புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏலாக்குறிச்சி தூய அடைக்கல அன்னை பதிகம் மன்றாட்டுகள் - அணிந்துரை

"அருண் மொழிச் செல்வர்” 
பேராசிரியர் பா. வளன் அரசு, M.A., 
தூய யோவான் கல்லூரி, 
பாளையங்கோட்டை

தஞ்சைப் புலவர் தந்தருளிய திருக்காவலூர்த் திருப்பதிகம் நெஞ்சையள்ளும் வகையில் பத்திச் சுவை பொலிய மிளிர்கிறது. உருக்கமாகவும் உணர்வுப் பெருக்கமாகவும் திகழும் பத்துப் பாக்கலான இச் சிறு நூல் திருக்காவலூர் அடைக்கல அன்னையின் அளப்பரும் பேரருளைப் பாடிப் பரவிடத் துணை புரிகிறது.

ஏலாக்குறிச்சியாக இருந்த சிற்றூர் பதினெட்டாம் நூற்றாண்டில் திருக்காவலூராக மாறியது! கோனான் குப்பம் ஆரிய நல்லூராக அமைந்தது. இத்தாலியத் தமிழ்த் தொண்டர் வீரமாமுனிவர் நல்ல தமிழ் உணர்வுடன், ஊரெல்லாம் உண்மைத் தமிழ்த் திருப்பேரே திகழ்ந்திடச் செய்தார். அமல அன்னையின் தாமரைத் திருவடிகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு இறையடியார் அனைவரையும் உய்விக்க முனைந்தார். நினைந்து நினைத்து வித்தகர் வீரமாமுனிவர் பாடிய ருளிய பாசுரங்கள் திருக்காவலூர்க் கலம்பகமாக ஒளிரக் காண்கிறோம்

முப்பத்தாறு ஆண்டுகளில் 1711-1747 முப்பத்தாறு நூற்கள் நல்கிய முனிவர் பெருந்தகை திருமறைக்கும் தீந்தமிழுக்கும் ஒப்பில்லாத உயரிய தொண்டாற்றியுள்ளார். 'அடைக்கலமாலை”யில் வீரமா முனிவரே விளம்புவது போன்று அன்னை மரியின் பரிவினை, நேரேகண்டு களி கொண்டு அவள் திருவடி பணிந்து போற்றிப் புகழ்கிறார். அன்னை மரியாளின் அருளால் பதினேழாம் நூற்றாண்டில் 1665 ஆகிர்தமரியாள் வரைந்து வழங்கிய இசுபானிய ஏடாகிய "கடவுளின் நகரம்” கண்டு உவகை மிகக் கொண்டு தேம்பாவணி'' என்னும் காம்பாச் சுவைமிகு காப்பியத்தை மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து பாக்களாக உருவாக்கினார். "மறைமொழி வாயினன், மலி தவத்திறைவன், நிறைமொழிக் குரவன். நிகரில் கேள்வியன்" என்றெல்லாம் புகழுடன் நின்று நிலவும் வீரமாமுனிவர் தொண்டாற்றிய திருத்தலங்களுள் ஒன்று திருக்காவலூர்.

பதினான்கு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பத்தினைக் கொண்டு "திருக்காவலூர்த் திருப்பதிகம்” பாடியுள்ளார் தஞ்சைஅருட்புலவர் தாமசு அவர்கள். ஊனுருகவும் உளமுருகவும் அன்னை மரியின் மீது பாக்கள் பல பாடியுள்ள புலவர் மணியின் பணிக்கு இப்பதிகம் எடுத்துக்காட்டாக விலங்குகிறது. "தீஞ் சொற் கவிதையஞ் சோலைதனில் தெய்வீக நன்மணம் வீசும்'' என்ற பாரதியாரின் பாட்டு வரிகளுக்கு மேற்கோள் காட்டும் வகையில், களிகொண்டு மிக்க பேரளி கொண்டு நிலைகொண்டு காவலூர் வாழும்" அன்னையிடம் கசிந்துருகி மன்றாடுகிறார்.

கண்ணாலும் வாயாலும் தலையாலும் உள்ளத்தாலும் காளாலும் கையாலும் நெற்றியாலும் அன்னைக்கு அரும்பணியாற்றிட ஆவல் கொள்ளும் அடியார் திருக்கூட்டம் பெருமை பெறுவது உறுதி என்று நான்காம் பாடலில் நவில்கிறார். நெறிமுறைகளைப்பற்றி நினையாது கெட்டழியும் மாந்தரைப்பாடும் திரு நாவுக்கரசர், ''பாலனாய்க்கழிந்த நாளும், பனிமலர்க்கோதை மார் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவுடன் மூப்பு வந்து கோலனாய்க் ழிந்த நாளும் குறிக்கோளிலாது கெட்டேனே" என்று மொழிந்தார்!

"உன்னுவ தெலாம் தீமை, உரைப்ப தெலாம்வஞ்சம்
ஒருக்காலும் உண்மை வாழும் 
உறைவிடம் அறிந்திலேன் பரகதி நினைந்திலேன்
உன்மலர்த்தாள் எண்ணிலேன் 
பண்ணுவதெலாம் பழி; படிப்பதெலாம் களவு;
பற்றுவைத் தெந்த நாளும் 
பாவிப்ப துலகையே; சீவித் திருப்பதும் 
பாழுமுடல் பேணுதற்கே" (பாடல் 6)

என்று திரியும் உலகோரைச் சகத்தே திருத்திட, மனத்தகத்தே நினைந்து நெக் குருகி மரியன்னையை மன்றாடுகிறார். எட்டாவது பாடலில் அன்னையின்பேராற்றலையும் அருளாசீரையும் போற்றிப் பாடுகிறார். பத்தாவது பாடலில் அன்னையும் கன்னியுமாய் மரியாள் மிளிர்வதை முறையாக எடுத்தியம்புகிறார்.

திருக்காவலூர் அன்னை மரியாள் புகழ் பரப்பும் இந்நூல் இறையடியார்க்கு இனிய கனியமுதாக இலங்குகிறது. திருமறைத் தொண்டருக்குப் பத்திப்பனுவலாகத் துலங்குகிறது.

அன்பன் பா. வளன் அரசு