இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். சூசையப்பரின் வல்லமை!

திருச்சபையின் வேதசாஸ்திரியான அர்ச். தாமஸ் அக்வீனாஸ் மூன்று முக்கிய தேவ சம்பந்தமான கொள்கைகளை எடுத்துரைக்கிறார்.

1. கடவுள் ஒருவரைச் சிறப்பான அலுவலுக்குத் தேர்ந்தெடுக்கும் போது, அந்த நபரை வரப்பிரசாதங்களாலும், கொடைகளாலும் நிரப்புகிறார் (ST 111-98,5ad3).

2. இப்படி வரப்பிரசாதங்களால் அலங்கரிக்கப்பட்டவரை சுபாவத்துக்கு மேலான அர்ச்சியசிஷ்டதனத்தில் - பரிசுத்ததனத்தில் - உயர்த்தவும் செய்கிறார்.

3. இத்தகையோர் தேவ பக்தியாகிய புண்ணியத்தில் விளங்கி, கடவுளின் ஊழியத்துக்கும், கடவுளுடனான ஒன்றிப்பில் சிறக்கவும் செய்கிறார் (ST 11-11-82,3ad 2). 

இதன்படி பார்த்தால் திருக்குடும்பத்தின் தலைவராகத் திகழ்ந்து கடவுள் - மனிதரான கிறீஸ்து சேசுவையும், கன்னியர்க்கரசியான மாதாவையும் போஷித்துப் பாதுகாக்கும் அலுவலுக்காக அர்ச். சூசையப்பர் சர்வேசுரனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மகா உந்நதமான அலுவலுக்காக அவர் அளவற்ற வரப்பிரசாதக் கொடைகளால் நிரப்பப்பட்டார். மிகவும் மேலான பரிசுத்த தனத்திற்கும், கடவுளுடனான பக்தி ஒன்றிப்பிற்கும் உயர்த்தப்பட்டார்.

இத்தகைய மகிமை வரங்களால் நிரப்பப்பட்ட அர்ச். சூசையப்பர் சர்வேசுரனிடத்தில் மிகப் பெரிய பரிந்துரையின் வல்லமையைக் கொண்டுள்ளார். இதனாலேயேதான் நம் சத்தியத் திருச்சபையும், "சௌக்கியனாய் ஜீவிக்கவும், கடைசியாய் ஜீவிய காலத்தில் பாக்கியமான முடிவை அடையவும் விரும்புகிறவன் எவனோ, அவன் அர்ச். சூசையப்பரின் உதவியைக் கேட்கக்கடவான்" என்று நம்மை அழைக்கிறது.

நமது இவ்வுலக ஜிவியம் கடவுளுக்குப் பிரியமானதாகவும், ஆன்ம இரட்சணியம் அடைந்து தரத் தக்கதாகவும் இருக்க வேண்டுமானால் நாம் அர்ச். சூசையப்பரின் அடைக்கலத்தை நாடி, அவரது பாதுகாவலில் நம்மையும் நமது குடும்பங்களையும் ஒப்படைத்து, நம்மைப் பாதுகாக்கும் படியாக அவரிடம் மன்றாட வேண்டும்.

சேசுக்கிறீஸ்துவின் மீட்புத் திட்டத்தில் சிறப்பான தனியிடம் வகித்த அர்ச். சூசையப்பர், நமது ஆன்ம இரட்சணியத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவரது பரிந்துரையால் நம் பாவங்களுக்கு மன்னிப்பை அடைந்து, பரிகாரம் புரிந்து, நித்திய வாழ்வை - மீட்பை - அடைந்து கொள்வோமாக!

மரியாயே வாழ்க!