இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - பதிகம் 2

நாவிலுறு கவிகொண்டு வீரமா முனி கண்டு 

நற்றமிழ் புனைந்து பாட 

நரகிலுறு மலகையொடு பகையான மாந் தருளும் 

நாணித் தளர்ந்து வாட,

கோவிலுறு மடியவர்கள் குறைகண்டு தீர்த்தனை; 

கொடியனென் குறைக ளெல்லாம் 

கூறவும் கேளா திருப்பதுவும் நீதியோ?

குளிர்காவி லுற்ற கிளிதான் 

பூவிலுறும் உன்னாம மோதப் புரிந்தனை;

பொல்லாத கழுக கன்றே 

போகிடச் செய்தனை; மா பாவி யெனை யுமிப் 

புவியில்வந் தாளல் அரிதோ! 

காவிலுறு குயில் பாட மயிலாட முழவுபோல்

காவிரியின் நீர் ஒலிக்கக் 

களிகொண்டு மிக்கபே ரளிகொண்டு நிலைகொண்டு 

காவலூர் வாழும் அனையே!