ "நான் பிரான்சிஸ்காதான்” என்று தன்னை அடையாளம் கூறிக்கொண்டு தன் வாழ்வில் நடந்த அனைத்தும் குறித்து அவருக்கு ஒன்றுவிடாமல் தெரிவித்தாள். மேலும் தன் பாவங்களைத் தீர்க்க பொதுத் தீர்வை நாள் வரையில் நான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கக் கடவுள் கட்டளையிட்டுள்ளதாகத் தெரிவித்தாள். மேலும் தான் கருச்சிதைவு செய்து குழந்தையைக் கொன்ற பாவத்துக்குத் தண்டனையாக தன் குழந்தையைத் துண்டு துண்டாகக் கடித்துத் தின்றதாகக் கூறினாள். அவள் பேரில் இரக்கமாயிருந்து அவளுடைய ஆத்துமத்துக்காக ஒரு நாள்கூட தவறாமல் முப்பது நாட்களும் திருப்பலி ஒப்புக்கொடுத்தால் வெகுகாலம் தான் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனை அனுபவிக்கத் தேவையிருக்காது என்றும் தெரிவித்து மறைந்தாள். புனித வின்சென்ட் பெரியே இச்செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனை கொண்டவராய் அவள் ஆன்ம இளைப்பாற்றிக்காக மிகுந்த பக்தியோடு முப்பது நாட்களும் தவறாமல் திருப்பலி ஒப்புக்கொடுத்து பிரான்சிஸ்காவின் ஆன்மா மோட்சம் போவதைக் கண்டார்.

கிறிஸ்தவர்களே! கர்ப்பத்தை மருந்தினால் கலைப்பதென்பது மிகக் கொடிய பாவம். ஒரு மனிதனைக் கொல்வது பெரிய பாவமென்றாலும், ஒரு பாவமும் அறியாத சின்னஞ்சிறு சிசுவை அதன் தாயே கொல்வது என்பது மிகவும் கொடிய செயல். குழந்தை ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அதைக் கருவிலேயே அழிப்பதென்பது மன்னிக்க முடியாத பெரும் பாவமாகும். ஏனென்றால் அக்குழந்தை மோட்சத்துக்கு செல்வது தடைபட்டுப் போகிறது. குழந்தையை தெரியாமல் கருவிலேயே அழிப்பது பாவம் என்று தெரியாதவர்கள், பாவத்தைச் செய்பவர்கள் மனம் வேதனைப்பட்டு மனம் திரும்பி நரகத்தில் விழாமல் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போனாலும் அங்கும் வேதனை அனுபவிக்கத்தான் வேண்டும்.

இப்படிப்பட்ட கொடிய, மன்னிக்க முடியாத பாவம் செய்பவர்கள் தாங்கள் பயப்படுவதோடு இத்தகைய பாவத்துக்கு உதவியாக இருப்பர்களும் பயப்பட வேண்டும்.  சில பேர் கருக்கலைப்புக்காக மருந்து கொடுப்பார்கள். சில பேர் அம்மருந்து பற்றி தங்களுக்குத் தெரியாதென்றாலும், அது பற்றித் தெரிந்தவர்களை அடையாளம் காட்டுவார்கள். இவர்களும் இந்தப் பாவத்துக்குப் பெரும் உதவி செய்பவர்களாவதால் இவர்களுக்கும் நிச்சயமாக கடும் தண்டனை உண்டு.