அமல உற்பவத்திற்கு எதிரான நிந்தைக்குப் பரிகாரம்

அமல உற்பவம் : திருச்சபையின் பிரகடனம்

1854-ல் பாப்பரசர் 9-ம் பத்திநாதர் மாதாவின் அமல உற்பவத்தை விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்தார்: “திவ்ய கன்னிகை, கடவுளின் ஒரு விசேஷ வரப்பிரசாதத்தாலும், சலுகையாலும், தம் உற்பவத்தின் முதல் கணம் முதலே ஜென்மப் பாவத்தின் எல்லாக் கறைகளிலிருந்தும் காப்பாற்றப்பட்டார்கள் என்பது சர்வேசுரனால் அறிவிக்கப் பட்ட சாத்தியம் என்றும், ஆகவே, அது எல்லா விசுவாசிகளாலும் உறுதியாகவும் நிரந்தரமாகவும் விசுவசிக்கப்பட வேண்டுமென்றும் நம் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவினுடையவும், பரிசுத்த அப்போஸ்தலர்களான இராயப்பர் சின்னப்பருடையவும், நம்முடையவும் அதிகாரத்தைக் கொண்டு அறிவித்து வரையறுத்து உறுதிப்படுத்துகிறோம்'' ("Ineffabilis Deus" ஆணைமடல், 8.9.1954).

ஆகவே மாதாவின் அமல உற்பவம் விசுவாச சத்தியமாதலால் அதை மறுதலிப்பவன் முழு கத்தோலிக்க விசுவாசத்தையும் மறுதலித்தவனாகவும், கடவுளின் எதிரியாகவும் ஆகிறான். 


வேதாகமச் சான்றுகள் : பழைய ஏற்பாடு

இவற்றில் முதன்மையானது, "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்" (ஆதி. 3:15) என்ற கடவுளின் ஆதி வாக்குத்தத்தம் ஆகும். மேலும் :

-- மனிதர்கள் அனைவரும் அழிந்துபோனாலும், கடவுளின் கட்டளையால் கட்டப்பட்டு, முற்றிலும் யாதொரு பழுதுமின்றி, அந்த உலகப் பொதுவான அழிவினின்று பாதுகாக்கப்பட்ட நோவேயின் பேழையும்; (ஆதி. 7:15-19);

-- தீப்பற்றி எரியும் போதும், எவ்விதக் கேடுமின்றி, பச்சை இலை தழையுடன், அழகுறப் பூத்து நின்ற முட்செடியும் (யாத்.3:1-3);

-- சுற்றிலும் அடைக்கப்பட்டதும், யாராலும், எவ்வித ஏமாற்று தந்திரத்தாலும் சீர்குலைக்க முடியாததும், சிதைவுறாததும், பூட்டப்பட்டதுமான தோட்டமும் (உந். சங்.4:12);

-- அரசனின் சட்டத்தினின்று விலக்குப் பெற்றவளும், அரசனின் பத்தினியும், அரசியுமாக இருந்த எஸ்தர் அரசியும் (எஸ்தர் ஆகமம்);

-- ஒலோஃபெர்னஸின் தலையை வெட்டி தன் (யூத ) மக்களைக் காப்பாற்றிய யூதித்தும் (யூதித் ஆகமம்);

-- மன்னா (திவ்ய நற்கருணையின் அடையாளம் ) அடங்கிய பொற்பாத்திரத்தையும், தேவ கற்பனைப் பலகைகளையும், ஆரோனின் கோலையும் (குருத்துவத்தின் அடையாளம் ) தன்னுள் அடக்கியிருந்த வாக்குத்தத்தப் பேழையும் (எபி. 9:4);

-- நிலம் காய்ந்திருக்க, பனியால் நனைந்திருந்ததும், நிலம் பனியால் நனைந்திருக்க, முழுவதுமாகக் காய்ந்திருந்ததுமான செதயோனின் கம்பளியும் (நியா. 6:36-40), அமல உற்பவக் கன்னிகையின் பரலோக முன்னடையாளங்களாக இருந்தன.


புதிய ஏற்பாடு:

"பிரியதத்தத்தினாலே பூரணமானவளே, வாழ்க!" (லூக். 1:28) என்ற அதிதூதரின் உன்னத வாழ்த்தும், "ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே'' (லூக். 1:42). என்ற இஸ்பிரீத்து சாந்துவானவரின் வாழ்த்துமே மாமரியின் அமல உற்பவத்திற்குப் போதிய நிரூபணங்களாக இருக்கின்றன.