தேவமாதாயார்?

இதற்கு விடை காண, சேசுநாதர் யார் என்பதை நாம் தியானிக்க வேண்டும். அவர் வார்த்தையானவர், சுயஞ்சீவிய சர்வேசுரனின் ஏக பேறான திருச்சுதன், யுகங்களுக்கு முன்பே பிதாவால் ஜெனிப்பிக்கப்படுகிறவர், பிதாவோடு ஒரே பொருளான சர்வேசுரன். மற்ற இரு தேவ ஆட்களோடு ஒரேஞானம், ஒரேசித்தம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவத்தைக் கொண்டிருப்பவர்.

திவ்ய கன்னிகையின் மாசற்ற திருவுதரத்தில் மகவாய்க் கர்ப்பந்தரிக்கப்பட்டவர் இந்த தேவ ஆள்தான்! வேறு வார்த்தைகளில் சொன்னால், தேவ சுதனானவர், மாமரியிடமிருந்து தமது மனித சுபாவத்தைப் பெற்றுக்கொண்டார். ஆகவே, மாமரியால் கர்ப்பந்தரிக்கப்பட்டவரும், அவர்களால் சுமந்து, பெற்றெடுக்கப்பட்டு, பல மாதங்களாக அவர்களது திரு அமுதால் போஷிக்கப் பட்டவருமான சேசுநாதர் மெய்யான சர்வேசுரனாக இருக்கிறார். 

எனவே மாமரி சர்வேசுரனுடைய திருமாதாவாக இருக்கிறார்கள்! இதன் காரணமாகவே அவர்கள் "பிரியதத்தத்தினால் நிரம்பி வழிபவர்களாகவும், பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாகவும்" இருக்கிறார்கள்! தமது நித்திய ஜெனிப்பித்தலால் சேசுநாதர் கடவுளின் திருச்சுதனாக இருப்பது போலவே, தமது மானிடப் பிறப்பால் மெய்யாகவே மரியாயின் திருக்குமாரனாகவும் இருக்கிறார். பதிதர்கள் மாதா கடவுளின் தாய் அல்ல என்று சொல்கிறார்கள் என்றால், அவர்கள் நேரடியாக, சேசுநாதருடைய தெய்வீகத்தைத்தான் மறுதலிக்கிறார்கள்! 


கடவுளின் தகுதியுள்ள தாய்!!

அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் மாமரியைக் "கடவுளின் தகுதியுள்ள தாய்!" என்று அழைக்கிறார். மாமரி பெற்றுள்ள தகுதி என்ன? "மாதா இணைமீட்பர் மாநாட்டு மலரில் (1999)" நம் அன்புக்குரிய ஞானத்தந்தை சங். அந்தோனி சேவியர் சுவாமியவர்கள், "மாதா கடவுளைக் கர்ப்பந்தரித்துப் பெற்றெடுக்க வேண்டுமென்றால், கடவுளும் மாதாவும் ஒரே இனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இனம் மாறி இன விருத்தி நிகழ்வதில்லை. ஒரு தாய் தன் இனத்தையே விருத்தி செய்கிறாள். ஆகவே, மாதா கடவுளின் தாயாக இருக்க வேண்டுமென்றால், அவர்கள் கடவுளின் இனத்திற்கு, அதாவது மனித சுபாவத்திற்கு மேலான தேவ சுபாவத்திற்கு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்” என்ற வியக்கத்தக்க வார்த்தைகளைக் கூறுகிறார்!

அப்படியானால், மாதா யார்? "இதோ ஆண்டவருடைய அடிமை" என்று தன்னைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த கணத்திலிருந்துதான் மாதா கடவுளுக்குத் தாயாக இருக்கிறார்களா? அப்படியானால் வேதசாஸ்திரியான அர்ச். கிறிசோலோகுஸ் இராயப்பர், "ஆண்டவர் தன் உதரத்தில் உற்பவிக்குமுன் மாதா அவருடைய தாயாக இல்லையா? உலகத்தைப் படைத்தவரைக் கர்ப்பந்தரித்த அவர்கள் எப்போதுதான் அவருக்குத்தாயாக இல்லாதிருந்தார்கள்?" என்று வினவுவது ஏன் (செர்மோ -146)? இவரது கூற்றுப்படி மாதா நித்தியத்தில் இருந்தார்கள் என்றால், எப்படி இருந்தார்கள்? எந்த நிலையில் இருந்தார்கள்? ஓர் ஆளாகவா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் சிருஷ்டிப்பு என்பது தொடங்குமுன், பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து என்ற மூன்று தேவ ஆட்கள் மட்டுமே இருத்தலைக் கொண்டிருந்தார்கள், இருக்கிறவராக இருந்தார்கள்.

ஆனால், "... யுகங்களுக்கு முன் சிருஷ்டிக்கப்பட்டேன் " என்று சொல்கிற மாதா, அதற்கு முன் எங்கிருந்தார்கள்? அவர்கள் இல்லாத காலம் ஒன்றில்லை என்று மேற்கூறிய அர்ச்சியசிஷ்டவர்கள் இருவரும் கூறுகிறார்களே!

இதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் இருக்க முடியும்: மாமரி யுகங்களுக்கு முன்பாக, அதாவது நித்தியத்தில், தான் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பாக, கடவுளுடைய ஒரு தேவ இலட்சணமாக, அவருடைய நித்திய ஞானமாக, கடவுளுக்குள் இருந்தார்கள் என்பதுதான் அது! ஆள் தன்மை யிலும், தேவ சுபாவத்திலும் சேசுவும், மாதாவும் வேறுபட்டிருந்தாலும், இவர்கள் இருவரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். அவர் சிருஷ்டிக்கப்படாத தேவ ஞானமாயிருப்பது போல, அவர்கள் சிருஷ்டிக்கப்பட்ட தேவ ஞானமாக இருக்கிறார்கள். ஆதியிலும் யுகங்களுக்கு முன்பும் கடவுளில், அவருடைய இலட்சணமாக இருந்த மாதா, கால நிறைவில், கடவுளுக்குத் தாயாவது என்னும் உன்னத நோக்கத்திற்காக, கடவுளால், அவருடைய முதல் சிருஷ்டியாக உண்டாக்கப் பட்டார்கள் என்று நாம் கூறலாம்!

இதில் வியப்புக்குரியது ஏதுமில்லை . பிதாவினுடையவும், சுதனுடையவும் நேசமானது இஸ்பிரீத்து சாந்து என்னும் மூன்றாம் தேவ ஆளாகப் புறப்பட்டு வருகிறது என்பது விசுவாச சாத்தியமாக இருக்கும்போது, நித்தியத்தில் கடவுளின் ஞானமாக இருந்தது, உரிய காலத்தில் ஒரு சிருஷ்டியாகப் படைக்கப்பட்டது என்று நாம் ஏன் நம்ப முடியாது? இதனாலேயே பாப்பரசர் ஒன்பதாம் பத்திநாதர் மரியாயின் அமலோற்பவப் பிரகடனப் பத்திரத்தில், ஞானம் என்பது பரிசுத்த கன்னி மரியாயைக் குறிப்பிடுவதாகவும், அந்தப் பொருளில் அச்சொல்லை தாராளமாக பயன்படுத்தலாம் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த "ஞானமானது கடவுளின் வல்லமையின் நீராவியாயும், சர்வ வல்லவரின் பிரகாசத் தினின்று வரும் அதன் கூறாகவும், நித்திய ஒளியின் கதிராகவும் இருக்கிறது" (ஞான. 7:25, 26).

1. மாதா தேவ வல்லமையின் நீராவி : கடவுளையும் அவரது வல்லமையையும் பிரிக்க இயலாது. ஆதலால் மாதாவைக் கடவுளின் ஆவி என்றே கூறலாம். கடவுள் நீர்நிலையானால், மாதா அதிலிருந்து இடையறாது வெளிவரும் நீராவியாக இருக்கிறார்கள்;

2. மாதா சர்வ வல்லவரின் பிரகாசத்தினின்று வரும் அதன் கூறு : கடவுளும், அவரது ஒளியும் ஒன்றுதான். இலத்தின் மொழியில் இதற்குரிய வார்த்தை, எமானாத்ஸியோ என்பதாகும். அதன் பொருள், நீண்டு கசிந்து வரும் ஒரு பாகம் ஆகும். ஆகவே மாமரி கடவுளின் ஒரு பாகம் எனலாம்.

3. மாதா நித்திய ஒளியின் கதிர்: ஒளியும் கதிரும் பிரிக்க முடியாதவை. கடவுள் சூரியன் என்றால், மாதா அதிலிருந்து புறப்படும் ஒளிக்கதிராயிருக்கிறார்கள்.

எனவே, மாதாவின் சிருஷ்டிப்பு என்பது நித்திய சர்வேசுரனிடமிருந்து மாதாவின் புற வெளிப்பாடாகிய புறப்படுதலாக இருக்கிறது. இதன் காரணமாக, சர்வேசுரனின் அன்பின் தன்மையை மாதா பெற்றிருக்கிறார்கள். நீராவி நீரின் குணங்களைக் கொண்டுள்ளது போலவே மாதாவும் கடவுளின் தன்மைகளைத் தன்னில் கொண்டிருக்கிறார்கள்.

எனவே சிருஷ்டியாயிருந்தாலும், மாமரி கடவுளின் ஓர் உன்னத நோக்கத்திற்கென, அவரது தெய்வீக சுபாவத்திற்கு முழுமையாக உயர்த்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் வெறும் மனித சுபாவத்தில் ஒரு பெண் கடவுளைக் கருத்தாங்குவது என்பது சூரியனை உள்ளங்கைக்குள் அடக்குவதை விட பாரதூரமான அளவுக்கு பிரமாண்டமான காரியமாகும். தன்னிலே கடவுளா யில்லாவிட்டாலும் கடவுள் தன்மைக்கு உயர்த்தப்பட்டிருந்த இந்த முதல் சிருஷ்டியாகிய மாதாவுக்குப் பணிந்திருக்க வேண்டும் என்பதுதான் ஆதியில் தேவதூதர்களுக்குத் தரப்பட்ட தேவ கட்டளையாக இருந்திருக்க வேண்டும். இதுவே லூசிபர் மற்றும் அவனது தூதர்களின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருந்திருக்க வேண்டும். அதே சமயம் தங்கள் இராக்கினியாகிய மாமரிக்குப் பணிந்து அவர்களுக்கு ஊழியம் செய்வதுதான் அர்ச். மிக்கேல் அதிதூதரின் தலைமையிலான பரிசுத்த சம்மனசுக்களின் பாக்கியமாகவும் மகிமையாகவும் இருக்கிறது!