இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவப் பரிகாரம்: நம்முடைய பங்கு!

''ஒரு பூசைக்கு முன், உலகின் சகல நற்செயல்களும் மலைக்கு முன் சிறு மணற்துகளைப்" போலிருக்கும் என்றால், சேசுவின் பாவப் பரிகாரம் போதாதா? நம் செயல்களால் என்ன பெரிய பலன் விளைந்து விட முடியும்? இதற்கு இப்படிப்பதில் கூறுவோம்: உண்மை தான்! சேசுவின் பரிகாரச் செயலுக்கு முன், நம் பரிகாரம் அற்ப தூசி மட்டுமே. ஆயினும் நாமும் பரிகாரம் செய்ய வேண்டியது ஏனெனில், உண்மையில், இதை விரும்புவது நம் ஆண்டவரேதான்! தவம் செய்து பாவங் களுக்குப் பரிகாரம் செய்ய அவரே நமக்குக் கற்பிக்கிறார்.

சேசுநாதர் கானாவூர்த் திருமணத்தில், ஆறு கற்சாடிகளைத் தண்ணீரால் நிரப்பும்படி ஏன் உத்தரவிட்டார்? தண்ணீர் இன்றியே அந்தச் சாடிகளைத் திராட்சை இரசத்தால் நிரப்ப அவரால் இயலாதா? லாசரை உயிர்ப்பிக்குமுன் கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றும்படி ஊழியர் களுக்கு அவர் உத்தரவிடாமல், "லாசரே, வெளியே வா" என்று மட்டும் அவர் கட்டளையிட்டிருந்தால், அந்தப் பெரும் கல் தானாகவே நகர்ந்து லாசருக்கு வழிவிட்டிருக்காதா? ஐயாயிரம் ஆண்கள் அடங்கிய பெருங்கூட்டத்திற்கு உணவளிக்க, ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்மையாகவே அவருக்குத் தேவையாக இருந்தனவா?

எவ்வளவு அற்பமாயினும் பரிகாரத்திற்கு நமது பாகமும் தமது பலியோடு இணைய வேண்டும் என்று அவர் விரும்புவதை இவை காட்டுகின்றன. இதனால்தான் அவர், "தவஞ் செய்யுங்கள், ஏனெனில் மோட்ச இராச்சியம் சமீபித்திருக்கிறது" என்று கூறி நம்மை அழைக்கிறார். இதனால் தான் தம் சிலுவையைச் சுமக்க அவர் சீரேனேயனாகிய சீமோனை அனுமதித்தார்.

தினமும் பூசை கண்டு நன்மை வாங்குவது மட்டுமல்ல, தேவ வழிபாடு நம் அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பதும் மிக முக்கியமானது. 'யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை அனுதினமும் சுமந்து கொண்டு என்னைப் பின் செல்லக் கடவான்" என்கிறார் ஆண்டவர் (லூக். 9:23). இவ்வாக்கியத்தில் "அனுதினமும் " என்ற வார்த்தையை நன்றாக மனதில் குறித்துக் கொள்ளுங்கள். சிலர் சில துன்பங்களுக்குப் பிறகும், சிலர் ஒரு சில நாட்கள் துன்பம் அனுபவித்த பிறகும் அது பற்றிக் கடவுளைத் தூஷணிக்கத் தொடங்கி விடுகிறார்கள். "எனக்கு மட்டும் ஏன் இந்தத் துன்பங்கள்?" "கடவுளுக்குக் கண்ணில் லையா?" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவோர், தாம் "தேவ ரூபமாயிருக்கையில் ... தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனிதர் சாயலாகி, மனுரூபமாகக் காணப் பட்டு, தம்மைத் தாமே தாழ்த்தி, மரணமட்டுக்கும் அதாவது சிலுவை மரணமட்டுக்கும் கீழ்ப் படிதலுள்ளவரான " (பிலி. 2:6-8) ஆண்டவரை மறந்து விடுகிறார்கள். இவர்களுக்கு நாம் சொல்வது: நீங்கள் துன்பங்களை அனுபவிப்பதற்கு உங்கள் கடந்த காலப் பாவங்கள் காரணமாக இருக்கலாம்; அல்லது இவ்வுலகிலேயே உங்கள் பாவங்களைப் பரிகரிக்கவோ, உங்கள் துன்பங்களின் வழியாகப் பிறரை மனந்திருப்பவோ, உங்களை சோதனைகளிலிருந்து காப்பாற்றவோ வேண்டுமென்ற கடவுளின் விருப்பம் காரணமாக இருக்கலாம். ஆனால் பாவமே அறியாத ஆண்டவர் ஏன் துன்பம் அனுபவித்தார்? நமக்காகத்தானே? இதனால் அவர் அடையும் இலாபம் என்ன? எதுவுமில்லையே! தம் அன்பி னால் மட்டும்தானே அவர் துன்பங்களை ஏற்றுக்கொண்டார்? அவர் நிமித்தமாகவும், வரவிருக் கும் மாபெரும் சம்பாவனைக்காகவும் நமக்கு அன்றாடம் வரும் ஒரு சில துன்பங்களை நாம் ஏற்றுக்கொண்டு, பாவப் பரிகாரத்திற்காக அவற்றை அவருக்கே ஒப்புக்கொடுக்கக் கூடாதா?

எனவே அவரைப் பின் செல்ல விரும்புவீர்கள் என்றால், உங்கள் வாழ்வு சிலுவையோடு ஒன்றிக்கப்பட்டதாக இருந்துதான் ஆக வேண்டும். ஏனெனில் இது நம்மீது அவரே சுமத்திய நிபந் தனையாக இருக்கிறது: "யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னையே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்செல்லக் கடவான்" (மத் 16:24). இங்கு நம் மக்களிடையே நிலவும் தவறான ஓர் எண்ணத்தைச் சுட்டிக் காட்டுவது அவசியம்.

யாராவது படுக்கையில் விழாமல் திடீரென மரிக்க நேர்ந்தால், அதை நம் மக்கள் “நல்ல சாவு" என்கிறார்கள். ஆனால் ஞான முறையில், கிறீஸ்தவனுக்கு இதை விட "பயங்கரமான சாவு" வேறு எதும் இருக்க முடியாது. ஏனெனில் சடுதி மரணம் அடையும் ஒருவன் :

1. சாவான பாவ அந்தஸ்தில் இருந்தால், அவன் மனந்திரும்பவோ, தன் பாவங்களுக்கு மனஸ்தாபப்படவோ, பாவசங்கீர்த்தனம் செய்து, திருச்சபை வழங்கும் இறுதித் தேவத்திரவிய அனுமானங்களைப் பெற்றுக்கொள்ளவோ அவனுக்கு வாய்ப்புத் தராமல் திடீர் மரணம் ஒரு நரகக் கண்ணியைப் போல் அவனைச்சிக்க வைத்து, நரகத்திற்கு இழுத்துச்சென்று விடும்;

2. நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் இருந்தாலும், தன் பாவங்களுக்கு முழுப் பரிகாரம் செய்ய இயலாமல் அவன் இறக்க நேர்ந்தால் அவன் உத்தரிக்கிற ஸ்தலத்தின் மிகக் கொடிய வேதனைகளை வெகு நீண்ட காலம் அனுபவிக்கும் நிலைக்கு உட்படு கிறான். துன்பங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்வதன் மூலம் நம் ஆண்டவர் மீது தனக்குள்ள நேசத்தை இவ்வுலகில் நிரூபிக்க அவனுக்கு வாய்ப்புக் கிடைக்காமலே போகிறது.

உண்மையில் தேவ மாதா தொடங்கி, அர்ச்சியசிஷ்டவர்கள் அனைவரிலும், தங்கள் வாழ்வில் துன்பம் அனுபவிக்காதவர்கள் யாரையாவது நாம் சுட்டிக் காட்ட முடியுமா? அவர்களில் மிக அநேகர் "அழுந்திச் செத்தார்கள்!" அதாவது, நீண்ட காலம் படுக்கையில் கிடந்து, கொடிய நோய் களால் வருந்தி, உடல் முற்றிலுமாக நலிந்து, ஆனால் ஞான வாழ்வில் உத்தமதனத்தின் சிகரத்தை அடைந்து, பரலோகக் காட்சிதியானத்தில் திளைத்தவர்களாக, மரித்தார்கள். அதுதான் "நல்ல சாவு!" எந்தச் சாவு ஒருவனை நேரடியாகக் கடவுளிடம் அழைத்துச் செல்லுமோ, எந்தச் சாவு மறுவுலகில் ஒருவனை முழுமையாகத் துன்பங்களிலிருந்து விடுவிக்குமோ, அதுதான் நல்ல சாவு!

அதிகபட்சம் நூறு ஆண்டுகள் இவ்வுலகில் சேசுவின் மீதான அன்பின் நிமித்தம், எத்தகைய துன்பத்திற்கும் தன்னைக் கையளித்து வாழ்ந்து, இறுதியில் சேசுநாதரின் அரவணைப்பிலும், தேவமாதாவின் தாயன்பிலும், பரிபூரண மனச் சமாதானத்துடனும் மரித்து, இனி எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு, நித்திய காலமும் தமத்திரித்துவ தேவனோடும், நம் அன்புத் தாயாரோடும், சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர்களோடும் எல்லா இன்பங்களையும் அனுபவித்து வாழ விரும்புவது எப்பேர்ப்பட்ட ஞானம்! இதை விரும்புவீர்கள் என்றால் இப்போதே தவம் செய்யுங்கள்! பரிகாரம் செய்யுங்கள்! சேசுவின் சிலுவையோடு உங்களை இணைத்துக்கொண்டு அவரோடு துன்பங்களைப் பொறுமையோடு சுமந்து செல்லுங்கள். இவ்வாறு அவர் உங்களுக்குக் காண்பித்துள்ள அளவற்ற நேசத்திற்குப் பதில் நேசம் காட்டுங்கள்!

ஆனால் மனிதர்களில் மிக மிகப் பெரும்பாலானோர் இவ்வுலகில் எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட்டு, பசாசுக்களின் அடிமைகளாக, நித்திய நரக பயங்கரத்திற்குப் பாத்திரவான் களாக மரிப்பதையே தேர்ந்து கொள்கிறார்கள். ஒரு குறுகிய வாழ்நாளில் எல்லா இன்பங் களையும் அனுபவித்து விட்டு, நித்தியம் முழுவதிலும் நரகத்தின் கொடிய வாதைகளுக்குள் சிக்கிக்கொள்வது எவ்வளவு பெரிய மூடத்தனம்! நம்மிடம் பரிகாரம் செய்யும் ஆவல் இல்லை என்றால், நாமும் இக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். மனந்திரும்புங்கள், "தவஞ் செய்யுங்கள், ஏனெனில் மோட்ச இராச்சியம் சமீபித்திருக்கிறது!" என்ற ஆண்டவரின் வார்த்தைகளை எப்போதும் மனதில் கொண்டு செயல்படுங்கள்.