புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேவமாதா அம்மானை - தேவகன்னிகையின் திருமணம்

கற்பனைப்படி நடந்து கன்னிகைவாழுநாளில் 
தற்பரன் சித்தந்தன்னைத் தவத்தவரினுளத்திர்கூற 
நற்புகழ் செறிந்திலங்கும் நன்மைசேர்மரியாயிக்கு 
அற்பு தஞ்செய் தகாதை அன்புடனறைகுவாமே.

அம்மானை.

பூதலத்திலா றிரண்டு புத்திரரையீன்றெடுத்த 
ஏதமற்றமன்ன னியாக்கோபுடைமரபில் 

முன்னாள் நடந்தபடி மோசமறமேதினியில் 
மின்னாரெவரெனிலும் மெய்ப்பருவமானவுடன் 

காந்தனைத்தேடிக் கலியாணஞ்செய்திடுவார் 
போந்தமுறைப்படியே பொன்னவன் தேவலாயத்தில் 

சேவித்திருக்குஞ் சிரேட்ட குருவானவரும் 
பூவிற்றவிதாசன் பொன்மரபில்வந்துதித்த 

நித்தியகன்னிகைக்கு நீள் பருவம்வந்ததென்று 
பத்தியுடைய குருப் பாருலகிலேயறிந்து 

கன்னிக்கொருதலைவன் காவலாய்வேண்டுமென்று 
உன்னிமனத்தி லொருப்பட்டாரம்மானை 
கன்னிகைக்கு மணஞ்செய்யும்படி முன்பே குருவுக்குத் தேவ கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.

அந்தவினையறிந்து ஆனந்தக்கன்னிகையும் 
சிந்தைமிகக்கலங்கித் திகைக்கலுற்றாளம்மானை 

கற்பினுக்கோரற்ப கலக்கம்வராதெனையும் 
அற்புதமாய்க்காத்தருளும் ஆதிபரம்பொருளே 

என்றுமனம்வாடி ஏகபரனைத்து திக்க 
அன்றொருசம்மனசு அரியமரிமுன்றோன்றி 

தாயேயுனக்குவருந் தனம்முள்ளகாவலனும் 
நீயே மகிழ நிரை விரத்தனாயிருப்பான் 

உனைப்போலுலகை வெறுத் துண்மையுளனாயிருப்போன் 
தனை நீமணம்புரியச் சம்மதிப்பாயென்றுரைத்தான்

இந்தவுரை கேட்டிராசகுலக்கன்னிகையும் 
சந்தோஷமாகத் தயாபானைத்தான்று தித்தாள் 

சற்குருவுமெண்ணிக் தவமரிக்குமன்றல் செய்ய 
நற்றலைவனாரெனவே நாதன்றனைப்பணிந்து 

மன்றாடிக்கேட்க மறைமுதலும்வாய் திறந்து 
ஒன்றாகக்கூட்டு முனது சபையானதிலே 

எல்லாருஞ்செங்கரத்தி லேந்திவருங்கோலில் 
வல்லான்கரத்தில் வளங்குமொருகோல்துளிர்க்கும் 

கம்பு துளிர்பெருகக் கைப்பிடிக்குமாடவனே 
அம்புவியிற்கன்னிக் கருங்கணவனாகுமென்று 

ஆதியரைக்க அருங்குருவுந்தான் மகிழ்ந்து 
ஏதமணுகா விராசகுலக்கன்னியற்கு 

வேதமுறைப்படியே மெய்ம்மணத்தைத் தான் கூட்ட 
நீதமேயென்று நிருபித்துக்கொண்டதற்பின் 

இன்ன நாளென்று இவர்குலத்திலாட்களுக்கு 
உன்னியறிக்கை செய்து உற்றுவருவோர்களெல்லாம் 

கம்புகரத்தேந்திக் கனசபையில்வாருமென்று 
அம்புவிமீதி லறிக்கையிட்டாரம்மானை 

சிட்டகுருவுரைத்த திருவுரையைத் தப்பாமல் 
அட்டதிக்குஞ்சூழ அவரவரேகம்பேந்தி 

ஆடவரெல்லோரும் அருஞ்சபையில்வந்து புக்கார் 
நாடறியநீண்டதவ நல்விரத்தனாஞ்சூசை 

கம்பின்றிக்கைவெறிதாய்க் காணுஞ்சபையில்வாக் 
கொம்பிக்குதித்துக் குருவும் மிகச்சினந்து 

எல்லோரும்போலே எடுத்து வாகம்பெனவே 
நல்லோனுங்கம்பேந்தி நற்சபையில்வந்து நின்றார் 

தன்மச்சபையிற் றடியெவருமேந்திநிற்க 
நன்மைக்குடையகுரு நற்கரங்கள் தான்குவித்து 

சகலதயவுடைய தற்பரனைவேண்டுவராம் 
அகலவளவ றியா அற்புதங்கள் செய்தோனே 

பகலுமிரவும் படியளந்து நின்றோனே 
புகலும்புனிதரிடம் புக்கிருக்கும் புண்ணியனே 

மன்னன் தவிது குலம் வாழவந்தமாதவஞ்சேர் 
கன்னிவதுவை செய்யக் காலமிதுவாதலினால்

அன்று நீர்சொன்ன அறிக்கைப்படியாக 
ஒன்றியபேர்களெல்லாம் உயர் காத்திற்கம்புடனே 

வந்தாரிதோசபையில் மானமுள்ள கன்னியற்கு 
சந்தோஷமுள்ள தலைவனார் யாரெனவே 

சொல்லுமெனப்பணிந்து தோத்திரங்களே புரிய 
வல்லவிரத்தனெனும் மாதவத்தன் சூசே தன் 

செங்கரத்திற்கொண்ட சிறந்த தடியானது தான் 
அங்கேதளிர்த்து அலர்கள் மிகவீசப் 

பூணுந்தடியிற் புறாவொன் றுவந்திருக்கக் 
காணும்படியாகக் கண்டார்களெல்லோரும் 

எண்ணரிய காரணங்கண் டேத்திக்குருமகிழ்ந்தார் 
பெண்ணரசாங்கன்னியர்க்குப் பிரியமணவாளனென்று 

அன்னவன் சூசை தனை ஆதிவருத்தியதால் 
மன்னவன்றன் குலத்தோர் வாழ்த்தினார் மங்களங்கள் 

வானோருள மகிழ்ந்தார் மண்ணுலகத்தோர் புகழ்ந்தார் 
ஆனாலுமென்னா லறிக்கையிடக்கூடியதோ 

இருவபொருமாபிலேத்து தவிதின் குலத்தில் 
பெருகும்வ துவை செய்யப் பேராதிகட்டளையால் 

இன்பமுள்ள கன்னியற்கு ஈரேழ்வயது தன்னில் 
அன்புடைய சூசைமுனிக் கையாறு மூன்று தன்னில் 

ஞானக்கலியாணம் நன்மறையிலுள்ளபடி 
வானபரன் கோயில் முன்னே வந்தகுருவான வரும் 

இருவர்மனமுமொன்றாய் இருந்து கர்த்தனைப்புகழ்ந்து 
தருமமுடனுலகிற் சமாதானமாயிருக்க 

வாய்விட்டுப் பேசி வகுக்தேமண முடித்துப் 
போய்விட்டார் தங்கள் புகழ்பெரியமாளிகைக்கு 

நீரோசைபேரோசை நீண்டமுழவோசை 
பாரோசையங்கிருக்கும் பல்லோருங்கொண்டாட 

நித்தியகன்னியென்றும் நேர்ந்தபலன் குன்றாமல் 
சத்தியவாசகந்தான் சாற்றியிருபேரும் 

ஒக்கப்பிறந்த ஒருபிறப்பு தான் போலத் 
தக்கோரிரு பேருந் தாரணியிற்றானிருந்தார்

முன்பிறப்புப்பின் பிறப்பு மூத்தோரிளையோர் போல் 
நன்பிறப்பு யோகிகளாய் நாதன்றனை வணங்கி 

துய்யநசரையெனுந் தொன்மைப் பெரும்பதியில் 
வையமறிய மகிழ்ந்திருந்தாரம்மானை.