புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - முனிவரின் சமயத்தொண்டு

1911-ஆம் ஆண்டு வெளிவந்த நூலிலிருந்து. தழுவி அமைக்கப்பட்டது.

வீரமாமுனிவர் தமிழுக்குத் தொண்டு செய்தமையைத் தமிழ் உலகத்தார் அறிவர். வீரமாமுனிவர் சமயப் பணியை இறை உலகு உலகில் பரவ அவர் ஆற்றிய மறைப்பணியை - பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். தமிழ்ச் சமுதாயத்தை இறை மக்களாக்க அவர் ஆற்றிய தொண்டை - அவர் ஆன்ம வேட்கையை - தணியாத தாகத்தைப் பலர் அறிந்திருக்க முடியாது.

தேம்பாவணி, திருக்காவலூர்க்கலம்பகம், அன்னை அழுங்கல் அந்தாதி, அடைக்கல நாயகி வெண் கலிப்பா எனப் பல பாக்களைப் பாடினார் என்று மட்டும் நாம் சொல்வோம் இலக்கியப் பணி மிகுதியாக ஆற்றியுள்ளார். அந்த அளவுக்குக் சமயப் பணி ஆற்றியது இல்லையென்று கூடச் சிலர் சொல்ல முனைவர்.

தேம்பாவணியை முழுமையாகக் கற்றவர்கள் நமது கிறீஸ்துவ மெய்ம் மறையை - மறையுண்மைகளைக் கண்டு சுவைக்கின்ற பொழுது தான் முனிவரின் ஆழ்ந்த கன்றமறையுணர்வை நாம் உணரமுடியும்.

அவர் மறை இலக்கியப்பணி ஒருபுறம் இருக்க, அவர் கத்தோலிக்க கிறிஸ்துவ சமயத்துக்கு ஆற்றிய பெரும்பணிகளை இங்கு முறையாகக் காண்போம்.

1680 நவம்பர் 8-இல் இத்தாலியில், காஸ் திக்கிலியோனே என்னும் ஊரில் பிறந்தார். நமது முனிவர். ஜோசப்பெஸ்கி என்பது இவர் இயற்பெயர். 1698 - இல் சேசு சபையில் சேர்ந்தார். 1709 - இல் குருத்துவம் பெற்றார் 1710-இல் லிஸ்பன் துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார்; கோவா துறைமுகத்தையடைந்தார். 1711 - இல் மதுரை மறைமா நிலத்தில் காமநாயக்கன்பட்டி, குருக்கள் பட்டி, ஆவூர் ஆகிய இடங்களில் சமயப் பணி ஆற்றினார்; 1712ல் சோழமண்டலத் தில் எயிலூரில் ஓர் ஆலயம் எழுப்பினார்;

அங்கே 336 பேருக்குத் திருமுழுக்காட்டி அவர்களைக் கிறிஸ்தவர்களாக்கினார். 1714-ல் குருக்கள் பட்டியில் தோமையார் திருநாளன்று, அப்போது ஏற்பட்ட சமய எதிர்ப்புச் சதியினால் நம் முனிவர் சிறைப் படுத்தப்பட்டார். அவரைக் கொண்று போட அப்பகுதி தலைவன் ஒருவன் ஆணையிட்டான். இறையருளால் முனிவர் விடுதலை பெற்றார். ஆறு மாதங்கள் சமயப்பணிக்கு ஓய்வு! தமிழ் இலக்கண இலக்கியங்கள் பயின்றார்; பலரும் வியக்கும் அளவுக்கு மொழித்திறம் பெற்றார். குருக்கள்பட்டியில் 1715-இல் 373 பேரைத் திருமுழுக்காட்டி நம் திருமறையில் சேர்த்தார் 1716-இல் ஏலாக்குறிச்சிக்கு வந்தார் அப்போது அவர் தஞ்சாவூர்ப் பங்கையும் சேர்த்துக் கவனித்து வரவேண்டியதாயிற்று. முனிவர் இரண்டையும் கவனித்து வருகையில் மதுரைப் பங்குக்குரு இறந்து போனார். 

முனிவர் மதுரைக்கு வந்து அதிலிருந்து சம்மட்டியூர் சென்றார். அங்கே கோயில் ஒன்றும் சுவாமியார் இல்லம் ஒன்றும் எழுப்பினார். அதே ஆண்டிலேயே ஏலாக்குறிச்சி சென்று கர்த்தர் பிறப்பு விழாக் கொண்டாடினார். அவ்வாண்டிலேயே மதுரையில் 100 பேரையும், தஞ்சாவூரில் 453 பேரையும் கிறிஸ்தவர்களாக்கினார். 1717-இல் ஏலாக்குறிச்சியில் அவர் தொடர்ந்து இடைவிடாமல் பணி யாற்றுகையில் அவர் முதுகில் ஒரு பிளவை புறப்பட்டது. அதனால் நெடு நாட்கள் துன்புற்றார். சில மாதங்கள் ஓய்வுக்குப் பின் 1719-இல் வடுகர்பட்டிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவ்வாண்டும், அடுத்த ஆண்டும் புதுக்கிறீஸ்துவர்களுக்கு ஞான ஒடுக்கம் கொடுத்தார். ஞான முயற்சி மறையுரைகளை ஆற்றினார். 1722 - இல் பயணம் செய்கையில் அவர் தவறி விழுந்ததால் அவரது வலக்கையில் முறிவு ஏற்பட்டது. அதனால் பல மாதங்கள் எழுத முடியாமல் துன்புற்றார். 1726ல் புனித அருளானந்தருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் கொடுப்பதற்கு வேண்டிய வாக்கு மூலச் சான்றுகள் திரட்ட மயிலாப்பூர் வண. ஜோசப் பின்னேயிறோ ஆண்டகை யவர்களுடன் சேர்ந்து மறவ நாட்டிற்குச் சென்றார். 

1727 இல் தஞ்சாவூர் திரும்பி வந்தார். அங்கு 337 பெரிய ஆட்களுக்கும் 1025 குழந்தைகளுக்கும் ஞான நீராட்டளித்தார். அந்நாளில் விசுவாசத்தில் மக்கள் தவறாதிருக்க வேத விளக்கம் எழுதினார். 1729 - இல் ஏலாக்குறிச்சியில் அடைக்கல அன்னைக்கு விழா எடுத்தார். விழாவிற்கு மறு நாள் இறந்தோர்க்காகத் திருப்பலி நிறைவேற்றினார். சுற்று வட்டார மக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொள்ளத் திரண்டு வந்தனர். அன்று 100 பேர் திருமுழுக்குப் பெற்றுத் திருச்சபை உறுப்பினர் ஆனார்கள். அன்று தொடங்கிய விழா இன்றும் நிகழ்ந்து வருகின்றது.

1727-இல் நம்முனிவர் பங்கில் திருமுழுக்குப் பெற்றோர் எண்ணிக்கை 1135. 1730-இல் மதுரை மறைமா நிலப் பங்குகளில் பணியாற்றிய உபதேசிமார்களுக்கு ஞான ஒடுக்கம் கொடுத்தார் அவ்வாண்டு 225 ஆட்களுக்கும் 734 குழந்தைகளுக்கும் ஞனே நீராட்டளித்தார் 1731 - இல் 312 ஆட்களுக்கும் 785 குழந்தைகளுக்கும் திரு முழுக்கு அளித்தார். அடுத்த ஆண்டில் 205 ஆட்களும் 708 குழந்தைகளும் அவ ரால் திருமுழுக்குப் பெற்றுத் திருச்சபையில் சேர்ந்தனர் 1733ல் 123 ஆட்களும், 1000 குழந்தைகளும் திரு நீராட்டுப் பெற்றனர். 

அடுத்த ஆண்டு 123 ஆட்களும் 437 குழந்தைகளும் ஞான தீட்சை பெற்று நம் அரு மறையில்சேர்ந்தனர். அதே ஆண்டில்தான் அதாவது 1734 ஆகஸ்ட்டுத் திங்கள் 5ஆம் நாள் ஏலாக்குறிச்சி நாயனார் அன்னைக்குக் கோயிலும் அறைவீடும் கட்ட முனிவர் அவர்களிடம் நிலம் வழங்கினார். அடுத்த ஆண்டில் முனிவரால் ஞானதீட்சை பெற்றவர் 177 ஆட்களும் 355 குழந்தைகளுமாம். அடுத்துச் சில ஆண்டுகள் நாட்டில் போர்க்குழப்பம் நிலவியதால் அக்காலத்தே முனிவர் தூத்துக்குடியிலும், மணப்பாட்டிலும் வாழ்ந்தார். 1746, 47 ஆண்டுகளில் அம்பலக்காட்டு மடத்தைக் கவனித்து வந்தார். அங்கேதான் முனிவர் தம் அறுபத்தாறாம் வயதில் இறைவன் திருவடி நிழல் எய்தினார். தமிழ் நாட்டில் முனிவர் 36ஆண்டுகள் உழைத்திருக்கின்றார் இவ்விதமாய், முனிவர் இறையரசைப் பரப்புவதற்கும் தமிழ் இலக்கியத்தில் இறைச்சமய இலக்கியப் பணியாற்றுவதற்கும் தம் வாழ்நாளைச் செலவழித்தார்; வையகம் தழைக்க. வானரசு பரவ, தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி அல்லவா!