இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்தவர்களிடையே ஜெப, தவமின்மை

ஜெபித்தாலும் தியானமற்ற வெறும் வாய்ச் செபம் மட்டுமே அவர்களது ஜெபமாக இருக்கிறது!

கிறீஸ்தவர்கள் ஜெபிக்கும் வழக்கத்தைக் கைவிட்டு விட்டார்கள். 'நேரமில்லை" என்று சாக்குப்போக்கு சொல்லப்படுகிறது. இந்தப் பரபரப்பான உலகில், பல்வேறு அலுவல்களிடையே ஜெபிப்பது சாத்தியமே இல்லை என்கிறார்கள். ஆனால் நாள் முழுவதும் கிரிக்கெட் பார்க்கவும், நண்பர்களோடு அரட்டையடிக்கவும், அலைபேசியில் வீடியோ விளையாட்டுக்களில் மூழ்கிக் கிடக்கவும், பெண்களுக்கு சீரியல் பார்க்கவும், வீண் அரட்டை அடிக்கவும் மட்டும் நேர மிருக்கிறது. நேரமில்லை என்பது நொண்டிச்சாக்கு என்பது நமக்கே நன்றாகத் தெரியும்.

இரவு முழுவதும் சகல ஆபத்துக்களிலிருந்தும் நம்மைப் பாதுகாத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, புதிய நாளை அர்ச்சித்துத் தரும்படி அவரிடம் மன்றாடும் காலை ஜெபம், அந்த நாள் முழுவதும் நாம் செய்யும் எல்லாக் காரியங்களின் மீதும் தேவ ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது. மாலையில் அந்நாள் முழுவதும் நாம் செய்த நன்மை தீமைகளை நினைவுகூர்ந்து, நன்மைகளுக்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்தவும், தீமைகளுக்காக மனஸ்தாபப்பட்டு, அவரது மன்னிப்பை மன்றாடவும் மாலை ஜெபம் நமக்கு உதவுகிறது. ஒரு நாள் முழுவதிலும் கடவுள் நமக்குச் செய்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்தி, அடுத்துள்ள இரவில் சகல தீமை களிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்படி இரவு ஜெபத்தில் நாம் நம்மைக் கடவுளுடையவும், அவருடைய திருமாதாவுடையவும், நம் காவல் தூதருடையவும் அடைக்கலத்தில் வைக்கிறோம்.

இந்த ஜெபங்கள் இல்லாவிடில் என்ன நடக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! எத்தனை விபத்துக்கள், எத்தனை ஏமாற்றங்கள், எத்தனை இழப்புகள்! ஆனால் இந்த ஜெபங்கள் வழியாகக் கடவுளின் பாதுகாவலைத் தேடுபவன் மலைபோலத் தோன்றும் பல தீமைகளும் ஆபத்துக்களும் கூட இறுதியில் பனிபோல விலகுவதைக் கண்டு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறான். இது மேலோட்டமான வார்த்தையல்ல, இது முழுமையான உண்மை! கடவுளோடு ஜெபத்தில் இணைந்திருங்கள்! அப்போது தீமையானது எதற்கும் நீங்கள் அஞ்ச வேண்டியிருக்காது.