இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுவிடம் தாழ்ச்சியோடு நடந்துகொள்ளுதல்!

கிறீஸ்துநாதர்: ஏனெனில் எல்லோருமே தண்டனைக்குப் பாத்திரவான்கள் என்று நினைத்துக்கொள் (சர்வப்.8:6).

என் மகனே! நான் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ளவராய் இருக்கிறேன் என்று நீ அறிவாய்; என் சீடர்களும், சிநேகிதர் களும் அவ்வண்ணமே தாழ்ச்சியுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று அறிந்துகொள் (மத்.10:38).

தாழ்ச்சியினால் மனித அவதாரம் எடுத்தேன். தாழ்ச்சி யினால் எளிய குடும்பத்தில் பிறந்தேன். தாழ்ச்சியினால் மாட்டுத் தொழுவத்தை என் பிறப்பிடமாகத் தெரிந்து கொண்டேன். எளிய இடையர்களுக்கு என் வருகையைப் பிரசித்தப்படுத்தினேன். துஷ்ட ஏரோதுக்குப் பயந்தது போலப் பரதேசம் சென்றேன். தாழ்ச்சியினால் முப்பது வருடங்கள் மறைந்த ஜீவியம் ஜீவித்தேன். கைவேலை செய்து தொழிலாளியாய் வாழ்ந்தேன். தச்சுவேலை செய்யும் சூசையப்பரின் மகன் எனக் கருதப்பட்டேன் (மத்.21:5, 11:29).

தாழ்ச்சியினால் படிப்பற்றவர்களையும், நாகரீகமற்றவர் களையும் என் அப்போஸ்தலர்களாகத் தெரிந்துகொண் டேன. ஆயக்காரர்களோடும், பாவிகளோடும் கலந்துற வாடினேன்.

தாழ்ச்சியினால் கேவலமும், அவமானமும் நிறைந்த சிலுவை மரணத்திற்கு என்னைக் கையளித்தேன்.

என் நேசத் தாயார் தாழ்ச்சியுள்ளவர்களாய் இருந் தார்ககள். அதனால் அல்லவா அவர்கள் சகல பெண்களுக் குள்ளும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆனார்கள்! அதனால் அல்லவா சர்வேசுரன் தமது அடிமையானவளின் தாழ்மையைக் கண்ணோக்கினார்! அதனால் அல்லவா சகல சந்ததிகளாலும் பாக்கியவதி என்று அழைக்கப்பட அவர்கள் தகுதியுள்ளவர்களானார்கள்!

என் அப்போஸ்தலர்களும், வேதசாட்சிகளும், ஸ்துதியர் களும், கன்னியர்களும், சகல அர்ச்சியசிஷ்டவர்களும் தாழ்ச்சியாலேயே மகிமையடைந்தார்கள்.

தாழ்ச்சி இல்லை என்றால் எனக்கு ஊழியம் செய்ய முடியாது. நான் அகங்காரிகளைத் தாழ்த்தி, தாழ்ச்சி உள்ளவர்களை உயர்த்துவேன் (லூக்.1:52).

தாழ்ச்சியில்லாத சம்மனசுக்கள் பசாசுக்களாய் மாறி னார்கள்; தாழ்சசியில்லாத முதல் மனிதர்கள் என் இஷ்டப் பிரசாதத்தை இழந்தார்கள்.

என் மகனே! உனக்குத் தாழ்ச்சியில்லாமல் போனால், நீ என் சீடனாக முடியாது. தாழ்ச்சியோடு உன் நினைவு களையும், ஆசைகளையும் எனக்கு வெளிப்படுத்து. கல்வி சாஸ்திரத்தால் காணக்கூடாதவைகளைத் தாழ்ச்சியினால் கண்டுகொள்வாய்.

ஞானத்தின் அஸ்திவாரம் தாழ்ச்சியென நான் ஏற்படுத்தி யிருக்கிறேன். தாழ்ச்சியே ஞானத்திற்குச் சந்தேகமற்ற நிச்சயத்தையும் குறைவற்ற வளர்ச்சியையும் நீடிப்பையும் கொடுக்கிறது. உனக்குத் தாழ்ச்சியிருந்தால் அல்லவா உனக்குத் தெரியாதவைகளை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வாய்? உனக்குத் தாழ்ச்சியிருந்தால் அல்லவா உன் சந்தேகங்களை உன் ஆன்ம குருவிடம் கேட்டு நிவிர்த்தி செய்துகொள்வாய்? உனக்குத் தாழ்ச்சி இருந்தால் அல்லவா பெரியோர் சொல் கேட்டு உன்னைத் திருத்திக் கொள்வாய் (சங்.22:1)?

தாங்கள் கொண்ட எண்ணம் பலிக்க முயற்சிப்பவர்கள் அநேகர்; தங்களைத் தாழ்த்தி, தங்களைத் திருத்திக்கொள்ள விரும்புகிறவர்கள் வெகு சிலரே. தாழ்ச்சியாய் இருந்தால், நீ கற்புள்ளவனாய் இருப்பாய், நீதியுள்ளவனாய் இருப்பாய், ஞானம் உள்ளவனாய் இருப்பாய். உன் கிரிகைகள் கபடற்ற வையாயும், உண்மையுள்ளவையாயும், பலனுள்ளவை யாயும் இருக்கும்.

நன்மை செய்வதில் ஆசை உனக்கு அதிகம் உண்டென்று நினைக்கிறாய். அப்படியானால் மற்றவர்கள் அடையும் ஜெபத்தைக் கண்டும், அவர்களுக்குக் கிடைக்கும் புகழ்ச்சி யைக் கேட்டும் மனம் வருந்துகிறாய்? உன்னிடம் தாழ்ச்சி இல்லாததால்தான்.

நீ மற்றவர்களது குறைகளை எடுத்துக் கூறுகிறாயே, மற்றவர்கள் உன்மீது குறை கூறும்போது, ஏன் சஞ்சலப்படு கிறாய்? உன்னிடம் தாழ்ச்சியில்லாத காரணத்தாலேயே (மத்.7:1).

உனக்கு ஒரு துன்பம் அல்லது வியாதி, கஷ்டம் அல்லது நஷ்டம் வந்த மாத்திரத்தில் சர்வேசுரன் பேரில் முறையிடு கிறாய்; பார்த்தவர்களிடம் எல்லாம் ஆறுதலும் சலுகையும் தேடுகிறாய். காரணம் என்ன? உன்னிடம் தாழ்ச்சியில்லை என்பதுதான்.

உனக்குப் பெரியோர்களாயிருப்பவர்கள் இடும் கட்டளைகளில் மகிமையும் சந்தோஷமும் கிடைப்பதா யிருந்தால் உன் கல்வி சாஸ்திரத்தையும், தகுதிகளையும் உள்ளபடி அறிந்து அவ்வேலை அல்லது உத்தியோகத்தைக் கொடுத்தார்கள் என நினைத்து அகமகிழ்கிறாய்; இல்லை என்றால் அவர்கள் பாரபட்சமுள்ளவர்கள் எனத் தீர்மானம் செய்து விடுகிறாய்.

அற்ப இன்பம், அல்லது மகிமை வந்த மாத்திரத்தில் அகங்காரத்திற்கு இடங்கொடுத்து என்னை மறந்து விடுகிறாய். சொற்ப துன்பம் அல்லது அவமானம் வந்து விட்டாலோ, அவநம்பிக்கைக்கு இடங்கொடுத்து என்னை வெறுத்து விடுகிறாய்.

என் மகனே! சகல நன்மைகளுக்கும் காரணம் தாழ்ச்சி என்பதும், சகல தின்மைகளுக்கும் காரணம் அகங்காரம் என்பதும் எக்காலமும் உன் ஞாபகத்தில் இருக்கட்டும்.

ஆத்துமம்: தேவனே! என் புத்தியீனத்தை அறிவீர். என்னுடைய பாவங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை (சங்.68:5).

ஆண்டவரே! நான் தாழ்த்தப்படுமுன்னே வழிதப்பி நடந்தேன். ஆதலால் நீர் என்னைத் தாழ்த்தினதே எனக்கு நல்லது அதனால் உமது நியாயப் பிரமாணங்களைக் கற்றுக் கொண்டேன் (சங்.118:71). உம்முடைய தீர்ப்புகள் நீதி யுள்ளவை என அறிந்தேன். உமது உண்மையின்படியே என்னைத் தாழ்த்தியிருக்கிறீர் (சங்.118:75).

என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் யாவரும் உமது சமூகத்திலேயே இருக்கிறார்கள்; என் இருதயம் நிந்தை அவமானத்திற்கே காத்துக்கொண்டிருக்கிறது (சங்.68:20). நீர்ப்பிரவாகம் என் மேல் புரளாமலும், ஆழத்தில் நான் மூழ்கிப் போகாமலும், கிணற்றின் வாய் என்னை மூடிக் கொள்ளாமலும் செய்தருளும். நான் படுகிற கஷ்டத்தையும், அவமானத்தையும், வெட்கத்தையும் நீர் அறிந்திருக்கிறீர் (சங்.68:15,19).

ஆண்டவரே! ஆண்டவரே! உமது கிருபாகடாட்சம் மதுரமுள்ளதாயிருப்பதால், உமது திருநாமத்தின் நிமித்தம் என்னை ஆதரியும் (சங்.108:20). நான் மிகவும் சிறுமைப் பட்டிருப்பதால், என் பூர்வீக அக்கிரமங்களை ஞாபகம் பண்ணிக்கொள்ளாதேயும் (சங்.78:8). நான் சிறுமை யுள்ளவனும், எளியவனுமாயிருப்பதினாலும், என் இருதயம் எனக்குள்ளே கலங்கியிருப்பதினாலும் என்னைக் காப் பாற்றும் (சங்.108:21). நானோ தரித்திரத்தில் வியாகுலப் படுகிறவனாய் இருக்கிறேன்; சர்வேசுரா! உம்முடைய வல்லபமே எனக்கு அடைக்கலமாயிற்று (சங்.68:30).

தேவன் ஒருவனை உயர்த்துகிறார்; ஒருவனைத் தாழ்த்து கிறார்; ஏனெனில் ஆண்டவருடைய கரத்தில் கசப்புள்ள இரசப் பாத்திரம் உண்டு (சங்.74:7). ஆனால் ஆண்டவர் பரதேசிகளைக் காப்பாற்றுவாய்; அனாதைப் பிள்ளைகளையும், விதவைகளையும் ஆதரிப்பார்; பாவிகளின் வழிகளையோ சிதறடிப்பார் (சங்.145:8). தரித்திரர்கள் இதைக் கண்டு அக்களிக்கக்கடவார்கள்; சுவாமியைத் தேடுங்கள், உங்கள் ஆத்துமம் வாழும். ஏனெனில் ஆண்டவர் எளியோரது மன்றாட்டைக் கேட்டருள்வார் (சங்.68:33).

ஆண்டவரே! என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல; சம்பிரமத்தோடு (அகங்காரத்தோடு) நான் நடக்கிறதில்லை. எனக்கு மிஞ்சின காரியங்களில் நான் தலையிட்டுக் கொள்ளவுமில்லை (சங்.130:1).

ஓ என் தேவனாகிய சர்வேசுரா! சகல படைப்புகளின் சிருஷ்டிகரே! சர்வ வல்லபமுள்ளவரே! நீதியும் தயாள முள்ளவரே! தேவரீர் மாத்திரம் இரக்கமுள்ளவர்; தேவரீர் மாத்திரம் நீதியுள்ளவர்; தேவரீர் மாத்திரமே நித்திய வல்லப முடைத்தானவர் (2மக்.1:24). ஆமென் சேசு.

மனவல்லய ஜெபம்: இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள சேசுவே, என் இருதயம் தேவரீருடைய திரு இருதயத் திற்கு ஒத்ததாகப் பண்ணியருளும் 

(300 நாள் பலன், அர்ச். பத்தாம் பத்திநாதர், 1905).