இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுவைப் பின்செல்லுதல்!

கிறீஸ்துநாதர்: என்னைப் பின்செல் (மாற்கு.10:21). என் மகனே! நீ நீதியுள்ளவனாய் இருக்க வேண்டுமானால், உன் மனச்சாட்சியின்படி நடப்பது மட்டும் போதாது; நீ என்னைப் பின்செல்லவும் வேண்டும். தாழ்ச்சியுள்ளவனாக இருக்க வேண்டுமானால், உன் துன்பங்களைப் பொறுமை யோடு அனுபவிப்பது மாத்திரம் போதாது. உன் அயலாரை யும் உன் விரோதிகளையும் சிநேகிப்பதில், நீ என்னைப் பின்பற்றாதிருப்பாய் என்றால், உன் நீதி வெகுநாள் நிலைக்காது. என் சிநேகம், உன்னை என் பக்கமாய் இழுக்காவிடில், நீ உன் பொறுமையை இழந்து விடுவாய். என் தாழ்ச்சியும், சாந்தமும் உன் கண்முன்னே எப்பொழுதும் நிற்காவிடில், உன் தாழ்ச்சியும் சாந்தமும் பெரும் சோதனைகள் வரும்பொழுது மறைந்துபோகும்.

என்னைப் பின்செல் என்று நான் சொல்வதைக் கேட்டு ஏன் கலங்குகிறாய்? ஆண்டவரை நம்பினவன் கலக்கமடைந் ததில்லை (சர்வப்.2:11) என்று நீ வாசித்ததில்லையா? உன்னை இன்று தயங்கச் செய்வது நாளை உன் நாசத்தை வருவிக்குமே. இன்று உன் இருதயத்தைக் கவர்ந்து கொள்வது, நாளை உன்னைத் துன்புறுத்துமே. சகல நன்மை களுக்கும் மேலான நன்மை ஒன்று உண்டு. ஆசையோடு அதைத் தேடு; அத்துடன் மற்ற சகல நன்மைகளும் உனக்கு அருளப்படும்.

உலகமோ, அதை, இதைத் தருவேன் என்று வாக்களிக்குமே தவிர வேறில்லை. நிலைமை வரமான திருப்தியை அளிக்க அதனால் முடியாது. உலகத்தின் வீண் பெருமைகளைக் காலின்கீழ் வைத்து நசுக்கு; உனக்கு உண்மையான ஞானம் உண்டாகும். என்னைத் தேடி அடைய சிருஷ்டிகள் உனக்கு உதவாவிடில், அவைகளால் உனக்கு என்ன பிரயோஜனம்? இன்னான் தீயவனாயிருந் தாலும் பெரும் பதவியில் இருக்கிறான் என்று நினைக் கிறாயா? இஷ்டப்பிரசாதத்தோடு மரிக்கும் ஒரு சிறு குழந்தை அவனை விடப் பெரும் பதவியில் இருக்கிறது என்பதை நீ அறியாயா?

ஆ, என் மகனே! கேள். அநேகர் செல்வந்தர்களாய் இல்லாதிருந்தால் உத்தமராய் இருந்திருப்பார்கள். கல்வியும், அதிகாரமும் படைத்திராவிடில், அநேகர் மெய்யான ஞானமும் தாழ்ச்சியும் உள்ளவர்களாயிருந்திருப்பார்கள். இதோ! இப்பொழுது சோதனையின் காலம். இச்சோதனை யில் வெற்றியடைந்தவர்களுக்கு நான் என்னையே வெகுமானமாகக் கொடுக்க இருக்கிறேன். சத்தியத்தின் காலம் வரும். அப்பொழுது எளியவன் என்னோடு மேஜையில் அமர்ந்திருப்பதைக் காண்பாய்ய.

ஒழுங்கீனத்தில் மகிழ்ச்சியடையத் தேடுகிறாயா? நித்திய ஒழுங்கீனம் அரசாளும் நரகத்தை நினைத்துப் பார். நீதி வலிமையைத் தரும், அநீதியோ அழிவைத் தரும் என்று உன் புத்தியே உனக்குக் காட்டுவதில்லையா? மகனே, உலகம் உன் கதி அல்லவே. என்னையும் நான் உனக்குக் கொடுக்க இருக்கும் பேரின்ப பாக்கியத்தையும் நீ மறந்து, இந்த உலகத் துன்பங்களையே யோசித்துக்கொண்டிருந்தாயானால், சொற்பத் துன்பங்களும் கூட பிரமாண்டமாகவும், துன்பமாகவே இல்லாதவையும் கூட துன்பங்களாகவும் தோன்றுமே.

என்னைப் பின்செல். நான் உன்னை ஆதரிக்கிறவராய் இருந்தால் உன் சத்துருக்கள் உனக்கு மறைவாய் வைத்த கண்ணியில் நீ விழ மாட்டாய் (சங்.30:4). உன் கதி என் கரங்களில் இருக்கின்றது (சங்.30:15) என்பது உன் ஞாபகத்தில் இருக்கட்டும்.

என் நேச மகனே! நீ என்னைப் பின்பற்ற விரும்புகிறாயா? அப்படியானால் நான் நடந்த பாதையில் நீயும் நடக்க வேண்டும். உலகத்தை இரட்சிக்க நான் நடந்த பாதை சிலுவைப்பாதை அல்லவா? இரட்சிக்கப்பட விரும்பும் ஒவ்வொருவனும் நான் நடந்து சென்ற சிலுவைப்பாதை வழியாகவே என்னைப் பின்செல்ல வேண்டும். சிலுவையின் மூலமாக உலகத்தை இரட்சித்த நான் சிலுவையின் மூலமாகவே ஒவ்வொருவனையும் இரட்சிக்கிறேன். ஆதலால் மெய்யான சந்தோஷத்தை அடைய விரும்பினால், உன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்வாயாக (மத்.11:28).

ஆத்துமம்: சகல மனிதர்களின் இருதயங்களையும் ஆட்கொள்ள வல்லதான மாபெரும் சிநேகம் நிறைந்த என் சேசுவின் திரு இருதயமே, என் பாசங்கள் அனைத்தையும் சுட்டெரித்துத் தகனமாக்கி, உமது இஷ்டப்பிரசாதம் நிறைந்த புதியதொரு உயிரை எனக்குத் தந்தருள்வீராக. பாவிகளுக்குத் தஞ்சமாகத் திறந்திருக்கும் பரிவுள்ள இருதயமே, என்னை உமது அருகில் சேர்த்தருள்வீராக. உலகத்தின் பாவங்களுக்காகச் சிலுவை மரத்தில் நொந்து உருகிய திரு இருதயமே, என் பாவங்களுக்கு மெய்யான மனஸ்தாபத்தை என் உள்ளத்தில் எழுப்புவீராக. சிநேகத் திற்குப் பாத்திரமான கர்த்தாவே, உமது சிநேக ஈட்டியால் என் இருதயத்தைக் காயப்படுத்துவீராக. உமது திரு இருதயத் தோடு என் இருதயத்தையும் சேர்த்து பந்தனப்படுத்தும் சுவாமி.

ஆண்டவரே, இனி என் சிந்தனை வாக்கு செயல்கள் யாவும் உமது திருவுளத்திற்கு ஏற்க நடக்கும்படி எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும். தேவசிநேகமின்றி வேறெந்த சிநேகமும் என் நெஞ்சத்தை விட்டு அகலக்கடவது. எனக்காக மனுப்பேசுகிற மாதாவுமாய், என் ஆண்டவ ரிடத்தில் கேட்கிறதெல்லாவற்றையும் பெற்றுக்கொள் கிறவர்களுமாய் இருக்கிற தேவதாயாரே, என் நம்பிக்கைக்கு ஆதாரமாயிருக்கிற கன்னிமாமரியே, நான் சேசுவின் நிர்மல நேசத்தில் நிலைத்திருந்து உயிர்விடும்படி எனக்கு வேண்டிய வரப்பிரசாதத்தை உமது மன்றாட்டினால் பெற்றுத் தந்தருள் வாராக. ஆமென் சேசு.

மனவல்லய ஜெபம்: என் தேவனே! என் சர்வமே! (50 நாள், 13ம் சிங்கராயர்).