இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுவின் பாதை!

கிறீஸ்துநாதர்: உன் சிலுவை மிகவும் பளுவானதாக உனக்குத் தோன்றுகிறதா? உன் துன்பங்கள் உன் பலத்திற்கு மீறினவையாயிருப்பதாக எண்ணுகிறாயா? ஜெயிக்க முடியாத சோதனைகள் உன் மனதை வாட்டுவதாக நினைக்கிறாயா? மகனே! நான் சொல்வதைக் கேள்: சோதிக்கப்படுகிறவன் பாக்கியவான் (யாகப்பர்.1:12). பொன்னை நெருப்பிலிட்டுச் சுத்தமாக்குவதுபோல, நானும் துன்பங்களின் மூலம் உன்னைச் சுத்தமாக்குவேன். ஆனால் அந்தத் துன்பங்களைப் பொறுமையோடும், ஞானப் பிரயோஜனத்தோடும் சகித்துக்கொள்ள என் வரப்பிரசாதத்தின் உதவி எப்போதும் உனக்குக் கொடுக்கப்படுகிறது என்பதை மறவாதே.

மகனே! மூன்று காரணங்களை முன்னிட்டு உனக்குத் துன்பங்கள் உண்டாகலாம்.

1) உன் துன்பங்கள் உன் சொந்தக் கிரிகைகளின் பலனாயிருக்கலாம். தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான். பாவ அக்கிரமத்தைச் செய்த நீ, அப்பாவத்தால் உண்டாகும் துன்பம், வியாதி என்னும் பலனைக் கண்டு ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இயற்கைக்கும், புத்தி நியாயத்திற்கும் விரோதமாய் நடந்த நீ, அதனால் உனக்கு ஏற்பட்ட கஷ்டத்தைக் கண்டு என்னை ஏன் நொந்துகொள்கிறாய்? தெரிந்தே அக்கிரமம் செய்த உன்னைப் புதுமையின் மூலம் நான் காப்பாற்ற வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது நியாயமா? ஆதலால் உன் பாவங்களுக்குப் பரிகாரமாக அந்தத் துன்பங்களை முழுச் சம்மதத்தோடு நீ ஏற்றுக்கொள்வதே நியாயம்.

2) நீ அனுபவிக்கும் துன்பங்கள் பிறர் செய்த அக்கிரமங்களின் பலனாயிருக்கலாம். உன் அயலான், சிநேகிதன், தாய் தகப்பன், இன்னும் பிறர் செய்த கேட்டினால் உனக்கு ஏற்பட்டிருக்கலாம். இது இயற்கையின் நியதி. நீ செய்த பாவத்தால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட தின்மை போல, மற்றவர்களது பாவத்தால், உனக்குத் தின்மை நேரிடலாம். இத்தகைய துன்பங்களைக் கண்டு, நீ மனமொடிந்து ஆத்திரப்படுவதால், அல்லது அழுது புலம்புவதால் உனக்கு உண்டாகும் பிரயோஜனம் என்ன? ஆனால், மகனே! இந்தத் தின்மைகளின் மூலம் நீ அடையக்கூடிய பெரும் நன்மை ஒன்று உண்டு. அதாவது, இதோ இயற்கையின் காரணகர்த்தரான தேவனது நீதியைக் கண்டு பாவத்திற்கு நீ பயப்படுவதே.

3) உனக்கு வந்த சிலுவை உன் பாவத்தின் பலனாகவுமல்லாமல் பிறர் அக்கிரமத்தின் பலனாகவுமில்லாமல், என் விசேஷ அன்பின் பெருக்கால், நீ புண்ணியத்தில் விருத்தியடையும்பொருட்டு, உன்னுடைய நித்தியப் பேறுபலனுக்காக அல்லது சிலுவையால் நொறுங்குண்ட என்னை நீ ஒத்திருக்கும்படியாக, நானே அனுப்புவதாக இருக்கலாம். ஆ! என் மகனே! இவ்விதம், உன் துன்பங்கள் என் நேசத்தின் அடையாளமாக மாத்திரம் இருக்குமானால், நீயே பாக்கியவான். அப்படியிருந்தால், பொறுமையை இழந்து, உன் நித்திய மகிமையை நீயே கெடுத்துக் கொள்ளாதே. என் அணைகடந்த நேசப் பெருக்கை அவமதியாதே.

என் மகனே! உன்னைச் சுற்றிப் பார். துன்பங்கள் இல்லாத மனிதன் எவனும் இவ்வுலகில் இல்லை. ஒவ்வொரு மனிதனும் இந்த பூமியில் துன்பம் அனுபவித்தே தீர வேண்டும். ஆனால் அந்தோ பரிதாபம்! அநேகர், நான் அவர்களுக்கு அனுப்பும் சிலுவையை, தங்கள் இரட்சணியத்தின் சாதனமாக ஆக்கிக்கொள்ளாமல், தங்கள் நித்தியக் கேட்டின் காரணமாய் ஆக்கிக்கொள்கிறார்கள்.

சிலர், வரும் துன்பங்களை விலக்கிக்கொள்ள முடியாது என்று கண்டு, வேறு வழியில்லாமல், சலிப்போடும், முறுமுறுப்போடும், தங்களையும், மற்றவர்களையும், என்னையுமே சபித்துக்கொண்டு அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு இம்மையும் மறுமையும் நிர்ப்பாக்கியம் நிறைந்ததே.

வேறு சிலர் அவர்களுக்குண்டான சிலுவை, என் கரத்திலிருந்து வந்தது என்று உணர்ந்து, என் சித்தத்திற்குக் கீழ்ப் படிந்து, சாந்தத்தோடும், அமைதியோடும் அச்சிலுவையை ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்களைப் போல, பொறுமையோடும் அமைதியோடும் சகலரும் நடந்துகொள்ளலாம். சகலரும் அனுசரிக்க வேண்டும் முறை இதுவே.

மற்றும் சிலர், என் நேசத்தை முன்னிட்டு, சிலுவையில் பாடுகளையும், சிலுவை மரணத்தையும் அடைந்த என்னைப் போல் இருக்கும்பொருட்டு தபசுகளையும், சிலுவையையும், துன்பத்தையும் தேடிச் செல்கிறார்கள். இவர்கள் என் அன்பின் மதுரத்தையும், நேசத்தின் இனிமை யையும் இவ்வுலகிலும், மறுவுலகிலும் சுகித்தனுபவிப் பார்கள் (அர்ச். தாமஸ் மோர்).

என் மகளே! நீ சிலுவையை ஓடித் தேடாவிடினும், நான் உனக்கு அனுப்பும் துன்பங்களை நல்ல மனதோடு, என் சித்தத்திற்கு அமைந்து சகித்துக்கொள்ளப் பிரயாசைப்படு. உன் பிரயாசைக்குத் தகுந்த பலனடைவாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

ஆத்துமம்: என் அன்புள்ள சேசுவே! இதோ உமது அடிமையும், தாசனுமாகிய என்னை உமது சித்தப்படி நடத்தியருள்வீராக. நீர் எனக்குத் துன்ப துரிதங்களைத் தந்தருளினாலும், சந்தோஷ ஆறுதலைக் கொடுத்தருளி னாலும் எனது நன்மைக்காகவே அவைகளை நீர் அனுப்பு கிறபடியால் என் முழு மனதோடு நான் அவைகளை ஏற்றுக் கொள்கிறேன். ஆண்டவரே, சகலத்திற்கும் என் ஆத்துமம் ஆயத்தமாயிருக்கின்றது. இன்பத்திலும், துன்பத்திலும், எக்காலமும், என் கர்த்தாவான உம்மை சிநேகிப்பேன்; ஸ்தோத்தரித்து, வந்தித்து, நமஸ்கரித்து, நன்றி செலுத்து வேன்.

என் ஈனப் பாவங்களினால் எத்தனையோ முறை உமது மனம் நோகும்படி செய்திருக்கிறேன். ஆதலினால் ஆறுத லையும், சந்தோஷத்தையும் எதிர்பார்ப்பது நியாயமல்ல என்று அறிந்திருக்கிறேன். சேசுவே என்னை உமது திருச் சித்தப்படி நடத்தியருளும். என் சர்வேசுரா! என் சர்வேசுரா! மிகவும் பலவீனப்பட்டு மெலிந்து வாடும் என் ஆத்துமம் இனி ஒருபொழுதும் உம்மை விட்டு அகன்று போகாமலும், உம்மைப் பாவத்தால் இழந்துபோகாமலும் இருக்க ஞான இனிமை நிறைந்த உமது பிரகாசத்தாலும், வல்லபத்தாலும் என்னைத் திடப்படுத்தியருளும். பாவப் பழக்கம் என்னும் என் வியாதியைக் குணப்படுத்தியருளும். அன்பரான சேசுவே! நான் என்னையே நம்புவதற்கு இடமில்லாமல் இருக்கிறது. ஆகையால் தயாள சம்பன்னரான என் இரட் சகரே, நான் உமது சிநேகத்தில் வேறுபடாமலும், விகார மடையாமலும் நிலைத்திருந்து மரண பரியந்தம் புண்ணியப் பாதையில் நடக்கும்படி உமது திருமாதாவின் திருமுகத் தைக் குறித்து, எனக்கு வேண்டிய வரப்பிரசாதத்தைக் கொடுத்தருளும். ஆமென் சேசு.

மனவல்லய ஜெபம்: எங்கள் சர்வேசுரா சுவாமி, அர்ச். சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடத்திலே நின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் (3 வருடம், 11ம் பத்திநாதர்).