புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - வண்டு விடுதூது

நேரிசை வெண்பா. 

உம்பர்தொழு மெண்ணூர்க் குண்டே பல நினைவு
இம்பரடி யேன்மே லிருக்குமோ? அம்புயங்கொள்
தேனேயன் னாமம்போற் செப்பத் தெளிந்த நீ
தானே வரச்சொல் தனித்து.

அம்மானை
மடக்கு - தாழிசை. 

தனியான வெண் ணூர்த் தலத்திறைவர் எப்பொழுதும்
தணிவான மாதவத்தைத் தாங்கினர் காண் அம்மானை
தணிவான மாதவத்தைத் தாங்கினரே யாமாகில்
கலியாணஞ் செய்வரோ? காரிகையை அம்மானை
கலியாணஞ் செய்ததுமோர் கற்பனையால் அம்மானை.

நேரிசை வெண்பா

கற்பலகைக் கண்வரைந்த கற்பனைகள் கண்டடையச்
சொற்பலகைக் கொண்டு தொழுவோர்க்கும் பற்பலகை
வல்லினமு மெல்லினமும் வந்துபடா தெண் ணூரார்
அல்லினத்திற் சொல்லியதென்? னார்வு.

சித்து
கட்டளை மண்டலக் கலிப்பா. 

ஆர்வங் காட்டிய தேவான் வாழுமூர்
அன்னங் கண்படு பண்ணையெண் ஹாதிற்
சேர்வம் பித்தளை மா தங்க மாக்குவம்
சிறக்குங் கஞ்சத்தைப் பொன்னாக மாற்றுவம்
தேர்வம் ஈயத்தை வெள்ளிய தாகவே
செய்வம் வெள்ளியும் பொன்னென வொப்பவே
பூர்வ மில்லாப் புதுமையி லெங்களைப்
போலொரு சித்தர் பூவி லரிதரோ.