இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுவின் பேரில் விசுவாசம்!

கிறீஸ்துநாதர்: சர்வேசுரன்பேரில் விசுவாசமாயிருங்கள் (மாற்கு.11:22). என் மகனே! உனக்குக் கடுகளவு விசுவாசம் இருக்குமானால் உன்னால் கூடாத காரியம் ஒன்றும் இராது (மத்.17:19). இப்பர்வதத்தை நோக்கி அப்புறம் போ என்றால் போகும். இம்மரத்தை நோக்கி: நீ வேரோடு பிடுங்குண்டு சமுத்திரத்தில் ஊன்றுவாயாக என்றால் அது உனக்குக் கீழ்ப்படியும் (லூக்.17:6).

ஆதலால் நீ ஜெபம் பண்ணும்பொழுது கேட்கிறதெல்லாவற்றையும் பெற்றுக்கொள்வாய் என்று விசுவசி (மாற்கு.11:24). உன் இருதயத்தில் தத்தளியாமல் விசுவசித்தால், நீ கேட்பது உனக்கு அருளப்படும் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். கேள், உனக்குக் கொடுக்கப்படும்; தேடு, கண்டடைவாய்; தட்டு, உனக்குத் திறக்கப்படும் (மத்.7:7).

மகனே, சர்வேசுரன் மீது உன் விசுவாசத்தை வை; அவர் உன்னைக் காப்பாற்றுவார். நல்வழியில் நடந்து அவர் மட்டில் நம்பிக்கை கொண்டிரு.

அவருக்குப் பயந்து நட; நெடுங்காலம் நிலை கொள்வாய். ஆண்டவருக்குப் பயப்படும் நீ, அவரை விசுவசி; உன் சம்பாவனை வீண்போகாது. ஆண்டவருக்குப் பயப்படும் நீ அவரை நம்பு; அவரது இரக்கமானது உன் ஆனந்தமாகும். ஆண்டவருக்கு பயப்படும் நீ அவரை நேசி; உன் இருதயம் பிரகாசிப்பிக்கப்படும். சர்வேசுரனை விசுவசியாத துன்மார்க்கருக்கு ஐயோ கேடு! ஏனெனில் அவர்கள் அவரால் காப்பாற்றப்பட மாட்டார்கள் (சர்வப்.6:8, 15).

சர்வேசுரன் ஒருவர் உண்டென்று விசுவசிக்கிறாய்; மெத்த நல்லது. ஆனால் பசாசுக்களும் அவ்விதமே விசுவசித்து நடுங்குவதில்லையா? (யாகப்.2:19). அதனால், என் மகனே, சர்வேசுரனை விசுவசிக்கிறவன் கற்பனை களை அனுசரிக்கிறான் (சர்வப்பிரசங்கி.32:28). ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லி, கிரிகைகளால் தன் விசுவாசத்தைக் காட்டாதிருப்பானாகில் அவனுக்கு என்ன பிரயோஜனம்? விசுவாசம் மாத்திரம் ஒருவனைக் காப்பாற்றாது. பிச்சை கேட்பவனுக்கு நல்ல வார்த்தை மாத்திரம் சொல்லி, அவனுக்கு உதவி செய்யாது அனுப்புவாயாகில், உன் நல்ல வார்த்தை அவன் பசியைத் தீர்க்குமா? கிரிகைகளைக் கொண்டிராத விசுவாசம் உயிரற்றது (யாகப்.2:14). என் மகனே! சர்வேசுரனிடத்தில் விசுவாசமாய் இருக்கிறாய் அல்லவா? என்னிடத்திலும் விசுவாசமாயிரு (அரு.14:1). சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால், தம்முடைய ஏக சுதனைத் தந்து, அவர் மீது விசுவாசமாயிருக்கிற எவனும் கெட்டுப் போகாமல், நித்திய ஜீவனை அடையும்படி அருளியிருக் கிறார் (அரு. 3:16). ஆக்கினைத் தீர்வையிடும்படி சர்வேசுரன் தம் குமாரனை உலகத்திற்கு அனுப்பாமல், அவராலே இரட்சிக்கப்படும்படியாகவே அவரை அனுப்பினார். அவரை விசுவசிக்கிறவன் தீர்வையிடப்பட மாட்டான். அவரை விசுவசியாதவனோ சர்வேசுரனுடைய ஏக குமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாய் இராததால் ஏற்கெனவே தீர்வையிடப்பட்டிருக்கிறான் (அரு.3:17, 18).

என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவசிக்கிறவனுக்கு நித்திய ஜீவியம் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்வைக்கு உள்ளாகாமல், மரணத்தினின்று நீங்கி, ஜீவியத்திலும் பிரவேசிக்கிறேன் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் (அரு.5:24).

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறாயா? நீ என் நாமத்தினாலே பிதாவை ஏதேது கேட்பாயோ, சுதனிடத்தில் பிதா மகிமைப்படும்பொருட்டு அது உனக்கு அருளப்படும். என் நாமத்தினால் நீ ஏதேனும் என்னைக் கேட்பாயாகில், நான் அதைச் செய்தருளுவேன் (அரு.14:10,16).

ஆத்துமம்: என் ஆண்டவரே, என் தேவனே (அரு. 20:28). நான் விசுவசிக்கிறேன். என் விசுவாசத்தை அதிகப் படுத்தியருளும் சுவாமி (லூக்.27:5).

ஆம் ஆண்டவரே, இவ்வுலகத்திற்கு வந்த சுயஞ்சீவிய ரான சர்வேசுரனின் குமாரரான கிறீஸ்து நீர்தாம் என்று விசுவசிக்கிறேன் (அரு.11:27).

சுவாமி, மெய்யாகவே தேவரீர் ஓர் மறைந்த தேவன். இஸ்ராயேலின் கர்த்தரும் இரட்சகருமாய் இருக்கிறீர் (இசை.14;15). சகல ஜாதி ஜனங்களாலும் எதிர்பார்க்கப் பட்டவர் (ஆகா.2:8). உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறிப் புருவை (அரு.1:29), நித்தியப் பிரகாசத்தின் சுடர்; தேவ மகத்துவத்தின் களங்கமற்ற கண்ணாடி; அவரது நன்மைத்தனத்தின் சொரூபம் (ஞானா. 7:26); பிதாவுடைய மகிமையின் மாட்சி, அவரது தேவத் தன்மையின் உருவகம் (எபிரே.1:3).

ஆண்டவரே! பேசத் திருவுளமிரங்கும். உமது தாசன் செவிகொடுக்கிறான் (1அரசர்.3:9). சுவாமி! நான் என்ன செய்ய வேண்டுமென ஆசிக்கிறீர்? (அப்.நட.4:6). என் இருதயம் தயாராயிருக்கின்றது. ஓ சர்வேசுரா, என் இருதயம் தயாராயிருக்கின்றது (சங்.107:1).

தேவனே! உமக்குப் பயப்படுகிறவர்களுக்காக, நீர் மறைத்து வைத்திருக்கிற உம்முடைய தயாளத்தின் மிகுதி எம்மாத்திரம் பெரிதாய் இருக்கின்றது. மனுமக்களின் மத்தியில் உம்மை நம்பியிருக்கிறவர்களுக்கு அதைச் சம்பூரணமாய் வெளிப்படுத்தினீர் (சங்.30:19). ஆ என் கர்த்தரே! நான் உம்மிடத்தில் என் நம்பிக்கையை வைத்திருக் கிறேன்; நான் நித்திய காலத்திற்கும் வெட்கமடையேன். உமது நீதியின் நிமித்தம் என்னை விடுதலையாக்கி விடும் (சங்.30:1).

ஏனெனில், இதோ நீர் நேசிப்பவன் வியாதியாயிருக் கிறான் (அரு.9:3). நான் உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்ததால் என் ஆத்துமத்தைக் குணப்படுத்தும் (சங்.9:3). என் மன்றாட்டிற்குச் செவிதந்து, என்னை மீட்கத் தீவிரியும். தேவரீர் என்னை ஆதரிக்கும் தெய்வமாகவும், அடைக்கல வீடாகவும் இருந்து என்னை இரட்சித்தருளும் (சங்.30:2). என் போதகரே! நித்திய ஜீவ வார்த்தையைக் கொண்ட உம்மை விட்டு, வேறு யாரிடம் நான் போவேன் (அரு.6:69)?

ஆண்டவரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் திடமாய் நடந்துகொள்ளுங்கள். உங்கள் இருதயம் ஸ்திரப்பட்டிருக்கக் கடவது (சங்.30:24). ஆமென் சேசு. 

மனவல்லய ஜெபம்: “திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே, தேவரீர் எழுந்தருளி வாரும். உமது விசுவாசிகளின் இருதயங்களில் உமது சிநேக அக்கினியை நிரப்பியருளும்''

(300 நாள் பலன் - அர்ச். பத்தாம் பத்திநாதர், 1907).