பரிகார பக்தியை அனுசரிக்கும் விதம்

1925 டிசம்பர் 10 அன்று போன்ற வேத்ராவில் நடந்த காட்சியில், மாதா தனது மாசற்ற இருதய பரிகார பக்தி எவ்வாறு அனுசரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி அறிவித்தார்கள் :

"இதை நீ அறிவி. தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமைகளில், எனக்கு நிந்தைப் பரிகாரம் செய்யும் கருத்துடன் :

(1) பாவசங்கீர்த்தனம் செய்து, 
(2) பரிகார நன்மை உட்கொண்டு, 
(3) 53 மணி ஜெபமாலை சொல்லி, 
(4) ஜெபமாலைத் தேவ இரகசியங்களைத் தியானித்தபடி கால்மணி நேரம் என்னுடன் செலவிடுபவர்களுக்கு அவர்களுடைய மரண சமயத்தில் ஈடேற்றத்திற்குத் தேவையான எல்லா வரப்பிரசாதங்களையும் தந்து உதவி செய்வேன் என்று நான் வாக்களிக்கிறேன்.''

மாதா லூஸியாவிடம் தொடர்ந்து, "பாவங்கள் எனக்கு எதிராக செய்யப்படுகின்றன. ஆதலால் எனக்குப் பரிகாரம் செய்யும்படி கேட்க வந்திருக்கிறேன்" என்று அறிவித்தார்கள். 

தேவ கற்பனைகளை மீறுவதே பாவம். பாவம் கடவுளுக்கு எதிரானது. ஆனால் மாதா தனக்கு எதிராகப் பாவம் கட்டிக்கொள்ளப்படுவதால் தனக்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டுமென்று கேட்கக் காரணம் என்ன?


இணைந்த இருதயங்கள்!

1. சேசு மரியாயின் இருதயங்கள் ஒரே தசையிழைகளால் உருவானவை போன்று, பிரிக்க முடியாதபடி இணைந்திருக் கின்றன. இதன் காரணமாக ஆண்டவருக்கு எதிராகச் செய்யப் படும் ஒவ்வொரு பாவமும் மரியாயின் மாசற்ற இருதயத்தையும் பாதிக்கிறது. மாதாவுக்கு வேதனை தரும் எந்தப் பாவமும் சேசுவின் திரு இருதயத்தை அளவற்ற வேதனையில் ஆழ்த்துகிறது. இதனா லேயே, "என் திரு இருதயத்திற்கு இணையாக, மரியாயின் மாசற்ற இருதயமும் வணங்கப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்று லூஸியாவிடம் ஆண்டவர் கூறினார் (லூஸியாவின் கடிதம், 1936, மே 18).

2. எல்லாப் பாவங்களுமே இவ்வாறு மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தையாக இருந் தாலும், சர்வேசுரன் அவர்களுக்கு மட்டுமே அளித்துள்ள விசேஷ வரப்பிரசாத சலுகைகளை மனிதர்கள் நிந்தித்து வெறுப்பதன் மூலமாக, அவர்கள் மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு எதிராகத் தனிப்பட்ட முறையிலும் பாவம் செய்கிறார்கள். இது மாதாவின் உத்தமமான மகனாகிய சேசுவை வாதிப்பதால்தான் மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டுமென்று அவர் கேட்கிறார் (1925, டிசம்பர் 10 போன்ற வேத்ரா காட்சி).

3. மாதாவைப் பற்றிய சத்தியங்களை மறுப்பவர்கள் உண்மையில் சேசுவின் தெய்வீகம் உட்பட அவரைப் பற்றிய எல்லா சத்தியங்களையுமே மறுதலிக்கத் துணிந்து விடுவதைத் திருச்சபையின் வரலாறு முழுவதிலும் நாம் காண்கிறோம். இதன் காரணமாக, மாதாவுக்கு நிந்தையாகச் செய்யப்படும் ஒவ்வொரு பாவமும் விசுவாச மறுதலிப்பின் பாவமாக ஆகி விடுகிறது. இவ்வாறு, இத்தகைய பாவிகள் மோட்ச பாக்கியத்திற்குத் தகுதியற்றவர்களாக ஆகிறார்கள். இந்த இழக்கப்படும் ஆன்மாக்கள் சேசு, மரியாயின் திரு இருதயங்களை அளவற்ற விதமாகக் காயப்படுத்து வதால், இவர்களை இரட்சிக்க சேசுவும் மாதாவும் பாவப் பரிகாரத்தைக் கேட்கிறார்கள் !