புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மனவல்லயக்காதல்

உலக நமைப்பகைக்க உற்றார்வேம்பானார்
கலகலத்துப் போனதுடல் கண்டாய் அலைமனமே

புன் சுகத்தாற் பட்ட துயர் போது நமது பரன்
தன் பதத்திற் போய் விழுவோந் தாழ்ந்து.

அருண்முகிலே நேசநிறை ஆழ்கடலே நற்கருணை மருவுந்
திருச்சேசு மணியே தயாநிதியே.

தூயோர்மனத்திருத்துந் துணைப்பதத்தில் வந்திருக்க
நாயேன் மனங்கலங்கி நடுக்கமுற்றேன் தற்பரமே.

எனது பாவக் கொடுமைக் கெண்கோடி பங்கதிகம்
நினது தயையென்றே நிச்சயமாய் நான் றெளிந்தேன்.

வேதாயெனைப்படைத்த வித்தகனே நின்னடிக் கீழ்
ஊதாரிப்பிள்ளை உருமாறிவந்தேனே.

நித்தியனே நீதந்த நிலை ஞான செல்வங்கள்
அத்தனையும் பாழ்க்கிறைத்த அருங்குறையை என்ன சொல்வேன்?

புவியுடனே பாழுடற்கும் புகைபோல் மறைந்தொழியும்
நவமகிமைக்கும் அழித்து நாணி நலங்குலைந்தேன்.

உடுத்திடவோ ஆடையற்றேன் உணஞான உணவுமற்றேன்
அடுத்துவோர் சிக்கல்கல ஐயா உனையன்றி

சற்குருவே ராசாவே சாமியுன்றன் சந்நிதியில்
நிற்கத்தகாதவனாய் நின்றழுதேன் பூரணமே.

வல்லவனாமுன்னுடைய மைந்தனென இக்கொடியன்
சொல்லவுந்தானாவுளதோ? சுகஞான வாரிதியே.

கட்டாயமா யெனக்குக் கதியளிப்பாயென்றுமடி
தொட்டுப் பிடித்திருக்கத் துணிவுமுண்டோ ? சுந்தரமே.

அமரருட னின்னடியா ரானவரோ டம்பரத்திற்
சமரசபூரிப்படையத் தானெனக்குச் சொந்தமுண்டோ .

ஆனாலுமென்கோவே ஐயா உன்னொரு மொழியால்
வானாதி மூவுலகும் வந்ததென நானறிவேன்.

ஆருமறிதற்கரிய அகண்டவண்ட கோள்கையின்
பேருருவமத்தனையும் பேசிற் சிறிதளவே.

ஏகா அவைகளெல்லா மிணைத்தொன்றோ டோன்றுதட்டா
தாகாய மாவெளியிலமைத்த தறியேனோ?

அந்தரத்தில் நன்னீரும் ஆழ்கடலிலுவர் நீரும்
சிந்தாமலுன்னாணைச் செயற்கமையச் செய்தனையே!

கன்னிசுசானாளை துட்ட காமிகளின் கையில் நின்று
மின்னும் பரிவு கொண்டே மீட்டதறியேனோ?

செங்கடலை யேகடத்தி தீயபாரோன் சிறையில்
பங்கமுற நின்றோரைப் பரிந்துமீட்டாயிலையோ?

அரவிந்தப் பாதமதி லன்பு கொண்ட மாபாவி
மரியமதலேனாட்டு வான்முடியைச் சூட்டிலையோ?

இயல்பான சாவில் நின்று ஏனோக்கெலியாவைத்
தயவாய்ப்புரந்த அந்தத் தண்ணருளென் மேலிலையோ.

நோயனையோர் பெட்டகத்தில் நோகாமல் வான் தாவிப்
பாய்நீரில் காத்த பெரும் பட்சமென்மேல் வையாயோ?

ஊரென்ற பட்டணத்தில் உற்றவஞ்ஞானத்தில் நின்று
பாரில் அபிரகாமைப் பாதுகாத்தது பொய்யோ?

ஈசாக்கைத்தந்தை இடுபலியிற்காத்ததுதான்
தேசமறியாத செயலோசொல் தேசிகனே?

துன்பதரித்திரத்தில் சோபென்னும் புண்ணியனை
இன்பமுடனாதரித் தெவரறியார் பூரணமே?

சோதோமென்னும் பட்டணத்தைச் சுட்டெரித்த தீயில் நின்று
சாதுள்ள லோத்தையன்று சாமிநீ காத்தனையே.

எகிப்தென்ற மாநகரில் இராசனாகிய பாரோன்
பகையில் மோயீசனையே பரிந்துகாத் திட்டனையே.

பாவிகோலியாத்தின் படையில் சவுலின் பகையில்
தாவீதைக் காத்ததிந்தத் தரணியெல்லாஞ் சொல்லாதோ.

வனமுரட்டுச் சிங்கங்கள் வாழ்குகையி லன்றொருநாள்
தனியேலைக் காத்த பெருந் தயையையறி யாருமுண்டோ ?

திடமுடைய நன்மூன்று சிறுபாலரை நபுக்கன்
இடுஞ்சூளையிற்காத்த தெனக்குத் தெரியாதோ?

துன்னுஞ் சிறைவிலங்கில் தூயராயப்பரொடு
சின்னப்பரையும் புரந்த செய்தியெங்கும் வந்திலையோ?

திட்டமறை சாட்சியெனுந் தேக்கிலாள் கன்னிகையை
நீட்டூர ஆக்கினையில் நீக்கினவன் நீயலவோ?

இத்தனையுஞ் செய்தவுனக் கென்னையுமோராளாக்க
மெத்தப்பிரயாசமென விண்ணுமண்ணுஞ் சொல்லாதே. .

நிச்சயமாயித்தனையும் நின்னால் விளைந்திருக்க
அச்சமுண்டோ ஏவையுமுன் னாதரவைக் கொள்ளுதற்கே.

செத்தாலு முன் பதத்தில் சேர்ந்தடியேன் சாவதல்லால்
அத்தா உனைப்பிரியேன் அருந்தயையும் நான் மறவேன் .

வல்லவனே நல்லவனே வானரசேயுன் பெரிய
வல்லமைகளானதெல்லாம் மறைந்திருக்கவில்லையையா.

சாந்தமுறு நற்கருணை தன்னிலிருந்துன் கரத்தில்
ஏந்துகின்ற பாக்கியங்களெல்லா மெனக்கலவோ?

கொடியனிவ னென்றடித்துக் கொன்றாலும் வைதாலும்
அடியார்கள் மொய்த்ததிரு அம்புயத்தாள் விட்டகலேன்.

துனிபிணிக ளானதெல்லாம் தொடரறியா துன்னையன்றி
இனியுன் னருளிருந்தால் எனக்கோர் குறையிலையே.

அப்பனே ஆருயிரே அரியஞானத்திருவே
மெய்ப்பொருளே கைவிடுதால் வீணாயலைந்தழிவேன்.

எல்லாராலுமுலகி லிகழப்படுவதற்கே
பொல்லாக்கொடுவினை நான் புரிந்ததுதானிச்சயமே.

துட்டனீயாகாதென்று துரத்திவிட்டால் நின்னடியை
விட்டிடைய வேறோர் விடமுண்டோ சொல்லுமையா?

தேன் போன்றுயிரளிக்குஞ் சீவியத்தினூருணியை
நான்விட்டகல்வதற்கு நியாயமுண்டோ நாயகமே?

சுருக்கமற்றபேரின்பந் தோன்று நித்யபாக்கியமாய்
இருக்குமுனையே பிரிந்து என்ன பலன் காண்பேன்.

அடுத்துழன்றேன் தீய்க்குழியில் அன்பெனுநீள் சங்கிலியை
விடுத்தெனைத்தான் கைதூக்கி விண்துறையில் சேர்த்தருளே.

தெய்வபதியின் சிறப்பைச் சிந்திக்கும்போதெல்லாம்
கைநீட்டிப் பேயுலகைக் காட்டியிழுக்குதையோ.

கானலை நீரென்றலையுங் கலைமானுஞ் சோலையெல்லாம்
தேனையாராய்ந்து திரி தும்பியுமாயத் திரிந்தேனே .

தீம்பாகவேநானே செய்து கொண்ட துர்ப்பழக்கம்
பாம்பின் வாய்த்தேரையெனப் பட்டலறச் செய்ததுவே.

கோரஓநாய்வாயில் குழந்தையுமாய் தான் தனித்துக்
கூரை மெற் குந்துங் குருவியுமா யானேனே.

மூவுலகையுந்தாங்கு முதலே யென் கர்த்தாவே
நாவரண்ட தென்னுடலில் நல்ல சதை யொன்றுமில்லை.

அனலடுத்த புண்ணாளி அழுங்கி நொடிப்பதுபோல்
மனது துடிதுடிக்க மயக்கமுற்றேன் நான் பாவி .

பசுவைவிட்டகன் றெனவே பதறிபுவிவாழ்வையெண்ணி
பசிய இலவைக்காத்த பைங்கிளிபோலானேனே.

சலமலங்கள் தான் சொரியுஞ் சரீர சுகத்தை நம்பி
அலைவாயிற்பட்ட துரும்பாகிப் பவுவிழந்தேனே.

மருட்டுகின்றபேய்காட்டும் வழி தொடர்ந்து கண்ணிழந்த
குருட்டுப்பிணமாய்ப்பாழுங் குழியில் விழுந்தேனே.

பாழ்ங்கிணற்றிற் சோசேப்பைப் பாதுகாத்திட்டதுபோல்
தேங்குமெனைக்கைத்தூக்கிச் செம்பதத்திற்சேர்த்தருளே.

அண்ட பகிரண்டமெல்லாம் அசைத்திழுத்தேயாட்டவல்லாய்
தொண்டனை மோட்சத்திழுக்கச் சூட்சி வலியிலையோ?

தலைவனுனைச் சேராத சஞ்சலத்தாலென்னெலும்பு
கலகலத்துப்போனதினால் கண்ணுறக்கமற்றேனே.

தூரவிருங்களென்று சொன்னதினாற் சத்துருக்கள்
தீராச்சங்கட்டமெல்லாஞ் செய்யதலைப்பட்டனவே.

கண்ணாரக் கண்டுனது கனிவாயின் சொற்கேட்டு
நண்ணிக்கலந்தாலே நல்லதிஷ்டம் என் பாக்யம்.

அன்னையில்லாச் சிறுசேயும் அருநீரில்லாமரமும்
மன்னியுயிர்வாழ்ந்தாலும் வாழ்வேனோ நீ மறந்தால்.

உதிரமெல்லாஞ்சிந்தி விடுவேனுனக்காக
சதமாகும் என்னுயிருந் தற்பரனே உன்னிமித்தம்.

பகலிரவைக்கொண்டு சுற்றும் பாருலகமானதுதான்
இகலாய்முடிவதல்லால் எனக்குச் சதமாமோ?

பூலோகங்கொண்டமணிப் பொன் வெள்ளி மற்றெவையும்
மாலாய்க்கழிவதல்லால் வருமோகடைவழிக்கே?

மண்ணாசைதேகம் பொன் மருளாசையாலலைந்து
எண்ணாதும் எண்ணி மனம் புண்ணாகுதென்கோவே.

சோற்றுத்துருத்தியெனுந் தோற்பாண்ட மிவ்வுடலும்
பீற்றலாகித்தகர்ந்து போய்விடும்போதென்ன செய்வேன்?

உலகம்பேயானதுடல் உலகமுமாமுப்பகையின்
மடிவான சொல்லை நம்பி வாழ்ந்ததுதான் போதுமையா.

பூதலத்தி வெனையுமொரு பொருளாகரீபடைத்தாய்
ஆதரித்த லுன்கடனே அல்லாமற் பின்னெவர்க்கோ ?

பொறைக்கடலென்றுனை யுரைப்பார் புல்லன் பவம்
பொறுக்கும் பொறுப்புனக்கேயல்லாமல் பூமனுவோர்க்குண்டாமோ?

தஞ்சமு நீ தாதையுநீ சகலமு நீ தற்பரனி
பஞ்சையடியேற்குப் பகரரிய எண்ணமு நீ

சகதிபடிந்திருக்குந் தன்மகனைத் தாயேந்தி
மகிழ்வாய்க்கழுவளல்லால் மற்றோர் தொடுவாரோ?

துடைப்புண்ணைக் காட்டுவாரோ சுந்தரனேயுன் சொந்த
அடிமையெனைத்தூற்றாமல் ஆளடிமை கொள்ளுவையே.

இடைவிடாக்காதலனா யிருக்கு முனைச் சேராமல்
விடுத்த வெட்கக்கேடதனை வெளிப்படுத்தா தரியே.

ஒளிகட்கொளி கொடுக்கும் ஒளிக்கடல் நீயக்கடலில்
எளியேனுக் கோர்கதிரை ஈந்தாற் குறைந்திடுமோ?

எத்தனையோபாவிகளுக் கிரங்குந்தயை யானதிலெள்
எத்தனையாயினுமளிக்க லாகாதோ பூரணமே?

மிதமற்ற வானோர்கள் மேவுகின்றநின்பதத்தில்
ஒதுங்கிச் சிறியேனிருக்க ஓரிடந்தானங்கிலையோ?

உன்னாற்சுகமடைந்த ஊமைமுடங்கண் குருடர்
இன்னதொகையாரென் றெண்ணமுடியாதே.

இத்தனையுஞ் செய்திருக்க என் மனதின் கண்குருடும்
தத்தும் பவச்சூடுந் தணிக்குமருந்தொன்றிலையோ?

மிடுக்குடையநீசனுக்கு விண்வரத்தையிலவசமாய்க்
கொடுத்தாயென்றுன்னையெவர் கோபிப்பார் சொல்லுமையா?

அறந்தேறுமர்ச்சியர்க ளானோரே மக்களென்று
புரம்பானேனானென்றும் புகல்வாயோ தற்பரமே ?

வரமிகுத்த அர்ச்சியர்க்கோ வஞ்சகர்க்கோ ரத்தமெல்லாஞ்
சொரிந்த தெவர்க்கென்று சற்றே சொல்லாய்ப் பராபரமே?

போற்றாத நீசகுணப் புல்லனானென்றாலும்
தேற்றிப்பொறுப்பதுன்றன் சித்தத்தியல் பலவோ?

வானடங்காமற் பெருகி வழிந்து புவியிற் சொரியுந்
தேனார்தமைழையைச் சிறியேன்மேற்சிந்தாயோ?

தினமுமணப் பந்தனமாய்ச் சேர்ந்துன்னுடன்களிக்க
மனமடங்காப்பேராசை மல்கிப் பெருகுதையா.

தண்மலரின் தேனருந்தத் தாவிரு வண்டினம்போல்
வண்மைதருமுன் பாத மலர்தாவுதென்மனமே.

விடாய் கொண்டு நீர்க்கலைந்து வெம்பியமான் போற் பொறுக்கப்
படாதபச்சாதாபமுற்றுப் பதைத்துழலுதென்னுயிரே.

ஆகாயமும் வேண்டேன் அகிலமும் வேண்டேன் புவியுள்
வாகாயமைந்த பொருள் மற்றெவையும்வேண்டேனே.

தேக சுகமும் புகழுந் திகழ்மதிப்புந் தான்வேண்டேன்
மாகத்ததிபதியாம் மன்னவனியே வேண்டும்.

என்னரசே என் திருவே என்னுயிரே விண்ணொளியே
உன்னிமித்த மாயெவையும் ஒழித்து விடுவேனே.

நளின கரத்தேந்துகின்ற ஞானத்திரவியமும்
களியாருனது நட்புங் கட்டழகும் வல்லமையும்.

கனமகிமையும் புகழுங் கண்ணாரக் கண்டெனது
மனதுமிகமயங்கி மாசோபங் கொள்ளுதையோ .

இகபரத்தின் பாக்கியமே என்னன்பே என் வாழ்வே
சுகமேவும்வாரிதியே சுந்தரமே செந்தேனே.

கலியகற்றும் நல்லமுதே கற்கண்டே என்னிடத்தில்
வலிய வுறவாடி வந்த மணியே மறைமுடிவே.

உனையே நினைந்துருகும் உறுந்துயரால் மெய்யிளைக்கக்
கனிந்த பழமும்பாலும் கசப்பாய் முடிந்ததையா.

பூலோகமாயையற்றுப் புனித்தவத்தறைக்குள்
சாலோகமாய்த்தனியே தரிசிப்பதெக்காலம்?

வெறிதிரையார் வார்கடலை மேற்புரண்டு வாராமல்
மறித்னையேயுன் பதத்தில் மனமடங்கச் செய்தருளே.

மேற்பூத்து உட்கனலும் வெய்யகொடுஞ் செந்நெருப்பைப்
போற்பின்புதீமைசெயும் புவிமயக்கம் தீர்ப்பதெப்போ?

உன் மனமும் என் மனமும் ஒன்றாகியானந்த
நன்மையின் பத்து கலந்து நாமகிழ்ந்து வாழ்வதெப்போ?

விரிமலர்க்கு வாசனையும் மென்கனிக்குத்தண்சுவையும்
அருமையுடனளித்த வானந்த மெச்சுகமே.

தேவமணமென் மீது சேர்ந்து மிகக் கமழத்
தேவவரத்தாலுள்ளந் தித்திக்கச் செய்யாயோ?

மூவுலகுமாளுகின்ற முதல்வனி நீசனையும்
தீவினையிற்காத்தாண்டாற் சின்னம் வருவதுண்டோ ?

தரையிலுள்ள எப்பொருளுந் தான்மறந்து நானுனையே
மறவாதிருக்கவொரு மாயம்புரியாயோ?

அங்குமிங்குமாயோடி அலைமனது உன் பதத்தில்
தங்க அன்பின் பாசமதால் தளைத்திறுகக்கட்டாயோ?

பாலைவனங்கடந்து 'பரதேசஞ் சென்றலைந்த
காலையென்றன் சென்னிவைக்கக் கசப்புனக்கேன்றற்பரமே?

வெறுநீரை நன்மதுவாய் விளைத்த செயல் போல
மறுவுடையநாயேனை வானினமாயாக்காயோ?

காந்தமதைத்தாவுங் காரிரும்பின் ஊசியென்
சாந்தஉன்பாதத்தின் மனந் தாவவகை செய்தருளே.

வாய்வாழ்த்தக் கைக்குவிய மனமகிழ மெய்மறந்து
போயிருக்கமோனமதில் பொருந்தவரந்தந்தருளே.

இனியாகிலுமுனக்கு ஏற்றபடி புண்ணியத்தின்
கனிவிளைக்க எனதுமனக் கல்லையுருக்குவையே.

நீர் சொரிந்து பற்கருகும் நேரமதிலஞ்சேலென்று
ஆர்வமூகங்காட்டி அருகில் வந்து நின்றருளே.

நடுப் புரியுநாளிலங்கு நான் வந்தால் வானோர்கள்
அடுத்தசபையிற்சேர்த்து ஆதரிக்கச் செய்யுமையா.