புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மனதோடு சம்பாஷிக்கும் பாடல்

ஒன்றுமிரண்டாளாம் - மனதே - ஒன்றான ஏகபரன்
என்றுமிருந்தவரே - மனதே - எல்லாஞ் செய்தனரே.

எட்டுமிரண்டாமே - மனதே - ஏகன் றிருக்கற்பனை
கட்டுக்கடங்காதோர் - மனதே - கானல் கோண்டே துடிப்பார்.

அண்ட பிண்டமல்லோ - மனதே - அப்பாற்றிருலோகம்
கண்டதை நம்பாதே - மனதே - காணாப்பதந்தாவு

ஊருக்குள் ளூராமே - மனதே - ஒன்பது கோட்டையதில்
ஆருக்கு மெட்டாதே - மனதே - அன்புளர் கண்டறிவார்.

நாற்றவுடலாமே - அதனுள் - நாலைந்து வாசலுண்டு
போற்றி மினுக்கினுமே - மனதே - பொய்யது நில்லாது.

கர்மேல் மலையுயரம் - மனதே - கண்ணுக்கு மெட்டாதே
சொர்ன்னமதி லழகும் - மனதே - சொல்லுக்கடங்காதே.

அஞ்சுடன் மூன்றடக்கி - மனதே - அய்யனருளுணர்ந்தால்
நஞ்சுகலவாத - விரண்டு நன்னலங்காண்பாயே.

நூறுவேதமல்லோ - அதிலே - நூற்றெட்டுச் சித்தாந்தம்
ஆறு வெள்ளமல்லோ - மனதே - அன்புளர் மெய்யறிவார்

பச்சைக்கிளியெனவே - மனதே - பாரைவிட்டே பறப்போர்
இச்சையில்லாதிருப்பார் - மனதே - ஏக்கமகன்றிருப்பார்.

நாலுகாற்றடிக்கும் - மனதே - நரிகள் வந்து நிற்கும்
ஏலுந்திறமுடையோர் - மனதே - ஏகனை நம்பிநிற்பார்.

அந்தரங்கங்கடந்து - மனதே - அப்பாற்றிரைகடந்து
மந்திரலோகம்வர - மனதே - மாயையை விட்டகல்வாய்.

கண்ணுக்கு மையிடுவாய் - மனதே - காலுக்கு பொற்சதங்கை
பொன்னின் வளையலுடன் - மனதே - பூரணங் கொள்வாயே.

கூந்தல் பிடரியிலே - பறக்க - ஏந்திழையென்பாரே
பூந்தோட்டந் தண்ணிழலில் - மனதே - பேசுவார்மாபேச்சு.

காட்டு மிருகமுண்டு - மனதே - கரடி புலிகளுண்டு
நீட்டிப்பூநாடாதே - மனதே - நின்று மயங்காதே.

நந்தவனம் புகுந்து - மனதே - நற்றவக்கோட்டை கொண்டால்
விந்தையுடன் பரனும் - மனதே - விரைந்து வருவாரே.

மாடப்புறாப்போலே - மனதே - மகிழ்ந்து கரங்குவித்து
ஓடைக்கரைமேலே - மனதே - உருகியழுவாயே.

மானது போற்றுடித்து - மனதே - மன்னன் வருவாரே
ஈனத்தரையுணர்வும் - மனதே - இனியுனக்கே வேண்டாம்.

சோதிப்பிரகாச மல்லோ - மனதே - சுந்தரநாதன் மயம்
பாதியிரவினிலே - வருவார் - - பார்த்தே விழித்திருப்பாய்.

தெண்ண லடித்திடுமே - மனதே - தேன் மழை பெய்திடுமே
அண்ணல் வருமளவு - மனதே - அழாமலே காத்திருப்பாய்.

மாரிக்காலம் போகும் - மனதே - மந்தாரராப்போகும்
பாரின் பலவிதங்கள் - மனதே - பற்றறவிட்ட கால்வாய்.

வாடைக்காற் றாகாதே - மனதே - வான்வரங் கொள்வதற்கு
கேடயங்கையெடுத்து - மனதே - கெட்டியாய்ப் போர்புரிவாய்.

கணவாயருகினிலே - மனதே - கைகோத்து மன்னவரும்
குணமான வார்த்தை சொல்வார் - மனதே - கூடிப் பிரியாதே.

வாழைமரச் சோலை - அதிலே - வண்டது போற்றுவண்டு
தாழை நிழலருகில் - மனதே - சாய்ந்து படுப்பாயோ.

எண்ணது மெண்ணாதே - மனதே - ஏங்கித்தவிக்காதே
புண்ணாகிநோகாதே மனதே - பூபதிவந்திடுவார்.

என்னைக்கிருந்தாலும் - உடலம் - மண்ணுக்கிரையல்லோ
எண்ணத்தை விட்டுவிடு - மனதே - விண்ணகஞ் சேர்வதற்கு.

நீர்மேற்குமிழியல்லோ - காயந்தான் - நில்லாது போய்விடுமே
பாரதின்பற்றறவே - மனதே - பார்கதி விண்ணகத்தே .

கூட வருவதுண்டோ - எதுவும் - கூற்றன் வருகையிலே
தேடுநீ மோட்சமதை - மனதே - தேம்பித்திரியாதே.

பத்திக்குவித்தல்லவோ - மனதே - பரமனருளுடைமை
எத்திக்கும் போகாதே - மனதே - ஏகன் பதமணுகே.