புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தபசுக்கால சிந்தனை: நம்முடைய தபசுகாலம்

"தபசுகால கடன்களை அனுசரிப்பது, யுத்த சபையின் அங்கத்தினரின் கடமையாயிருக்கிறது; கிறீஸ்துநாதரின் விரோதிகளினின்றும், நம்மைப் பிரித்துக் காண்பிக்கிறது; கடவுளின் கோபாக்கினையைத் தடுப்பதற்கு ஏதுவாயிருக்கிறது; கடவுளின் உதவியை நமக்குத் தந்து, பசாசை எதிர்த்துப் போராடச் செய்கிறது. தபசு காலக் கடன்களை அனுசரிப்பதில் அசமந்தமா யிருந்தால் கடவுளுடைய மகத்துவத்தைப் பாதிக்கிறோம்; கத்தோலிக்க வேதத்தை அவமதிக்கிறோம்; கிறீஸ்தவர்களின் இரட்சணியத்திற்கு இடையூறு விளைவிக்கிறோம். தேசங்கள் கேடடைவதற்கு இது காரணமாகிறது. சமுதாய அபிவிருத்திக்கும், தனிப்பட்ட மனிதரின் மேம் பாட்டிற்கும் தீங்கு வருவிக்கிறது'' என்று 12-ம் பத்திநாதர் பாப்பரசர் சொல்லியிருக்கிறார்.

தபசு காலத்தில் ஒருசந்தி, சுத்தபோசனம் மற்றுமுள்ள பரித்தியாக முயற்சிகள் வெறும் வெளி ஆசாரமாயிருந்தால் அதில் யாதொரு பலனுமில்லை. அவைகள் நமது உள்ளத்தில் எழும் மனஸ்தாபத்தின் வெளி அடையாளமா யிருக்க வேண்டும். தபசு காலத்தின் முக்கிய நோக்கம் பாவத்திற்காக மனஸ்தாபப்படுத லாகும்; நாம் ஒருசந்தி பிடிப்பதில் வெகு கவன மாகவும், சுத்தபோசன விஷயத்தில் வெகு கண்டிப் பாகவும் இருந்து விட்டால், உத்தம கிறீஸ் தவர்களாகி விட மாட்டோம். அது போலவே, சுத்தபோசன ஒருசந்திக் கடனை அனுசரிக்க முடியாதவர்களை போலிக் கத்தோலிக்கர் என்று நினைக்கக் கூடாது.


உண்மையான மனஸ்தாபம்!

நம்மிடம் இருக்க வேண்டியது உண்மை யான மனஸ்தாபப்படும் இருதயம். அதிலிருந்து தபசுகால ஒறுத்தல் முயற்சிகள் இயல்பாகவே வெளிக்கிளம்பும். மனஸ்தாபமுள்ள இருதயம் என்றால் என்ன? நமது தவறுதல்களை நினைத்து எப்போதும் கவலை கொண்டு அழுது கொண் டிருக்க வேண்டுமா? நம்மைச் சுற்றியிருக்கும் சகலரும் பாவிகள் என்று சொல்லி வருத்தப்பட வேண்டுமா? மனஸ்தாபப்படுகிறவன் பூங்கா வனத்தில் நமது ஆண்டவருடைய உணர்ச்சி களை தன் இருதயத்தில் எழுப்புகிறான். மனிதர் களின் பாவங்களைப் பற்றி, என் ஆத்துமமானது மரணம் மட்டும் துக்கப்படுகிறது என்று சொன்ன நமதாண்டவரின் மனநிலை நம் சொந்தப் பாவங் களைப் பற்றி நம்மிடம் இருப்பதுதான் உத்தம மனஸ்தாபத்தின் பண்பு. மனஸ்தாபப்படும் வழக்கமிருக்குமானால், இரத்த வியர்வை வேர்த்த சேசுவுடன் நமது பாவத்தின் தோஷத்தைக் கண்டுபிடிக்க சற்று சுலபமாயிருக்கும். நமக்குள் போராட்டம் மாம்சத்தோடும், இரத்தத்தோடும், துரைத்தனங்களோடும், வல்லமைகளோடும் இருக்கிறது. உலகிலே நமது ஜீவிய காலம் ஒரு நீண்ட போராட்ட காலமாயிருக்கிறது.

சமூதிதப் பிரயோஜனம் என்பது போல, சமூதிதத் தீங்கும் இருக்கிறது. நன்மையான காரியத்திற்கு ஒத்துழைப்பது போல், தின்மை யான விஷயங்களுக்கும் பலர் சேர்ந்து உழைக் கிறார்கள். உலகம் கெட்டுப் போனது; ஒவ் வொருவரும் தாறுமாறாய் நடக்கிறார்களே என்று ஓலமிடுவதில் பிரயோஜனமில்லை. ஒவ்வொருவரும் தன்னிலேயே யுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொருவருடைய வெற்றியிலும் தான் கடைசி வெற்றியின் மகத்துவம் விளங்கும். ஆகையால் நாம் பாவத்தை விலக்க வேண்டும். நாம் உத்தமராயிருக்க வேண்டும்; நாம் அர்ச்சிஷ்டதனத்தில் வளர வேண்டும். தின்மை முன்னேற்றமடையாமல் தடுக்க நாம் எவ்வ ளவோ சாதிக்கக் கூடும். உத்தம மனஸ்தாபம் பாவத்திற்குப் பெருந்தடையாயிருக்கிறது. மனஸ்தாபம் எவ்வளவுக்கு ஆழமாகவும், உறுதி யாகவும் இருக்கிறதோ, அவ்வளவுக்கு நாம் தின்மையை ஜெயிக்கலாம். பாவமேயில்லாத கிறீஸ்துநாதருடைய ஆத்துமம் மரணமட்டும் துயரமாயிருந்ததினால்தான் உலக பாவம் அனைத்தின் மேலும் அவரது வெற்றி நிச்சய மாய் இருந்தது; இருந்த போதிலும் அவர் தன் பிதாவின் கரங்களில் தன் ஆத்துமத்தை ஒப் படைக்கும் வரை நரகக் கணங்கள் சும்மா யிருக்கவில்லை.


சேசு மரியாயின் துயரத்தில் பங்கு!

நாமும் இரட்சகரின் துயரத்தை நமது இருதயத்தில் கொண்டிருக்க வேண்டும்; பாவத் தின் மட்டிலும், அதனால் விளையும் தீங்கின் பேரிலும் கவலை கொள்ள வேண்டும். பூமியில் பாவத்தின் ஆட்சியின் முதுகெலும்பை முறிக்க வேண்டும். மரணமட்டும் துயரப்பட்டாரே நமதாண்டவர்! அவருடைய துயரத்துடன் நமது அற்ப துயரத்தையும் ஒன்றிக்க வேண்டும்.

மரியாயின் இருதயத்தைக் குத்தித் திறந்த வாள் நம் இருதயத்தையும் ஊடுருவ வேண்டும். கிறீஸ்துநாதரின் துயரம் அவருக்கு இறுதியில் சிலுவையைக் கொடுத்தது. சிலுவையிலிருந்து இறக்கிய நைந்துபோன சரீரத்தை மடியில் வளர்த் திய மாதாவின் இருதயம் பொடிந்தது. நாம் நமதாண்டவருக்காகவும், மாதாவுக்காகவும் கொஞ்சமாகிலும் துயரப்படாதிருக்கலாமா? ஊழியன், எஜமானனை விட மேன்மையாய் நடத்தப்பட வேண்டுமா? தின்மையை ஒழிப் பதற்கு நாம் செய்யக் கூடியது ஒன்றுமில்லையா?


தீமைக்கு எதிர்ப்பு!

திருச்சபையானது தின்மையை எதிர்த்துப் போராடுகிறது. அதன் வெற்றி ஒவ்வொரு கிறீஸ்தவனின் கையிலும் இருக்கிறது. தபசு காலத்தில் திருச்சபை தன் மக்கள் சகலரையும் ஒன்றுதிரட்டி, எல்லோரும் ஏகோபித்த மனதினராய், தங்கள் முழு பலத்தையும் கொண்டு இந்த எதிரியைத் தாக்குகிறது. ஒவ்வொருவரிடமும் திருச்சபை எதிரியை இவ்வாறு வெற்றி கொண்டு அநேக பாவிகளை மீட்கிறது. இன்னும் எத்தனையோ பேர் தின்மையின் (பாவத்தின்) ஆக்கிரமிப்பில் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் விடுபட வேண்டும். இதற்கு சிரமமும், கடினமுமான வேலை செய்ய வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

இந்த வருட தபசு காலத்தை நாம் எப்படி அனுசரிக்கப் போகிறோம்? ஒருவேளை இதுவே நம்மில் சிலருக்கு உலகில் கடைசித் தபசு கால மாக இருக்கலாம்... ஆகையால் நித்தியத்திற்கும் கடவுளுக்கு நன்றி செலுத்தக் கூடிய விதமான நன்மையை இந்தக் கொஞ்ச நாளில் அடைந்து கொள்ள ஒவ்வொரு கிறீஸ்தவனும் முயற்சிக்க வேண்டும்.

தபசு காலத்தை மகிழ்வோடும், உள்ளம் நிறைவோடும் வரவேற்போமாக!

(இக்கட்டுரை 1942-ம் வருட மார்ச் மாத அர்ச். சவேரியாரின் ஞானதூதன் (தூத்துக்குடி மேற்றிராசனப் பத்திரிகை) இதழிலிருந்து எடுக்கப்பட்டது. ஆ-ர்.).