அமல உற்பவத்திற்கு நிந்தைப் பரிகாரம் அவசியம்!

உண்மை இப்படியிருக்க, சாத்தானின் தலையை நசுக்குபவர்களாகவும், சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவாகவும் இருக்க வேண்டிய மகா பரிசுத்த கன்னிகை ஜென்மப் பாவத்தினால் ஒரே ஒரு வினாடி முதலாய் பசாசுக்கு அடிமையாக இருந்தார்கள் என்று சொல்லத் துணியும் எவனும்: 

1. திவ்ய கன்னிகையை விட அதிகமாக, சர்வேசுரனையே அவமதிக்கிறான். உன்னத சர்வேசுரன் பசாசின் பரம எதிரியாகத் தாம் முன்குறித்துள்ள உத்தம கன்னிகையை அவனுடைய அடிமைத் தனத்தில் ஒரு கணமேனும் விட்டு வைத்திருக்க முடியும் என்று சொல்லத் துணிபவன் அவரது அளவற்ற மகிமைக்குப் பெரும் களங்கத்தை விளைவிக்கிறான்; அவரது வல்லமையை மறுதலிக் கிறான். 

2. தேவ திருச்சுதனானவரின் மகா பரிசுத்த திருச்சரீரத்தின் மாசு மறுவற்ற தன்மையையும், அந்த சரீர மாசற்றதனம் நம் இரட்சணியத்திற்கு இன்றியமையாதது என்பதையும் மறுதலிக்கிறான். 

3. இதன் காரணமாக, தமத்திரித்துவ சர்வேசுரனையும், அவருடைய திருக்குமாரத்தியும், திருத் தாயாரும், பத்தினியுமான அமல உற்பவப் பரிசுத்ததனத்தையும் பரிகசித்து, கடவுளின் கடுங் கோபத்திற்கு ஆளாகிறான்.

இத்தகைய எண்ணற்ற கொடிய பாவிகள் நரகத்திற்குச் செல்வதையும், இன்னும் அநேகர் நரகப் பாதையில் ஓடிக் கொண்டிருப்பதையும் கண்டு தேவமாதாவின் மாசற்ற திரு இருதயம் ஒரு இடுக்கியால் நசுக்கப்படுவது போல வேதனைப்படுவதாக சகோதரி லூசியா கூறுகிறாள். இந்த ஆன்மாக்கள் மனந்திரும்பி, மாமரியைத் தங்கள் அன்னையாக ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய பரிந்துரையின் பாதுகாவலுக்குள் வரும்போது மட்டுமே நம் திவ்ய அன்னையின் மனம் ஆறுதல் அடையும். இந்தக் கருத்துக்காக முதல் சனி பக்தியை அனுசரிக்க மாதாவின் அன்பிற்குரிய ஒவ்வொரு பிள்ளையும், அப்போஸ்தலனும் கடமைப்பட்டவனாக இருக்கிறான்.

மேலும், மாதாவின் அமலோற்பவத்தைக் கொண்டாடும் நாம், அந்தப் பரிசுத்ததனத்திற்கு எதிரான எதையும் வெறுத்து, பாவத்தையும், பாவ சந்தர்ப்பங்களையும் விலக்கி, மாதாவின் பிள்ளைகள் என்ற உன்னத மகிமைக்குத் தகுதியுள்ளவர்களாக ஆக வேண்டும்;

மாதாவின் அமலோற்பவத்தைப் பழிக்கிறவர்களுக்காக நாம் ஜெபித்து, பரித்தியாகங்கள் செய்து, அந்த நிந்தைக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்;

மரியாயின் அமலோற்பவத்தைத் துதிக்கிற மாதாவின் மந்திரமாலையை சனிக்கிழமை தோறும் சொல்லி வர வேண்டும். இது நாம் பரிசுத்ததனத்தில் வளர்வதற்கு மிகவும் உதவியாயிருக்கும்.


மாதாவின் மீது உண்மையான பக்தியைத் தெரிந்தெடுத்தல் 

மாதாவின் மீது உண்மை பக்திகளில் முதலாவது, நம் கிறீஸ்தவக் கடமைகளை நிறைவேற்றுவதிலும், சாவான பாவத்தை விலக்குவதிலும், அச்சத்தை விட அதிகமாய் அன்போடு கடவுளுக்காக செயல்படுவதிலும் இடைக்கிடையே மாதாவிடம் ஜெபிப்பதிலும், மாதாவைக் கடவுளின் தாய் என்று மதிப்பதிலும் அடங்கியுள்ளது. இவ்வளவும் இருந்தாலும் எந்த தனி பக்தியும் மாதா மீது கொள்ளப்படாதிருக்கும் நிலை இது.

2. இரண்டாவது, குறிப்பான முயற்சிகளைக் கொண்ட பக்தி. இது அதிக உத்தமமான மதிப்புணர்வும் அன்பும், நம்பிக்கையும், வணக்கமும் மாதா மீது கொள்வதில் அடங்கியுள்ளது. ஜெபமாலை, உத்தரியம் ஆகிய சபைகளில் சேரவும், ஜெபமாலை சொல்லவும், மாதாவின் உருவங்களுக்கும், மாதாவின் பீடங்களுக்கும் மரியாதை செலுத்தவும், மாதாவின் புகழ்ச்சிகளை வெளியிடவும் நம்மை மாதாவின் பக்த சபைகளில் சேரவும் இது செய்கிறது.

3. மூன்றாவது, உத்தம பக்தி: அன்பின் புனித அடிமைத்தனம். வெகு சிலரால் அறியப்பட்டதும், வெகு சிலரால் கடைப்பிடிக்கப்படுவதுமான பக்தி இது. தன்னை முழுவதுமாகவும், ஓர் அடிமையாகவும் மாதாவுக்கும் மாதா வழியாக சேசுவுக்கும் கொடுத்துவிடுவதில் இது அடங்கியுள்ளது.