இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருவடி சப்தம்!!

(பிரான்சிஸ் தாம்ஸன் எனும் ஆங்கிலக் கவிஞர் எழுதிய நூலையொட்டி எழுதப்பட்டது.)

1. ஆத்துமம் சேசுவைப் பின்செல்லத் தயங்குகிறது.

எந்தனை அவர் பதம் ஆட்கொள்ள 
இறையவர் அணுகிய போதெல்லாம் 
சிந்தனை சிதறிய சித்தங்கொண்டு 
திருவடி பின்செல மறுத்து வந்தேன்.
நிந்தனை செய்திடல் கருத்திலில்லை; 
நேர்வழி செல்லவும் ஆவலில்லை.
வந்தனை புரிந்தவர் வழிநடந்தால் 
மற்ற எச்சுகமுமே கிட்டிடாதென்   
றிந்தஓர் பயத்தினை மனத்திலுன்னி 
இறைவரை விலகவும் துணிந்தனன் யான்.
அந்தமார் பிரசன்ன அன்பதுவோ 
அடியனின் அசட்டையைக் கருதவில்லை 
எந்த நேரத்திலும் எனைத்தொடர்ந்து 
"எம்மை நீ பின்செலா விலகுவையேல் 
பந்தமார் உன் நிம்மதிபோம் 
பாலகா, வருந்துவை'' எனப் பகன்றார்.

2. ஆத்துமம் சேசுவைப் பின்செல்ல மறுக்கிறது.

மனச்சாட்சி கண்டனம் ஓர் புறமும் 
மற்றவர் தாட்சணியம் ஓர் புறமும் 
இனச்சூழ்ச்சி கண்டனம் ஓர் புறமும்
ஏளனம் செய்பவர் ஓர் புறமும் 
தினம் பிய்த்துத் தின்றன என் மனத்தை 
திருவடி சப்தமோ தெளிவுடனே 
சினப்பேய் சரீரம் தீயுலகம்
சேர்ந்தயிம் மூன்றினை வெறுத்துதறி 
வனப் பேறும் தன் வழிசெல்ல என்னை 
வருந்தி அழைத்தது மாண்புடனே
முனம் தீய வாழ்வினில் மூழ்கியதை 
முற்றும் அனுபவித்தே மகிழ்ந்து 
பினம் தூய வாழ்வதைத் தேட எண்ணும் 
பேதை யெனைத் துடர்ந் தேகு மலர் 
"என தாகும் உன்னெஞ்சம் தீமையினால் 
இளைப்பாறலாகா'' தென மொழிந்தார்.

3. ஆத்துமம் சேசுவிற்குப் புறங்காட்டி ஓடுகிறது.

ஓடினேன் இரவுபகல் ஓய்வில்லாது 
உன்னதரின் பிரசன்னம் மறக்கவெண்ணி 
தேடினேன் மற்றவையெலாம் நினைந்து 
திங்களொடு ஆண்டுபல சென்றதாங்கே.
மூடினேன் எனதுமன வாசல்தன்னை
மூலைமுடுக் கேகியாண் டொளியலானேன்.
வாடினேன் எனையறியா; எனினுமந்த 
வல்லபரை மறந்திடவும் முடியவில்லை. 
பாடினேன் அகத்தினுள்ளே பலவும் பற்றி 
பரன்எனையே விட்டகன்றால் போதுமென்று 
ஆடினேன்; ஆயின்என்ன? என்னெஞ்சத்தில் 
அகன்றதொரு பாதாள அவநம்பிக்கை 
சூடிய தாற்பயந்து தயங்கும்வேளை 
துடர்ந்தஅவர் பாதவடி சப்தம்கேட்டேன்.
நாடினார், “மகனே, நமை மறந்தையாகில் 
நம்பிக்கை யனைத்துமுனைத். துறக்கும்'' என்றார்.

4. ஆத்துமம் உலக சுகபோகத்தில் சேசுவை மறக்கின்றது! 

நஞ்சகம் மிகுந்த கள்வர் நயனநீதி 
நாம்டினைத் துறந்துகா டடைதல்போல 
நெஞ்சகம் தனிலொளிய லாகாதாலே 
நிறைந்தவெளி யுலகத்தை நேமிச்சென்றேன்.
கொஞ்சகம் வாஞ்சையொடு எனதுபற்றை 
கொடுத்ததற் கடிமைபூண் டொழுகலானேன். 
வஞ்சகம் நிறைந்தவது கணத்திலென்மேல் 
வைத்தவன் பினைமறந் தேகிற்றந்தோ!
அஞ்சுக மொழியியம்பும், அடுத்த நேரம் 
அடங்காத ஆத்திரத்தால் வசையும்பேசும்
தஞ்சுகம் ஒன்றினையே கருதுங் கீழ்மை 
தகைமைகண் டிறப்பதுவே தகுதியென்றேன்,
வெஞ்சுகம் இதனடுவே அவர்துடர்ந்து
விரைந்துவந்து பாதவடி சப்தம்கேட்டேன். 
"பஞ்சையே, நீ நமையே வெறுத்தையாகில்
பாரனைத்து முனைவெறுக்கு'' மெனப்பகன்றார்.

5. ஆத்துமம் தேவநேசத்தை விட்டு உலக நேசத்திற்காகப் பாடுபடுகிறது.

வாலர்க ளாதியோர் சுயநலத்தர் 
வஞ்சக நெஞ்சினர், மாறுபவர். 
பாலர்க ளோவெனில் மாசற்றவர், 
பரிவுள்ள அன்பினர், நேர்மையினர். 
சீலர்க ளாமிவர் நேசமதே 
தீய்ந்த மனத்துய ராற்றுமென 
ஞாலம் திலதற்கா யுழைக்க 
நைந்த உளத்தோடு ஏகினன்யான். 
நூலறி வாரது ஞானமொடு 
நுட்ப அனுபவ ஞானங்கொண்டு 
காலம றிந்துசெய் நன்மையெலாம் 
கர்த்தரை விட்டிடி லோநிலையா. 
பாலர்க ளில்சில ரோஇறந்தார்; 
பருவங் கடந்தோ ரெனைமறந்தார்; 
ஓலமிட் டேங்கினேன் உம்பர்சப்தம் 
"உலகம் நிலையா'' தென்றதுவே.

6. ஆத்துமம் இயற்கையில் சாந்தியைத் தேடுகிறது.

மானிட ஜென்மமே கைத்தலினால் 
வரைபுனல், ஓடைதருக் கள்கொண்ட 
கானிடம் சென்று இயற்கையொடு 
கலந்து உறைதலே மேன்மையென்று 
வானிடம் சுற்றி அலைந்துவரும் 
வண்ணக் கிரக உடுக்களையும் 
பானிட மீதிருந் தூர்ந்துவரும் 
பஞ்ச வருண ஒளியதையும் 
தேனிடம் பெற்றம லரைத்தீண்டி 
சேர்மணத் தோடலை தென்றலையும் 
யானிடம் தேடியே நட்புக்கொண்டேன் 
யாவரும் கேட்டு நடுங்கிடுவீர். 
கோனிடந் தேயவை கொண்டவன்பு 
கூற்றென என்னை அறுத்தெறிய 
தானிடம் தேடித் துடர்ந்த அவர் 
தாங்கிப் புரந்தனர் நாவினிலே.

7. ஆத்துமம் சேசுவில் மட்டுமே சமாதானம் அடைகிறது.

தாங்கிப் புரந்த திருவடியில் 
தாழ்ந்து பணிந்தஎன் நெஞ்சத்திலே 
தேங்கிப் படிந்த கசடுகளைத் 
தேய்த்துக் கழுவினர் செங்கரத்தால்; 
வீங்கிப் பருத்த என் ஆணவமும் 
வேறு பாவக்கறை யும்மறைய 
ஓங்கித் தளிர்த்தது ரம்மியஞ்சேர் 
உத்தம சாந்தியோ டின்பஅருள்.
போங்கில் அலைந்தஎன் தத்துவங்கள் 
பூரண ரோடு இயங்கிடவே 
சாங்குலிமீ யாலடை தாகமொடு 
சத்தியர் அன்பதை யேஇரந்தேன். 
வாங்கிப் பருகின பேரமுதம் 
மாற்றி யமைத்தது என் அகந்தை 
ஈங்கினி வேறெனக் கேதுகுறை 
இன்பப் பேரின்ப அமைதிகண்டேன்.