இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - குயில் பயிற்றல்

எழுசீர்க் கழி நெடிலாகிரிய விருத்தம்.

இறையெலாம் வணங்கி விடு திறை தொகுத்த
இருநிதி நவமணிக் கோடி
தறையெலாம் பரந்து கம்பளம் விரித்த
தகைமைசெய் கோயிலெண் ணூரன்
குறையெலாஞ் சொல்லின் வேண்டிய வரங்கள்
கொடுப்பனென் றவன்புகழ் பாடிக்
குறைவிலாச் சோலை பயிலிளங் குயில்காள்!
கூவுமின் பாவிசைப் படியே,

இதுவுமது

பாடவு மறியேன் பணியவு மறியேன்
பதமலர் தொழுமடி யவரைக்
கூடவு மறியேன் நகர்வலம் வந்து
கோயில் செய் சேவையு மறியேன்
நாடவு மறியேன் இவையெலாஞ் சொல்லி
நம்பனெண் ணூரில்வா ழாசைக்
கோடலர் தோறுங் குலவுமாங் குயில்காள்!
கூவுமின் அவன் வர வென்றே,

நேரிசை வெண்பா.

என் கருத்தி லொன்று மிலேன் எண்ணூ ரிருப்பவனே!
உன் கருத்துப் போல வுதவுவாய்-இன் சுரத்துச்
சேயறியுங் கொல்லோ சிறப்பத் தனையீன்ற
தாயறியும் நல்ல தயை.

கலிவிருத்தம்

தண்ணிய தருவளர் தனிப்பு றாவுயிர்
எண்ணிய வன சர னிறக்கப் பாம்பினாற்
பண்ணிய வற்புதப் பயனெண் ணானை
உண்ணினை வார்க்கினி யுறுத்தி சேருமே.