இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுநாதர் இருதயத்தைக் கேட்கிறார்!

கிறீஸ்துநாதர்: என் மகனே, உன் இருதயத்தை எனக்குக் கொடு (பழமொழி.28:26).

என் மகனே! என்னை முழுவதும் உனக்குக் கையளித்ததை நினைத்து அகமகிழ்கிறாய்; ஆனால் நீ உன்னை முழுவதும் எனக்குக் கையளிக்கப் பிரியப்படுவதில்லை.

உனக்கு நான் பாக்கியம் கொடுக்க இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறாய்; ஆனால் அப்பாக்கியத்தை அடைவதற்காக எனக்கு ஊழியம் செய்ய நீ பிரியப்படுவதில்லை.

மற்றவர்களோடு சேர்ந்து என்னைப் புகழ்வதில் பெருமை கொள்கிறாய். ஆனால் துஷ்டர்களுக்கு விரோதமாய் என் பக்கம் நின்று என் திருச்சபையைக் காக்க நீ பிரியம் கொள்வதில்லை.

என் மகிமையில் பங்கடைய ஆசிக்கிறாய். ஆனால் என் பாடுகளில் பங்கடைய நீ விருப்பம் கொள்வதில்லை.

மனிதர் உன்மட்டில் நல்ல அபிப்பிராயம் கொள்ள ஆசிக்கிறாய்; நான் உன் மட்டில் நல்லெண்ணம் கொள்ளும் படியாக நீ முயற்சிப்பதில்லை.

மற்றவர்கள் உன்னை மதிக்க வேண்டுமென ஆசிக் கிறாய். அம்மதிப்பிற்குத் தகுதியுள்ளவனாக உன்னை ஆக்கிக் கொள்ள நீ முயற்சிப்பதில்லை.

மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க ஆசிக்கிறாய். ஆனால் நீயோ பாவ வழியை விட்டு விலகிக்கொள்ள முயற்சிப்பதில்லை.

 உன்னிடம் இருப்பதை எனக்குக் கொடு; உன்னிடம் இல்லாதது உனக்குக் கொடுக்கப்படும்.

உன் இருதயத்தைக் கொடு, என் நேசத்தைப் பெறுவாய்.

உன் நினைவுகளை எனக்குக் கொடு; என் ஞானத்தைப் பெறுவாய்; உன் கிரியைகளை எனக்குக் கொடு, என் புண்ணியத்தைப் பெறுவாய்.

என் நேச மகனே, உன் உயிரை எனக்குக் கொடு; என் ஜீவியத்தைப் பெறுவாய்.

அதிகம் பெற்றிருப்பவன் அதிகம் கொடுக்கக்கடவான். என் மன்னிப்பை அதிகமாய் அடைந்தவன் என் நன்மைத் தனத்தை அதிகமாகப் போற்றக்கடவான்.

என் மகனே, நீ என்னை நேசித்தால், என் கற்பனைகள அனுசரி (அரு.14:15).

என் கற்பனைகளைக் கைக்கொண்டு அவைகளை அனுசரிக்கிறவன் எவனோ, அவன் என்னை சிநேகிக் கிறவன். என்னை சிநேகிக்கிறவனோ என் பிதாவினால் சிநேகிக்கப்படுவான். நானும் அவனை சிநேகித்து அவனுக்கு என்னைத்தானே வெளிப்படுத்துவேன் (அரு.14:21).

பிதா என்னை நேசித்ததுபோல, நானும் உன்னை நேசிக்கிறேன். நீயோ, என் மகனே, என் நேசத்தில் நிலைத்திரு (அரு.15:9).

நான் திராட்சைச் செடி; நீ கொடியாய் இருக்கிறாய். நீ என்னிலும். நான் உன்னிலும் நிலைத்திருந்தால், நீ மிகுதியான கனி தருவாய்; ஏனெனில் என் உதவியின்றி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது (அரு.15:5).

நான் உனக்குச் சொல்ல வேண்டியவை இன்னும் அதிகம் உண்டு. ஆனால் இப்பொழுது அவைகளைத் தாங்க மாட்டாய் (அரு.16:12).

ஆத்துமம்: தளங்களின் ஆண்டவரே, உம்முடைய வாசஸ்தலங்கள் எம்மாத்திரம் இன்பமானவைகளாய் இருக்கின்றன! என் ஆத்துமம் ஆண்டவருடைய ஆலயப் பிரகாரங்களில் பிரேçம் கொண்டு சோர்ந்து போகின்றது (சங்.85).

ஓ என் சேசுவே! என் அன்பே! என் அரசரே! என் தேவனே! என் நேசத்தின் ஏக நாயகரே! நான் உம்மிலேயே ஜீவிக்கும்படியாக உமது திரு இருதயத்தின் பாதுகாவலில் இப்பொழுதே என்னை ஏற்றருள்வீராக.

இக்கணமே உமது மட்டற்ற நேசமாகிய கரைகாணாத சமுத்திரத்தில் என்னை அமிழ்த்தியருளும். உமது அன்பென் னும் அக்கினிப் பிரவாகத்தில் என்னை ஆழ்த்தி, அதன் அனலிலேயே என்னைத் தகித்தருளும். அங்கேயே, ஓ! என் மதுர சேசுவே! உமது இனிய பிரசன்னத்தால் எனக்கு ஆறுதல் அளித்தருளும். அங்கேயே என்னை இரட்சித்த திரு இரத்தத்தின் விலையற்ற மதிப்பை நான் அறியும்படி செய்தருளும். அங்கேயே உமது திவ்விய நேசத்தின் இனிய குரலுக்கு நான் செவிசாய்க்கும்படி திருவுளம்பற்றியருளும். அங்கேயே உமது புனித நேசத்தின் ஆழ்ந்த பெருங்கடலில் நான் மூழ்கித் திளைக்க, உம் இனிய தயாளத்தால் என்னை உம் பக்கமாக இழுத்தருளும். கடைசியாய், என் ஆத்துமமானது உம்மை மாத்திரமே ஆசிப்பதால், அங்கேயே உம்மை நித்தியமாகத் தரிசிக்கும் பேரின்ப பாக்கியத்தை எனக்குக் கட்டளையிட்டருளும்.

ஓ என் அன்பரே! நான் எதைப் பருக தாகம் கொண்டிருக்கிறேனோ, அந்த ஜீவிய தண்ணீர் நீர்தாமே. இதோ, உம்மை நோக்கி இழுக்கப்படும் என் இருதயம் அந்தத் தாகத்தால் வருந்துகின்றது. உமது திரு இருதயத்தின் வாசலை எனக்குத் திறந்தருளும். என் எளிய இருதயத்தைப் பாரும். அந்த இருதயம் இனி என் கையில் இருக்க வேண்டியதில்லை.

ஓ சேசுவே! ஓ என் ஏக நம்பிக்கையே! பாவிகளுக்காக எப்போதுமே திறந்திருக்கும் உமது பரிசுத்த இருதயம், என் நேசத்திற்காக ஊடுருவப்பட்ட அந்த தெய்வீக இருதயம், என் ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிந்தவுடன், அதன் முதல் அடைக்கலமாக இருக்கக்கடவது. அங்கேயே உமது அன்பின் ஆழத்தில் என் பாவங்கள் எல்லாம் ஒரு நொடியில் தகித்து எரிந்து போகக்கடவது. ஆமென் சேசு. (அர்ச். ஜெர்த்ரூத்தம்மாள்).

மனவல்லய ஜெபம்: எங்கள் நேசத்தால் பற்றியெரியும் சேசுவின் சற்பிரசாத இருதயமே, உமது நேசத்தால் எங்கள் இருதயங்கள் பற்றியெரியச் செய்தருளும் 

(300 நாள் பலன், பாப்பரசர் 13ம் சிங்கராயர்).