இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருப்பாடுகளின் பேரில் கண்ணிகள்!

1.
காவினி லேயொரு பாவிபோல் ஏங்கவும்
கசடர் களால்திரு மேனிசர் வாங்கமும்
தேவரீர் பட்ட பாடுசீர் பங்கமும்
சேசுவே நான் அறிவேன்--என்நேசரே
சிந்தையி லேமறவேன்.

2.
என்பாவம் போக்கப் பிறந்த திருமகன் 
ஏகபிதா நீதிகோபம் தாளாச் சுதன்
அன்பான நெஞ்சம் நொறுங்கிப் பவங்கண்டு
அஞ்சி ஒடுங்கினரே--துயரம்
மிஞ்சி நடுங்கினரே.

3.
ஆத்தும சோபம் அகலமன் றாடினார்
அத்தன் பிதாதிருச் சித்தத்தைத் தேடினார்
ஆறுதல் ஏதுமில் லாமலே வாடினார்
அய்யோ அவர் உதிரம் வியர்வையாய்
வையகம் தோய்ந்ததுவே.

4.
பன்னிரு சீஷரில் பாதகன் யூதாஸ்
முன்னே நடந்துமுத் தந்தந்து காட்டிட
அந்நேரம் யூதர் அவரைப் பிடித்திட
அங்கு நின்றோடினரே—சீஷரில்
ஆரும் இருந்திலரே.

5.
தன்னந் தனியரை சாந்த சொரூபியை
சங்கிலி, வார்,கயிற் றால்கொண்டு கட்டியே
முன்னும்பின் னும்இழுத் துத்தள்ளி ஏகினார்
மூர்க்கர்கள் கொக்கரித்தே—கொடிய
போர்க்களம் போல் இரைந்தே.

6.
தள்ளி இழுத்துத் தயாளசம் பன்னரை
அவ்விரா வேளையில் அந்நகர் வீதியில்
எள்ளி நகையாடி ஈனர்கொண் டுசென்றார் 
எத்தன் கைப்பாசிடமே—துய்யபரி
சுத்தராம் செம்மறியை.

7.
வைத்தபொய்ச் சாட்சிகள் மாறுப டல்கண்டு
மவுனமாய் நின்ற மனுமகனி டம்சென்று
அத்தனின் போதகம் ஏதென்று சாவினான்
அன்னடு வோர் கொடியன்—அவர்திருக்
கன்னத் தறைந்தனனே.

8.
நீதி ஸ்தலந்தன்னில் நின்றோர் உதைக்கவும்
நாதன் கண்ணைக் கட்டிநேயப் புடைக்கவும்
ஓது அடித்தது யாரென்று சாவவும்
வாதனை செய்தனரே—அந்தப்
பாதகர் ராமுழுதும்.

9.
ஆதரவற் றஎம் நாதன் செவிகளில்
அம்புபோல் பாய்ந்தது அந்நேரம் ஓர்குரல்;
பேதுரு சீஷர் மறுதலித்த சத்தம்
ஓதுங்கள் சோதரரே—அய்யனின்
மாதுயர்க் கேதுஇணை?

10.
காலையில் ஓர்முறை கைப்பாசன் மீளவும்
கர்த்தர் மீதாணையாய்க் கூறெனக் கேட்கவும்
சீலபி தாமகன் தாமென்ற உண்மையைச்
செப்பினார் தேவசுதன்—மரணத்
தீர்ப்பளித் தார்ப்பரித்தார்.

11.
போஞ்சு பிலாத்திடம் புல்லர்கொண் டுசென்றார்
தாஞ்செய்த தீர்ப்பதைச் சாதித்தி டுவென்றார்
காஞ்ச மனங்கண்டும் கண்யமில் லாதவன்
காட்டின கோழைத்தனம்—என்சேசுவை
வாட்டி வதைத்ததுவே.

12.
பாவி ஏரோதனின் பாழ் பரிகாசமும்
பரபாசோ டொப்பிட்டுப் பார்த்தமா தோஷமும்
கூவின யூதரின் நிந்தைஆ பாசமும்
கொற்றவரின் இதயம்--வெந்தழல்
பற்றவே யய்ததுவே.

13.
முற்ற வெளியிலே கற்றூணில் கட்டியே
சற்று மிரங்காத சண்டாள யூதர்கள்
சுற்றி அடித்ததால் தூயபரன் சதை
அற்று விழுகுதய்யோ--திருரத்தம்  ஆறாய்ப் பெருகுதய்யோ.

14.
அங்கம் நடுங்குதே அய்யோ என்னேசுவே
துங்க வர்ணச் சிவப்பா டையைப் போர்த்தியே
பங்கமாய் முள்முடி வைத்த சிரந்தன்னில்
பாய்ந்து அடிக்கின்றனரே--கண்ணில்ரத்தம் 
தோய்ந்து தெறிக்கின்றதே.

15.
காணச் சகியாத கண்ணறாவி கண்டு
கல்லும் உருக இதோமனி தனென்றான்
ஈனரோ கொல்லும் கொல்லுமென்ற லறினார்
ஏசு எம் இரட்சகரைப்—பிலாத்தனும்
நீசர்க்குக் கையளித்தான்.

16.
பாரச் சிலுவையைத் தோளில் சுமத்தியே
கோரக் குரூர ஆவேசங் கொண்டயூதர் 
சாரும் கொலைக்களம் சேர விரைந்ததால்
தள்ளாடியே விழுந்தார்--பின்னெழுந்து
தாங்கித்தாங் கிநடந்தார்.

17.
தாயார் புலம்பிட சார்ந்தவர் பின்வர
சேயின் துயர்கண்டு தாயின் மனம்வேக
பாயும் புலிகள்போல் பஞ்சமா பாதகர்
ஆயனை வேகமதாய்--கல்வாரிக்கு
அடித்து நடத்தினரே.

18.
மகனேஎன் செல்வமே மாணிக்க தீபமே
இகலோகம் ஈடேற என்மக வானீரே
ஜெகமீது மைக்கொல்லும் தீயோர்க்கும் நீரல்லோ
திவ்யரட்ச கராவீர்--இதையவர்
தெரிந்துகொள்ளா ததேனோ?

19.
கண்ணே மணியே என்பொன் னானஉம்ரத்தம்
மண்மீதும் கல்மீதும் வழிந்தோடவோ பெற்றேன்
ஸ்வர்ணத் திருமுகம் தூசி உமிழ்மூடி
சோம்பின தேன்மகனே--என்றழுதாள்
சோக வியாகுலத்தாய்.

20.
கல்வாரிக் காட்சியைக் காணச் சகிக்குமோ
கங்குலா ணியாலே தொங்குகின் றார்தேவன்
கள்வர் நடுவினில் காய்ந்த குருசினில்
கயவர் ஏசிநகைக்க--இகபரம்
கண்டும் புறக்கணிக்க.

21.
தேகம் எல்லாம் ஏககாய மதாகவே
சிந்தின ரத்தத்தால் வாதனை மீறவே
சோகமுடன் ஏழு வார்த்தைகள் கூறினார் 
சோர்ந்த யர்ந்தஏசுவும்--திருச்சிரம்
சாய்த்து மரித்தனரே.

22.
மரித்த மனுவேலன் மார்பதை ஈட்டியால்
வகிர்ந்து பிளக்க தண்ணீர்ரத்தம் சிந்திற்று.
தரித்த ஐங்காயங்க ளோடுஉ லகத்தை
தார்வேந்தர் ரட்சித்தாரே--என்னெஞ்சமே
பார்உன் பாவக்கேடதை.

23.
வானம் குமுறவும் பூமி அதிரவும்
மரித்தோர் கல்லறை திறந்து மறையவும்
மானகர் ஆலயத் திரையும் கிழியவும்
வையகமே இரங்க--என்னெஞ்சேநீ
மட்டும் இரங்காயோ?

24. எந்தையே ஏசுவே ஏக தயாளனே
என்னை ஈடேற்ற இறந்த குணாளனே
சொந்த என்பாவங்கள் சொல்லி லடங்காதே
சுவாமி பொறுத்தருளும்--அடிமையை
சுவாமி மன்னித்தருளும்.