புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புயவகுப்பு

ஆசிரியவண்ணச் சந்தவிருத்தம்.

முதலடி. 

சகலவுயி ரண்ட வகிலவுல குண்ட
   பெருவெளி பரந்து பொருடொறு நிறைந்து
   தகுகதி ரொருகோடி விட்டுப் பொலிந்தன,
சசிகதி ருடுக்கள் மலைமணி தருக்கள்
   கடல்நதி யினத்தும் பொருள்பல வனைத்தும்
   தவறில முடியா தமைத்துப் பயந்தன,
சரணமென நின்ற வொருமுனியை யன்று
   மகரமினி துண்டு மறுகரை யுமிழ்ந்து
   தரவொரு நவமாக வைத்துப் புரந்தன,
சமர் சிறிது மின்றிப் பகைவர் நகர் குன்றி
   மதிலொடு தகர்ந்து பழமறை கொணர்ந்த
   தனதடி யவரோடு கூடிச் சினந்தன.

இரண்டாமடி.

பகைமையுறை யைந்து அரசர் பொர வந்த
   பொழுதிலொரு வேந்து படுதுயரி னீந்த
   பகலவ னெடுநேரம் நிற்கப் புரிந்தன,
பழமறை கொணர்ந்த வழிநதி பிரிந்து
   அலையிரு புறத்தும் மதிலென நிறுத்திப்
   பகர்வலி யிதுவாகச் சுட்டிச் சிறந்தன,
படர் முகில் படிந்து பாவையின் முகந்த
   மழையினி லமிழ்ந்து படிமுழு தழிந்து
   பல துயர் வெகுவாக வைத்துத் தணிந்தன,
பரவுநக ரைந்துங் கனல்பொழிய வெந்த
   புழுதி நிலை கண்டு அயலவர் மருண்டு
   பரிபவ நனிகாண வுற்றுச் சிவந்தன.

மூன்றாமடி.

நகவலகை தந்த கனியினை யருந்தி
   அரிவையி னமைந்த கொடுவினை புரந்த
   நரனென வடிவாகி யன்பிற் றிகழ்ந்தன,
நளிர் வரை விளங்க இருசிலையி லங்கு
   பழமறை வரைந்து முனிபெற விளம்பி
   நகுமறை திருவாசகத்திற் பொருந்தின,
நடுகடலி னூடு படையரச னோடு
   கயரத துரங்க மடிவுற தரங்கம்
   நடைபெறு மளவாக விட்டுக் கொதித்தன,
நரபதி குலத்து கனிமகளிடத்து
   கரமிசை வளர்ந்து வுரமிசை தவழ்ந்து
   நவில் திரு முலைபால் சுவைத்துக் களித்தன,

நான்காமடி.

ககனமு நடுங்கப் பகலவனொடுங்க
   மரமிசை மரித்து மறுபடி யுயிர்த்துக்
   கமழ் தரும் விருதோடு வெற்றிப் புனைந்தன,
கனகமுடி வேந்தர் திருவடி பணிந்து
   தமனியமு மீறைப் பரிமளமு மேறக்
   கனிவொடு தரு தூப வர்க்கங் கமழ்ந்தன,
கனை குரலின் சிங்க விடுதியி லடைந்த
   தவசியுயிர் கொண்டு கதிபெற நவின்ற
   கருணையின் பிரதாப மொய்த்துத் தெளிந்தன,
கலவமயி லன்னார் குலவுவய லெண்ணூர்க்
   கடியமலர் வாகை யுடையவளன் சூசை
   கமழ் திரு மகனார்ந்த கொற்றப் புயங்களே.

புயங்கவினை யானுயிர்க்குப் போந்தசன்ம மாசு
இயங்கு திங்க ளேழி விரித்தான் - நயங்கருதி
வந்தமைந்தா னெண் ணூர் மனுக்காள்! குறைதீர்வீர்
நுந்தமைந்த ரோடும் நுவன்று.

கட்டளைக் கலித்துறை. 

நுண்ணிய நூல்பல கற்றுத் தெளிந்தும் நுவன்று மென்ன?
மண்ணிய லாட்சியுங் கீர்த்தியும் பேரு மதிப்பு மென்ன?
தண்ணிய செந்தமிழ்ப் பாமாலை மேவித் தழைக்கு மெண் ணூர்ப்
புண்ணிய னின்னரு ளில்லாதபோது பொருளல்லவே.

எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம். 

பொருளை விரித்தானும் இருளை யிரித்தானும்
   பூவின் கரத்தானுந் தேவினுரத்தானும்
மருளை யுதைத்தானும் அருளை விதைத்தானும்
   மன்னர் குலத்தானும் நன்னர் புலத்தானும்
அருளை நிறைத்தானுங் கருணை வரத்தானும்
   அடவி நடந்தானும் புடவி கடந்தானும்
பரமபதத்தானுஞ் சிரமவிதத்தானும்
   பண்ணூர் தடத்தானும் எண்ணூரிடத்தானே,

கட்டளைக் கலித்துறை. 

தானே தனக் காத்த தாளாய் அடியர் தமதுளப்பூந்
தேனே கருணைக் கடலே எண் ணூர்செய் செழுந்தவத்துக்
கோனே முடவன் மலைத்தேன் விரும்பிய கொள்கையைப்போ
லானே னினதரு ணோக்கியென் னார்வத்தை யாண்டருளே