இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுவுக்கு நம்மை முழுவதும் கையளித்தல்!

கிறீஸ்துநாதர்: நீதிமான்களுடைய பாதை தின்மையை விலக்குகின்றது. தன் ஆத்துமத்தைக் காக்கிறவன், தன் வழியைக் காக்கின்றான் (பழமொழி.16:17).

என் மகனே! நீ எனக்கு உன் இருதயத்தைக் கொடுக்க விரும்புகிறாயா, அப்படியானால் நீ உன்னை விட்டு அகல வேண்டும்.

மனிதரை இரட்சிக்க நான் மோட்சத்தை விட்டு வந்தேன். என் சீடர்களுக்குப் போதிக்க நாசரேத்தூரை விட்டு அகன்றேன். மற்றவர்களுக்குப் போதிக்க என் தாயை விட்டு விலகினேன்.

நீ உன்னை விட்டுவிடு, அப்போது என்னைக் காண்பாய். உன் சுயநலப் பிரியத்தையும், உன் ஆசாபாசங் களையும் விட்டு விடு, அப்போது என் வரப்பிரசாதமும், வலிமையும் உனக்கு உண்டாகும். நீ உன்னை முழுவதும் எனக்குக் கையளித்தாலன்றி விடுதலையடைய மாட்டாய்.

அநீதியைத் தவிர்ப்பதற்கன்றி, ஏன் சுதந்திரத்தை விரும்பு கின்றாய்? இது வரை நீ பெற்றிருக்கும் செல்வமும், அதிகார மும், செல்வாக்கும், உன் ஆத்துமத்திற்கு இடையூறாய் இருக்குமாகில், செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் நீ அடிமையாயிருப்பது நலம்.

நன்மைக்கு உதவாத செல்வம் இருந்தும் பயன் என்ன? ஏழைகளுக்குக் கெடுதல் செய்யும் செல்வந்தனுக்கு ஐயோ கேடு! அவனது செல்வமே மனஸ்தாபப் பட முடியாத நிலைக்கு அவனைக் கொண்டுசென்று விடும்.

ஓர் ஏழை தனக்கு விரோதமாய்க் குற்றம் செய்தால், அதற்குத் தண்டனையாக அவனைச் செல்வந்தனாக்குவேன். ஆனால் அந்த ஏழை தன் அகங்காரத்தால் செல்வந்தனுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தால், அவன் அதிக தரித்திரத் திற்கும், துன்பத்திற்கும் ஆளாவான்.

நான் அவனவன் கிரிகைகளுக்குத் தக்கவாறு நீதி செலுத்துவேன். மனிதன் எப்பக்கம் சாய்ந்திருப்பானோ, அப்பக்கமே விழுவான்.

உன் ஈடேற்றத்தை மறந்து, மற்றவர்கள் மட்டில் மிதமிஞ்சின கவலை வைப்பது மதியீனம். மற்றவர்கள் தங்கள் கடமைகளில் கவலையீனமாய் இருந்தால், மற்றவர்கள் முன்னேற்றம் அடைந்தால் அல்லது தவறி னால், மெளனமாய் இருந்தால் அல்லது பேசினால், அதைப் பற்றி நீ ஏன் இவ்வளவு கவலை கொள்கிறாய்? முதன் முதலில் நீ குற்றவாளியா இல்லையா என்று உன்னையே விசாரித்துக் கொள். தீர்வை நாளில் ஆண்டவர் உன்னிடம் எந்தக் காரியங்களுக்குக் கணக்குக் கேட்க மாட்டாரோ, அந்தக் காரியங்களில் வீணாகக் காலம் போக்காதே. தன் வேலையில் கவனமாய் இருப்பவனுக்கு மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு நேரம் இராது. தன் காரியத்தில் கண்ணாயிருப்பவன் மற்றவர்களது குறைகளைக் கவனிக்க மாட்டான்.

நீ உன்னையே நன்றாக அறிந்துகொள்; நீ மண்ணாய் இருக்கிறாய் என்றும், தற்பெருமை கொள்ளவும், மற்றவர்களைக் குறைவாய் எண்ணவும் எவ்விதக் காரணமும் இல்லை என்று அடிக்கடி நினைத்துக்கொள். மற்றவர்கள் மட்டில் கவனம் செலுத்துவதற்கு பக்தி தங்களை ஏவித் தூண்டுவதாய்ச் சிலர் நினைக்கிறார்கள். அவர்களைத் தூண்டுவது அவர்களது சுயநல ஆணவமே.

எனது வரப்பிரசாதத்தைக் கொண்டிருப்பதாய், அல்லது என் நன்மையிலே ஆர்வமுடன் ஈடுபட்டிருப்பதாய்ச் சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் கொண்டிருப்பது அவர்களது தீய சுபாவ நாட்டமே. மின்னுவதெல்லாம் பொன்னல்ல. புண்ணியம் போலத் தோன்றுவதெல்லாம் புண்ணியமல்ல. எவனொருவன் தன்னைப் பற்றியும் தன் காரியங்களைப் பற்றியும் மாத்திரம் பேசுகிறானோ, அவனது இருதயத்தில் மிஞ்சிய சுயநலம் இருக்கிறது என்பது வெளிப்படை. நீயோ, என் மகனே, என்னைப் பின்பற்று. மற்ற கவலைகளை விட்டொழித்து, உன் கடமைகளைச் செய்.

உன் உத்தியோகத்தின் மதிப்பையும், உன் சுதந்திரத் தையும் காப்பாற்ற முயற்சிப்பது மதியீனம். இந்த வீண் பெருமையை நான் அங்கீகரிப்பதில்லை.

உன் மதிப்பைக் காப்பாற்ற வேண்டுமா? உன் சுதந் திரங்களைத் தியாகம் செய். இவ்விதமாய் நீ காட்டும் தியாகமும், நேசமும் ஒன்றுக்கு நூறாய்ப் பலனளிக்கும். நேர்மையற்ற எண்ணங்களை விட்டுவிடு. நயவஞ்சகம் பேசாதே. அப்பொழுது மற்றவர்கள் உன்னை மதித்து நடப்பார்கள். இலகுவில் மற்றவர்களை வசப்படுத்தி, உனக்கு ஜெயம் கொடுப்பது எதுவெனத் தெரிய வேண்டுமா? மறைந்த ஜீவியமும், அயலார்க்கு நன்மை செய்யும் பிறர்சிநேகமுமே.

நீ நேசிப்பாயானால் உன்னை வெறுப்பவன் யார்? நேசம், சாந்தம், மரியாதை, இவை பலன் கொடாமல் போகாது. மனிதனது சுபாவம் இதுவே, தன்னுடைய தரித்திரத்திற்கும், பலவீனத்திற்கும் தக்கவாறு, மற்றவர்களது நேசத்தையும், ஆறுதலையும் அவன் எதிர்பார்க்கிறான். கேவலமான மனிதனின் தீய குணமோ, மிஞ்சின கண்டிப்பும், சுயநலமுமாம். இக்குறற்றங்களில் நீ விழாதே.

உன் சிநேகிதர்கள் என்ன ஜீவியம் ஜீவிக்கிறார்கள் என்று சொல்வாயானால் உன் குற்றங்கள் என்னவென்று நான் சொல்வேன். உனக்கு வருத்தம் கொடுப்பது எதுவென்று சொல்வாயாகில், உன் புண்ணிய ஜீவியம் எத்தகையது என்று சொல்வேன். உனக்குச் சமமானவர்களை வெறுப்பாயாகில், நீ அதிக அவமானம் அடைவாய். உனக்குப் பெரியோராய் இருப்பவர்களுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பாயானால், உனக்குக் கீழ் இருப்பவர்கள் உனக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள். சிறு காரியங்களில் கவலையில்லாமல் இருப்பாயாகில் பெரிய காரியங்களில் மன வருத்தம் அடைவாய்.

என் மகனே! அடிக்கடி மற்றவர்களுக்கு மரியாதை காட்டுவாயானால், சில சமயங்களிலாவது மற்றவர்கள் உனக்கு மரியாதை காட்டுவார்கள் அல்லவா?

நீ உன்னையே திருத்த முடியாவிட்டால், மற்றவர்களைத் திருத்த உன்னால் எப்படி முடியும்? உன் குறைகளை நீக்கிக் கொள்ளாமல், மற்றவர்களை நீ எவ்விதம் கண்டிப்பாய்? மற்றவர்கள் உன்னை நேசிக்க வேண்டுமா? நீ மற்றவர்களை நேசி. மற்றவர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டுமா? நீ உன் கடமைகளைச் செய்.

என் நேச மகனே! என் புத்திமதிகளை வெறுப்பாயாகில், தண்டனைகளால் நான் உனக்குக் கற்பிப்பேன். நீ என்னைத் தேடுமுன், நான் உன்னைத் தேடினேன் என்பது ஞாபகம் இருக்கட்டும். நீ என்னைப் பார்க்க முதலாய்ப் பிரியமில்லா திருந்தபோது, என் கண்கள் உன்னையே நோக்கிக் கொண் டிருந்தன. என்னிடமிருந்து சந்தோஷத்தை எதிர்பார்த்தாய். நான் உனக்கு என் வரப்பிரசாதத்தைக் கொடுத்தேன். நீ ஒரு சிருஷ்டியைத் தேடினாய். நானோ சிருஷ்டிகராகிய என்னையே உனக்குத் தந்தேன். எனக்குப் பிரியப்பட வேண்டுமானால், என் கதிரிகளுக்காக உன்னையே நீ தியாகம் செய். என் மகனே! என் அருமை மகனே! உலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பாவிகளைக் காணும்போது, உத்தமனாய் ஆவதற்கு நீ எப்படி மறுக்க முடியும்?

ஆத்துமம்: ஆண்டவரே! நீ என்னைப் பரிசோதித்து அறிந்திருக்கிறீர் (சங்.138:1). என் நினைவுகள் உற்பவமாகு முன்னே நீர் அவைகளை அறிந்திருக்கிறீர். நான் கடக்கும் வழியையும் என் ஜீவியத்தின் தோரணையையும் தீர்க்கமாய் அறிந்திருக்கிறீர். என் நாவில் சொல் பிறக்குமுன்பே என் வழிகள் எல்லாம் உமக்கு ஏற்கெனவே தெரியும் (சங். 138:34).

இதோ ஆண்டவரே! நடந்த யாவும் நடக்கப் போகிறவையனைத்தும் நீர் அறிந்தேயிருக்கிறீர். நீர் என்னை உருவாக்கி உமது கரத்தை என் பேரில் வைத்தீர் (சங்.138:5). உமது ஞானம் அற்புதமான விதமாய் எனக்கு மேற்பட் டிருக்கிறது. அது மிக்க உன்னதமாயிருப்பதால் எனக்கு எட்டுவதில்லை. உமது இஸ்பிரீத்துசாந்துவிற்கு மறைவாக நான் எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தை விட்டு நான் எங்கு ஒளிவேன் (138:6,7)? நான் வானத்தில் ஏறினால் நீர் அங்கு வீற்றிருக்கிறீர். பாதாளத்தில் இறங்கினால், நீர் அங்கேயும் இருக்கிறீர் (138:8).

மனவல்லய ஜெபம்: என் தேவனாகிய சேசுவே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் சிநேகிக்கிறேன். 

(50 நாள் பலன் - 9ம் பத்திநாதர்).