இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவம் ஆவதென்ன?

தேவ கற்பனைகளை மீறுகிறதே பாவம் என்று கத்தோலிக்க ஞான உபதேசம் கற்பிக்கிறது. 

நமது ஒவ்வொரு சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் செய்யப்படும் பாவங்கள் அனைத்தும் மனிதனுக்கு எதிராகச் செய்யப்படுபவையாகத் தோன்றினாலும், அவை உண்மையில் கடவுளுக்கு எதிராகவே செய்யப்படுகின்றன. ஏனெனில் அவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் கடவுளின் பத்துக் கற்பனைகளை மீறுபவையாகவே இருக்கின்றன. 

சர்வேசுரனே நம்மைப் படைத்தார்; அவரே ஞானஸ்நானத்தில் தம் திருச்சுதனின் திரு இரத்தத்தை நம்மீது பொழிந்து, ஜென்மப் பாவத்திலிருந்து நம்மைச் சுத்திகரித்துத் தம் பிள்ளைகளாக நம்மை ஏற்றுக் கொண்டார்; அவரே நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நம்மைப் பேணிப் பாதுகாக்கிறார்; நம் சரீரத்திற்குத் தேவையானவற்றைத் தந்து நம்மைப் பராமரிக்கிறார்; அதை விட மேலாக, நாம் மோட்ச இராச்சியத்திற்கு வருவதற்குத் தேவையான சகல வரப்பிரசாதங்களையும் நமக்குத் தந்து, நமக்காக ஏக்கத்தோடு காத்திருக்கிறார். 

நாம் இருப்பதும், இயங்குவதும், வாழ்வதும் அவரிலே தான். இவ்வாறு நம் ஒவ்வொரு சிந்தனையும், சொல்லும், செயலும் அவரோடு மட்டுமே முழுத் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. அவை ஒன்றில் அவருக்குப் பிரியமானவையாக இருக் கின்றன, அல்லது அவருக்கு எதிராக, அவரை நோகச் செய்பவையாக இருக்கின்றன.

"உமக்கு மாத்திரமே குற்றஞ் செய்தேன்; உம் சந்நதிக்கு முன்னே தீங்கு புரிந்தேன்" (சங். 50:5) என்ற தாவீதரசரின் வார்த்தைகள் இதை நிரூபிக்கின்றன. உண்மையில் உரியாஸுக்கு எதிராகவே அவர் குற்றஞ்செய்தார். அவனது மனைவியின் மீது ஆகாத இச்சை கொண்டு, "மோக பாவம் செய்யாதிருப்பாயாக, பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக" என்னும் தேவ கற்பனைகளை மீறினார்; போர் மும்முரமாக நடக்கும் இடத்தில் உரியாஸை நிறுத்தி, இவ்வாறு அவன் போரில் வெட்டுண்டு சாகவும் அவரே காரணமாயிருந்தார் (2 அரசர் 11). 

இவ்வாறு அவர் "கொலை செய்யாதிருப்பாயாக" என்னும் தேவ கற்பனையையும் மீறிப் பாவம் செய்தார். இவற்றையெல்லாம் உரியாஸுக்கு எதிராகவே அவர் செய்திருந்தாலும் கடவுளுக்கு எதிராக மட்டுமே தாம் குற்றம் செய்ததாக அவர் ஒப்புக்கொள்வதை நாம் பார்க்கிறோம். ஏனெனில் இவ்வுலகில் நிகழும் ஒவ்வொரு காரியமும் ஒன்றில் கடவுளை நேசிப்பதாக, அல்லது வெறுப்பதாக இருக்கிறது.

எனவே, ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்கு எதிராகவே பாவம் கட்டிக்கொள்கிறான் என்பதால், கடவுளை நோகச் செய்ததற்காகவும், அவருக்குரிய மகிமையைத் தன் பாவத்தால் அபகரித் துக்கொண்டதற்காகவும் அவன் தன் தவச் செயல்களால் பரிகாரம் செய்தே ஆக வேண்டியவனாக இருக்கிறான். 

கிறீஸ்தவன் தன் பாவத்திற்கு மனஸ்தாபப்பட்டு, பாவசங்கீர்த்தனத்தின் வழியாகப் பாவமன்னிப்புப் பெற்றிருந்தாலும், கடவுளைத் தன் பாவத்தால் நோகச் செய்ததற்கு அவன் பரிகாரம் செய்ய வேண்டியுள்ளது. தன் ஆத்துமத்தை இரட்சித்துக்கொள்ளவும், நம் இனிய ஆண்டவருக்காக ஆத்துமங்களை நரகத்திற்குச் செல்லாதபடி காப்பாற்றி ஆதாயப்படுத்திக் கொள்ளவும் பாவப் பரிகாரம் செய்வது இன்றியமையாததாக இருக்கிறது. 

பாவப் பரிகாரமின்றி, பாவத்தின் மீதான தேவ கோபத்தைத் தணிப்பது வேறு எதுவுமில்லை.

பாவம் கடவுளுக்கு எதிராகச் செய்யப்படுகிறது. அதற்குப் பரிகாரம் செய்தேயாக வேண்டும்!