இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தாழ்ச்சியும், வீரத்துவமும்!

கிறீஸ்துநாதர்: என் மகனே, என் வார்த்தைகள் இரு பக்கமும் கூர்மையுள்ளவை. என் அன்பர்கள் தேவைக்குத் தக்கவாறு அவைகள் வெட்டவும் குணப்படுத்தவும் வல்லபம் உள்ளவை.

உனக்கு மெய்யான தாழ்ச்சியும், உண்மையான சாந்தமும் இருக்குமானால், உன்னைப் போல தைரிய முள்ளவனையும், சுறுசுறுப்புள்ளவனையும் காண்பது அரிதாகி விடும். ஏனெனில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ளவன் என் வல்லமையிலும், சுறுசுறுப்பிலும் பங்கடைகிறான்.

தாழ்ச்சியும் கோழைத்தனமும் ஒரே சமயத்தில் ஒரே மனிதனிடத்தில் இருக்க முடியாது. தாழ்ச்சியுள்ள மனிதன் சோம்பல் உள்ளவனாயிருக்க முடியாது. தாழ்ச்சி உண்மை யுள்ளது; நேர்மையுள்ளது; விமரிசையுள்ளது; ஆனால் தாழ்ச்சி என்பது பயம் அல்ல; கோழைத்தனம் அல்ல; சோம்பல் அல்ல; தாழ்ச்சியே உலகத்திற்கு வீரர்களைக் கொடுத்தது. தாழ்ச்சியுள்ளவனை உலகம் முதலாய்ப் புகழா திருக்க முடியாது. தாழ்ச்சியுள்ளவன் தன் சரீரத்தோடும், உலகத்தோடும் பசாசோடும் தளராது போர் செய்து கொண்டே இருப்பான். தாழ்ச்சியுள்ளவன் சர்வேசுரனை மாத்திரமே நம்பியிருப்பதால், அவன் பலவீனமடைய மாட்டான், சோம்பலடைய மாட்டான், எதற்கும் பயப்பட மாட்டான். ஏனெனில் அவனிடமிருக்கும் அந்த சர்வேசுர னுடைய வார்த்தை உயிருள்ளதாயும், வீரமுள்ளதாயும் இருக்கிறது. இரு பக்கமும் கூர்மையுள்ள எந்த வாளையும் விட அதிகமாய் ஊடுருவி, அவனுடைய நினைவுகளுக்கும், ஆலோசனைத் திட்டங்களுக்கும் ஒளியைக் கொடுக்கின்றது (எபிரேயர். 4:12).

உன் பாவங்கள் உன் கண்முன்னே எப்பொழுதும் நிற்குமேயானால், நீ எவ்விதப் பரித்தியாகம் செய்யவும் பின்வாங்க மாட்டாய்.

நான் உனக்காகப் பட்ட பாடுகள் உன் ஞாபகத்தை விட்டு அகலாது இருக்குமானால், எப்பொழுதும் உன் ஆசாபாசங்களை எதிர்த்து நீ போராடுவாய்.

சில சமயங்களில் என் மகிமைக்காக, உன் உற்றார், பெற்றார், சிநேகிதர்களின் நன்மைக்காக, இது அது செய்ய வேண்டுமென விரும்புகிறாய்; ஆயினும் ஏதாவது குறை வந்து விடுமோ எனப் பயந்து அதை விட்டு விடுகிறாய். நன்மை செய்ய முயற்சிக்கும்பொழுதே நீ குற்றத்தில் விழுவாய் என்றால், சோம்பலுக்கு இடம் கொடுத்த நேரம் நீ பாவத்தில் விழாதிருக்க முடியுமா? ஏன் தயங்குகிறாய்? ஏன் பயப்படுகிறாய்? பிறர் ஏதாவது நினைத்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறாயா? நீ செய்யும் கைங்கரியத்தை மற்றவர்களுக்காகச் செய்வாய் என்றால், அவர்களது கருத்து வேறுபாட்டின்படி நீ நடந்துகொள்ள வேண்டியதுதான். ஆனால் நீ எனக்கு ஊழியம் செய்ய விரும்புவாய் என்றால், மற்றவர்களைப் பற்றி ஏன் நினைக்கிறாய்?

மகனே! பேருக்குக் கிறீஸ்துவனாக, அல்லது வெளிக்கு மாத்திரம் எதார்த்தமுள்ளவனாக இருப்பாய் என்றால், உனக்கு வரும் லாபம் என்ன? அநேகர் தங்கள் புண்ணியத் தையும், கண்ணியத்தையும் பற்றிப் பெருமை பாராட்டு வார்கள். ஆனால் தீர்வை நாளில் அவர்களது பெருமையே அவர்களுக்கு அவமானத்தை உண்டுபண்ணும். மகனே! புண்ணியத்தின் வெளித் தோற்றத்தில் எத்தனை அக்கிரமங்களும், அநீதங்களும் மறைந்திருக்கின்றன என்பதை நீ அறிய மாட்டாய். எக்காலத்திலும் வெளிவேடத்திற்கு ஆசைப்படாதே. புண்ணியத் தோற்றத்தையும் கள்ள ஞானத்தையும் நான் வெறுக்கிறேன். கபடத்தையும் வஞ்சகத்தையும் நான் கொஞ்சமும் சகித்துக்கொள்ள மாட்டேன்.

மகனே! உனக்கு இருக்கும் உலக நன்மைகளும், ஞான நன்மைகளும் நான் கொடுத்தவையல்லவா? அவைகள் உனக்குச் சொந்தம் என்பதுபோல் எண்ணி நீ நடப்பது நியாயமாகுமா? மெய்யாகவே உனக்குச் சொந்தமானது உன் பாவங்கள் மட்டும்தான்.

உனக்கு இரவலாய் நான் கொடுத்த நன்மைகளைச் சரியான வழியில் உபயோகிக்க உனக்குத் தெரியாது. ஆதலால் சிறுவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் சிறு பொருட்களைத் தம் பெற்றோரிடம் கொடுத்து வைத் திருக்கச் சொல்வது போல, நீயும் உன் பிதாவாகிய என்னிடம் உன்னையும் உனக்குள்ள அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும். அவைகள் என் கண்காணிப்பில் இருக்கும் வரை நீ அவைகளை இழக்க மாட்டாய். அவைகளை நான் உபயோகிக்கும்படி விட்டுவிடுவாய் என்றால், உன் நல்ல முயற்சிகளில் நான் பங்கடைவேன் என்றால், உன் செயல்கள் என் வல்லபத்திலும், நன்மைத்தனத்திலும் பங்கடையும் என்பதில் சந்தேகமில்லை (சங்.22:1).

ஆத்துமம்: “கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள், கண்டடைவீர்கள், தட்டுங்கள், திறக்கப்படும்'' என்று திருவாய்மலர்ந்த தெய்வீக சேசுவே, இதோ, உமது பாதார விந்தங்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியேனைக் கிருபாகடாட்சம் கொண்டுபோகும். உமது திரு இருதயத்தால் ஏவவும் ஆராதனைக்குரிய உமது நாவால் உச்சரிக்கவும் பட்ட இந்த வாக்குத்தத்தங்களின் மேல், உயிருள்ள விசுவாசமும் நம்பிக்கையும் வைத்து இந்த (விண்ணப்பத்தைக் கூறவும்) சகாயத்தைக் கேட்க தேவரீரிடம் ஓடி வருகிறேன்.

சகல நன்மை வரங்களுக்கும் அளவில்லாத ஊறுணி யாகிய இருதயமுடைத்தான மதுர சேசுவே, நான் தேவரீரைக் கேட்காவிடில், வேறு யாரிடம் போய்க் கேட் பேன்? தேவன் எங்களிடம் வரவும், நாங்கள் தேவனிடம் செல்லவும் வழியாயிருக்கிற இந்தத் திரு இருதயத்தின் கதவைத் தட்டாமல், வேறு எதைத் தட்டுவேன்?

சேசுவின் திரு இருதயமே, நான் உம்மையே அண்டி வருகிறேன். நீரே என் துன்பங்களில் ஆறுதல்; ஆபத்தில் அடைக்கலம்; சோதனையில் தைரியம்; சந்தேக இருளில் பிரகாசம்.

சுவாமி! நான் கேட்பதைக் கொடுக்க ஒரு புதுமை அவசியமாயினும், கொடுத்தருள்வீரென்று உறுதியாக நம்பு கிறேன். தேவரீர் மட்டும் சித்தம் வைத்தால் என் மன்றாட்டு கேட்கப்படும். சேசுவே! உமது சகாயங்களைப் பெற, நான் தகுதியுள்ளவன் அல்ல என்பதை அறிவேன். ஆயினும் அதன் நிமித்தம் நான் மனந்தளர்ந்து போகப் போவதில்லை. ஏனெனில் தேவரீர் இரக்கத்தின் தேவன். மனஸ்தாபமும் தாழ்ச்சியுமுள்ள இருதயத்தை நீர் புறக்கணிக்க மாட்டீரே. என் மீது கருணைக் கண்ணோக்கியருளும். அப்போது எ ன் பலவீனத்தையும் கஷ்டங்களையும் பார்த்து தேவரீருடைய தயாளமுள்ள இருதயம் நான் கேட்கும் மன்றாட்டைத் தந்தருளும் என்பது நிச்சயம்.

ஆனால் திரு இருதயமே! என் மன்றாட்டின் மட்டில் உமது சித்தம் எப்படியாயினும் நான் தேவரீரை ஆராதிக் கவும், நேசிக்கவும், ஸ்துதிக்கவும், ஊழியம் செய்யவும் பின்வாங்க மாட்டேன். உமது ஆராதனைக்குரிய திரு இருதயத்தின் ஏற்பாடு எதுவென்றாலும், அது என்னாலும் மற்றும் உமது சகல சிருஷ்டிகளாலும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவே விரும்புகிறேன். உமது சித்தத்திற்கு எந்நாளும் அமைந்து நடப்பேன் என்னும் இந்த என் வாக்குறுதியைத் தயவாய் ஏற்றுக்கொள்ளும். ஆமென் சேசு.

மனவல்லய ஜெபம்: மகா மதுரம் பொருந்திய சேசுவே! என்னை நடுத்தீர்க்கிறவராயிராமல், என் இரட்சகராயிரும் 

(50 நாள் பலன், 9ம் பத்திநாதர்).