தேவமாதாவின் தெய்வீகத் தாய்மைக்கு நிந்தைப் பரிகாரம்!

பரிசுத்த கன்னிமாமரியின் எல்லா மகிமைகளுக்கும், வரப்பிரசாத சலுகைகளுக்கும் முதல் முக்கிய அடிப்படையும், காரணமுமாயிருப்பது அவர்களின் தெய்வீகத் தாய்மையே. "மாமரியின் ஆத்துமமும், அவர்களது ஜீவியமும் பெற்றுக்கொண்ட எல்லா அசாதாரண சலுகைகளும், அவர்கள் சர்வேசுரனுடைய தாய்' என்ற உன்னத அழைத்தலினின்றும், பரிசுத்த பரம இரகசிய ஊற்றினின்றும் புறப்பட்டன" என்று பாப்பரசர் 12-ம் பத்திநாதர் கூறுகிறார் ("Fulgens Corora" சுற்றுமடல்). 

திருச்சபையின் பிரகடனம்

நெஸ்டோரியப் பதிதத்திற்கு எதிராக, கி.பி. 431-ல் கூடிய எபேசுஸ் பொதுச் சங்கம், "சர்வேசுரனுடைய ஏக சுதனும், மெய்யான சர்வேசுரனும், மெய்யான மனிதனும், பகுத்தறி வுள்ள ஓர் ஆன்மாவையும், சரீரத்தையும் கொண்டவரும், பிதாவின் தெய்வீகத்தில் யுகங்களுக்கு முன்னதாகவே ஜெனிப்பிக்கப் பட்டவருமான நம் ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துநாதர், இந்தக் கடைசி நாட்களில் நமக்காகவும், நம் இரட்சணியத்திற்காகவும், தமது மனுஷீகத்தின்படி, கன்னிகையாகிய மரியம்மாளிடமிருந்து பிறந்தார். இவரில் இரு சுபாவங்களின் ஐக்கியம் நிகழ்ந்ததால், இவர் ஒரே சமயத்தில் தமது தெய்வீகத்தில் பிதாவோடு ஒரே பொருளானவராகவும் தமது மனுஷீகத்தில் நம்மோடு ஒரே பொருளானவராகவும் இருக்கிறார். எனவே, குழப்பத்திற்கு இடமேயில்லாத இந்த ஐக்கியத்தைப் பற்றிய அறிவின் அடிப்படையில், மகா பரிசுத்த கன்னிகையைக் கடவுளின் தாயார் என்று நாம் அறிக்கையிடு கிறோம், ஏனெனில் வார்த்தையாகிய தேவன் மாம்சமாகி, மனிதனானார், தமது உற்பவத்திலிருந்தே அவர் மரியாயோடு தம்மை ஒன்றாக இணைத்துக் கொண்டார்'' என்று பிரகடனம் செய்தது (The Council of Ephesus, Formulaof Union).

"பரிசுத்த நித்திய கன்னிகையான மாசற்ற மாமரி, நிஜமாகவும், உண்மையாகவும், கடவுளின் தாயாக இருந்தார்கள், ஏனெனில் கால நிறைவில், அவர்கள் (ஆணின்) வித்தின்றி, இஸ்பிரீத்து சாந்துவானவரால் காலங்களுக்கு முன்பே பிதாவாகிய சர்வேசுரனிடமிருந்து பிறந்தவராகிய வார்த்தையாகிய தேவனைத் தன் மாசற்ற திருவுதரத்தில் கருத்தரித்து, தன் கன்னிமையின் மகிமை குன்றாமலே அவரை ஈன்றெடுத்தார்கள் என்றும், அவர் தமது பிறப்பிற்குப் பிறகு அவர்களுடைய கன்னிமையைப் பழுதின்றிப் பாதுகாத்தார் என்றும் பரிசுத்த பிதாக்களோடு ஏற்றுக்கொள்ளாதவன் எவனாயினும், அவன் சபிக்கப்படுவானாக" என்று லாத்தரன் பொதுச்சங்கம் கூறுகிறது (பாப்பரசர் அர்ச். முதலாம் மார்ட்டின், கி.பி.649).