புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - சம்பிரதம்

பதினான்கு சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம். 

அண்டபகி ரண்டமொடு மண்டலமும் விண்டலமும்
அலைகடலுந் திசைக ளெட்டும்
அரைநொடியில் வலம் வருவம் குலகிரிகள் முழுவதும்
அசைத்துப் பிடுங்கி யெறிவம்
தெண்டிரையில் கடைபயில்வம் மண்டழலி னிலை பெறுவம்
சித்து முழு தொத்து வருவம்
தேனாடி வண்டுபடு சிறகரை புலர்த்து பொழிற்
செங்க முகின் பாளை விரியக்
கண்டுவிட நாகமெனக் கொண்டுமயில் சினை தாவுங்
கழனிபுடை சூழு மெண்ணூர்க்
காவலனைக் காவலற் குரிமையார் திருமகனைக்
கன்னிமனை யாளை வாழ்த்தித்
தொண்டுபுரி யாதபெரு மண்டையரை யெங்கணும்
துரத்திப் பிடித்து வந்து
தூயவரு ளொழுகுதிரு வடியிணையை யெந்நாளும்
தொழுவிப்ப தெமது தொழிலே.