இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

முன்னுரை: சிநேகமே பரிகாரம் - பரிகாரமே சிநேகம்!

உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமத்தோடும், உன் முழு சத்துவத்தோடும், உன் முழு மனதோடும் சிநேகிப்பாயாக; உன்னைப் போல உன் பிறனையும் சிநேகிப்பாயாக என்று எழுதியிருக்கிறது (உபா.7:15; லேவி 19:18). 

சிநேகமே பரிகாரம். பகைக்குப் பகை எப்படித் தவறாகுமோ, அப்படியே அன்புக்கு, அன்பு என்பது சரியானதும், பரிகாரமுமாக ஆகின்றது. கடவுளை நேசிப்பதும், தன் அயலாரை நேசிப்பதும் ஒன்றே. 

ஆனால் இவைகள் எப்பொழுதெல்லாம் மீறப்படுகின்றதோ, அப்போதேல்லாம் அவற்றிற்கு ஈடாக நாம் பதில் சிநேகம் காண்பிக்கிற சிநேக முயற்சியே பரிகாரமாகும்.

அநேகர் பரிகாரம் தேவையா என்று கேலி பண்ணுகிறார்கள். கடவுளை மறந்து நவீன அஞ்ஞானச் சூழ்நிலையில் வாழும் நல்ல கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் கடவுளுடைய காரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே நம் ஏக நோக்கமாக இருக்க வேண்டும். 

நமதாண்டவரும் இதையே விரும்புகிறார். நம் கத்தோலிக்கத் திருச்சபையும் இதையே நமக்குப் போதிக்கின்றது. ஏன் எல்லா அர்ச்சியசிஷ்டவர்களுமே இந்த சிநேகத்திற்காகவே வாழ்ந்தார்கள். 

இப்படிப்பட்ட அன்பான கடவுளுக்கு மனிதர்களின் பாவங்களால் வேதனையும் துயரமும் ஏற்படும் பொழுது அவருடைய அன்பான பிள்ளைகள் பரிகார அன்பும் ஆறுதலும் கொடுக்க மிக்க கடமைப்பட்டிருக்கிறோம். 

அதை எப்படி என்று விளக்கமான ஒரே கட்டுரையாக மே - ஜூன் மாதா பரிகார மலர் வெளியிடப்படுகிறது.

இதை வாசிக்கும் மாதாவின் பிள்ளைகளாகிய நான் மற்றவர்களுக்கும் இதைப் பரப்ப முன்வர வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.