புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - நெஞ்சுவிடு தூது

நேரிசை வெண்பா

இருந்தேன் வழிநோக்கி எண்ணூரா ரின்னும் 
பொருந்தா மரபிற் புலர்ந்தேன் - திருந்தவர்பால் 
சென்றது கொல்? மீண்டதுகொல்? செவ்வி பெறுந்துணையும் 
நின்றதுகொல்? தூது சென்ற நெஞ்சு.

இதுவுமது

கட்டளைக் கலித்துறை 

நெஞ்சே தெரிந்தவர் எண்ணூர் நராதிபர் சேர்ந்தவர்பால் 
பஞ்சே படுந்துயர் யான் பட்டேனென்று பகர்ந்திடிலோ 
அஞ்சே லெனவப யங்கொடுத் தாள்வ ரதுவுமன்றி 
மஞ்சே யனையவர் கேட்டால் தருவர்தம் மாலையுமே.

இரங்கல் மடக்குத் தாழிசை. 

மாலை தந்திட வந்தவர்மணி
   மாலை தந்திலர் வாசமாம் 
வனசங் கண்ட தாள் கொண்டவர்முக
   வனசங் கண்டிலர் கூர்மையார் 
வேலை கொண்டவர் என்னுளப்பணி
   வேலை கொண்டிலர் மேன்மையாம் 
வேதந் தேர்ந்தவர் என் மனப்பரி
   வேதந் தேர்ந்திலர் நாண் மலர்க் 
கோலை யேந்தினர் ஆட்சியான செங்
   கோலை யேந்திலர் தேவதாய் 
கோதை வேய்ந்தவர் என்மொழித் தமிழ்க்
   கோதை, வேய்ந்திலர் தீயுமிழ் 
பாலை யுண்டங்குச் சென்றவர்மொழிப்
   பாலை யுண்டிலர் ஆதலால் 
பண்ணை வேண்டிய எண்ணூர் வந்தவர்
   பண்ணு நீதி யநீதியே,

எண் சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம். 

நீதிமுறை வழுவின்றி யுலகை யாண்ட
   நிருபர் பிரான் தாவீதன் மரபுதோன்ற 
ஆதிமுறைப் பழமறையின் மொழிகள் வீற
   அவதரித்த திருமறையின் வடிவினானே 
பாதிமதி மிதிகன்னி மனையாளோடும்
   பரமனென வருஞான புதல்வனோடும் 
ஓதுமென தாவியுடல் பிரியுங் கால்வந்
   துய்விப்ப துனதுரிமைக் கடமை தானே.
தாயிருந்தாலும் தமரிருந்தாலும் தவழ்ம தலைச் 
சேயிருந்தா லுந் திருவிருந்தாலும் திருவிருந்த 
மாயி ரும் பொன்மதி லாருமெண்ணூர் வரு மாதவனே! 
நீயிருந் தாலன்றோ ஞானமும் வீடும் நிலைபெறுமே.

மடக்கு ஆறுசீராசிரிய விருத்தம். 

நிலைய ரும்பும் பதத்தழகன் நீரரும்பும் பதத் தழகன் நிறைவான் வீட்டின் 
கலையரும்பு முகத்தழகன் கதிரரும்பு முகத்தழகன் ககன மேவும் 
மலையரும்பு முத்தழகன் மகனரும்பு முரத்தழகன் மலிந்த தெய்வத் 
தலையரும்பும் வாத்தழகன் தயையரும்ப எண்ணூரிற் றரித்திட்டானே. 

மடக்கு - கட்டளை மண்டலக் கலிப்பா. 

தரித்த தும்பணி வானவர் வேலையே
தவிர்த்த தும்பொரு மானவர் வேலையே 
விரித்த தும்பழ மாமறை வேதமே
விசித்தொழித்ததும் பேயயர் வேதமே 
பரித்த துந்திரு மாதவக் கோலமே
பரிந்த தும்மது மாமலர்க் கோலமே 
அரித்த யங்குமெண் ஊஹாவர் தானமே
ஆய்ந்து தேர்வாளன் செய்யருட் டானமே, 

எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம். 

தாயனைக் கடவுட் சேயனைப் புரந்த
தந்தையை யெந்தையைத் தணியா 
நேயனைக் கமல வாயனை எண்ணூர்
நிமலனை யமலனை யடைந்தேன் 
பேயினைத் துரத்தி நோயினைத் துடைத்துப்
பெறும்பதத் தரும்பதந் தருவான் 
நாயனை யடிமை மேயினை யென்னா
நயந்தவர்க் குயர்ந்தரு ளுறுமே.