புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எக்காலக்கண்ணிகள்

உளியிட்டகற்போல் உருவாய்ப் பரத்தை நம்பி
புளியிட்ட செம்புபோற் பொருளாவதெக்காலம் ?

வேடிக்கையுஞ் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கையெல்லாம் மறந்திருப்பதெக்காலம் ?

பட்டுடையும் பொற்பணியும் பாவனையுந் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவது மெக்காலம் ?

அத்தனிருப்பிடத்தை ஆராய்ந்து புள்ளிநிதஞ்
செத்த சவம் போல் திரிவதினியெக்காலம்?

மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப்போக்காமல்
உற்றிடத்தைத் தேடி உறங்குவது மெக்காலம்?

இம்மைதனிற் பாதகனாய் இருள் சேருமிவ்வுடலப்
பொம்மைவிட்டு உன்னைப் போற்றி நிற்பதெக்காலம்?

நீர்மேற் குமிழியென நிசமற்ற வாழ்வைவிட்டுன்
பேரின்ப வெள்ளப் பெருக்கடைவதெக்காலம்?

அன்பைப்பெருக்கி பெரு அறிவையதின் மேற்புகட்டி
துன்பவலைபாசத் தொடாறுப்பதெக்காலம்?

கருவின் வழியறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவிவிழிநீர் சொரிந்து அன்பு கொள்வதெக்காலம்?

தோன்றாசை மூன்றுந் தொலைந்துன் னடிபணிந்து
சான்றோர்களாகத் தலைப்படுவ தெக்கலாம்?

அடர்ந்த மனக்காட்டை ஐந்துகாய நினைப்பால்
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவதினியெக்காலம்?

ஐந்து பொறிவழியால் அலையுமிந்தப் பாழ்மனதின்
சிந்தையெல்லாமுன்னிடத்தில் சேர்ப்பதினியெக்காலம்?

ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து
தூங்காமற்றூங்கிச் சுகம்பெறவ தெக்காலம்?

நீங்காப் பரலோக நித்திரை கொண்டேயிருந்து
ஓங்குங்கருணை வெள்ளத் துறுவதினி யெக்காலம்?

ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப்பிறவியதன் மயக்கறுப்ப தெக்காலம்?

சேயாய்ப் பிறந்து நிதஞ் செவிடூமை போலிருந்து
காயாவருளோங்கி காட்சி கொள்வ தெக்காலம்?

ஆறாப்பவக்கடலில் அமிழ்ந்து நின்று வீழாமல்
தேறாதசிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம்?

தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனிற் கண்டு திருக்கருப்ப தெக்காலம்?

பாவியென்றே பேர்படைத்து பாழ்க்குழியில் வீழாமல்
தாவியனைப்பற்றித் தவமுடிப்ப தெக்காலம்?