புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருவாசகம்

நெஞ்சோடு ஓதல் விருத்தம் 

தந்தை தாய் நிசமுமல்ல சனங்களு நிசமுமல்ல
மைந்தருநிசமுமல்ல மனையது நிசமுமல்ல
இந்த மெய்நிசமுமல்ல இல்லறநிசமுமல்ல
சுந்தரதேவதேவன் றுணையடி நிசம்பார் நெஞ்சே.

காண்பதுமழிந்துபோகும் காயமுமழிந்துபோகும்
ஊண்பொருளழிந்துபோகும் உலகமுமொழிந்துபோகும்
பூண்மணிதேவதேவன் பொற்பதமழியாதென்று
வீண்பொழுதினைப்போக்காமல் வீயறத் தவஞ்செய் நெஞ்சே.

மனமெனும் பேயினாலே மாயையாமிருளால் மூடிச்
சனமெனுமாசைபாசந் தலைமிசையேற்றிக்கொண்டு
கனமெனுஞ்சுமையைத் தாங்கிக் கவலைக்கொண்டுய்யவேண்டாம்
தனமெனுமாதிதேவன் றாள்பணிந்திருநீநெஞ்சே

வானவன்றிய காலன் வயதெலாங்கொடுபோகின்றான்
தானதையறிந்திடாமல் தரணியிலிருப்போமென்றே
ஊனமாமுடலை நம்பி உண்மை கெட்டலைந்தாய் நீமெய்ஞ்
ஞானமே பொருளாய் நிற்கும் நாதனை நம்புநெஞ்சே.

வஞ்சகநடை மரத்தில் வளர்வினைக் கொம்பிலேறிச்
சஞ்சலமனக்குரங்குதாவியே அலைய நீதான்
பஞ்சபாதகங்கள் செய்து பாம்பின் வாய்த்தேரையானாய்
தஞ்சமென்றுனதுதேவன் றாளடிபணிவாய்நெஞ்சே

நாடென்றுமக்களென்றும் நலந்திகழ்வாழ்வதென்றும்
வீடென்றுமனையாளென்றும் மிக்கதோர் மைந்தரென்றும்
மாடென்றுஞ்சம்பத்தென்றும் வாஞ்சை கொண்டலைந்தாயிந்த
கூடொன்று அழிந்தாற்கூடத் தொடருமோ கூறுநெஞ்சே.

இலவுகாத்திருந்தபட்சி யேங்கியே பறக்குமாப்போல்
உலகமே பொருளாய் நம்பி யொருபலனற்றாய் நீதான்
தலைமையாங்குருவைப் போற்றி தாளிணை வாசிகண்டால்
நிலமையாமோட்சமென்றும் நிலைத்திடுமுனக்கு நெஞ்சே.

ஆசையாம்பாசமாயை யறிவதை மயக்கியுன்னுள்
ஈசனைத்தேடொட்டாம லிழுக்குமவ்விருளை நீக்கி
நேசமாங்குறியைக் கொண்டு நெடுஞ்செபஞ் செய்து தேவ
வாசமுன்னுள்ளே கண்டு வான்பதிவாழ் நீ நெஞ்சே.

பொருள்தனைதேடிப்பாரில் புதைக்கின்ற புத்தி போல் மெய்
யருள்தனை நிதமுந் தேடி யம்பரனடிபணிந்து
இருள்தனையகற்றுஞ்சோதி எம்பிரானென்றே நீயும்
மருள்தனை மாற்றியேயுன் மனங்களித்துய்வாய்நெஞ்சே.