புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேகவிடுதூது

நேரிசை வெண்பா.

ஆண்டுவருங் கொண்டல் காள்! அன்பர்தொழு மெண்ணூரின்
ஆண்டகையைக் கண்டு அடிபணிந்து - தூண்டி விட்ட
என்கா தன் முற்றும் இசைவாத் தெரிவிப்பீர்
தன் காவல் கொண்டுவரத் தான்.

கலி விருத்தம், 

தானை யொடு தரணிபனைத் தாழ்கடலி லாழ்த்திவிட்ட
கோனையொரு மகனாகக் கொண்டணைத்த எண்ணூராய்!
ஞானநெறி வழிகாட்டி நாயகனீ  நினதுவடி
யேனையரு ளாட்கொளுநா ளெந்நாளோ? செப்பு தியால்

எண்சீ ராசிரியச் சந்தவிருத்தம். 

செய்யு ஞானமும் பெய்யும் வானமும்
   சீருஞ் செல்வமும் பேருங் கல்வியும்
மெய்யும் வேதமுந் தெய்வப் போதமும்
   விளங்கு பத்தியுந் துலங்கு புத்தியும்
எய்து மாண்மையுந் துய்ய கேண்மையும்
   எங்கு மேன்மையுந் தங்கு நோன்மையும்
கொய்யும் பூந்தடம் ஐயர் மாமடங்
   கோவிலெண்ணூரை மேவி னண்ணுமே.

எழுசீர்க் கழிநெடி லாசிரியவிருத்தம். 

நறைமாலை கொண்ட புலவோர் வணங்க
   நளிர் மாலை கொண்ட இறையோன்
மறைமாலை கொண்ட மனையா ளுவப்ப
   மணமாலை கொண்ட திறலோன்
துறைமாலை கொண்ட தமிழ்மாலை யாலே
   துதி மாலை கொண்ட புகழோன்
பிறைமாலை கொண்ட மதிலாரு மெண்ணூர்
   பெருமாலை கொண்ட னனரோ.

இதுவுமது. 

கொடையோ சுரந்த முகில் விழியோ திறந்தமடை
   குலமோ புரந்த வரசு
நடையோ சிறந்தமறை விருதோ மலர்ந்தகொடி
   நலமோ பரந்த புணரி
படையோ நிறைந்தசுரர் எனவே புகன் றறைவர்
   பதியா லுயர்ந்த எண்ணூர்
உடையோ னிருந்துதவு வருளே மகிழ்ந் தினிது
   உலகீரருந்த வருவீர்