இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கர்மப் பாவம்

மனிதன் புத்தி விபரம் அறிந்தபின் தன் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் கட்டிக் கொள்ளும் பாவங்கள் கர்மப் பாவங்கள் எனப்படுகின்றன. இந்தக் கர்மப் பாவம் இரண்டு வகைப்படும். அவை, சாவான பாவம், அற்பப் பாவம் ஆகியவையாகும். 

சாவான பாவம்

மனிதன் முழு அறிவுடனும், முழு மன சம்மதத்துடனும் கனமான காரியத்தில் தேவ கட்டளையை மீறுவது சாவான பாவமாக இருக்கிறது. ஞானஸ்நானத்தில் ஆத்துமத்தின் மீது பொழியப்பட்ட தேவ இஷ்டப்பிரசாதமாகிய தேவ உயிருக்கு இது சாவாக இருப்பதால், இந்த தேவ உயிரை இந்தப் பாவம் கொன்று விடுவதால், இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதைச் செய்தவன் மோட்ச பாக்கியத்தை மட்டுமின்றி, கடவுளுக்குப் பிள்ளையாயிருக்கும் நிலை யையும், தான் அது வரை தனது நற்செயல்களால் சம்பாதித்த பேறுபலன்கள் அனைத்தையும் இழந்து போகிறான். சாதாரண ஞான ஜீவியத்தில், சேசுநாதரின் கட்டளைப்படி, கத்தோலிக்க குருக்களிடம் செய்யப்படும் பாவசங்கீர்த்தனம் என்னும் அற்புதத் தேவத்திரவிய அனுமானத் தால் அன்றி வேறு எந்த விதத்திலும் இந்தப் பாவம் மன்னிக்கப்படுவதில்லை. ஆனால் கிறீஸ்தவன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து குருவானவரால் மன்னிக்கப்படும்போது, சேசுவின் திரு இரத்தம் அவனுடைய ஆத்துமத்தில் ஊற்றப்பட்டு, அவன் பாவத்தால் இழந்து போன தேவ இஷ்டப் பிரசாதத்தையும் மற்ற சகல நன்மைகளையும் அவனில் மீண்டும் ஸ்தாபிக்கிறது. 

அற்பப் பாவம்

சாவான பாவத்திற்குரிய மூன்று நிபந்தனைகளில் ஒன்று குறைந்தாலும், அந்தப் பாவம் சாவான பாவமாக இருப்பதில்லை. அற்பப் பாவம் ஆத்துமத்தைக் கொல்வதில்லை, என்றாலும் அது ஆத்துமத்தை பலவீனப்படுத்தி, தீமையின் மீது அதிக சார்புள்ளதாக ஆக்கி, இறுதியில் சாவான பாவத்திற்கு வழியுமாகிறது என்பதால் கத்தோலிக்கர்கள் இந்தப் பாவத்தைப் பற்றியும் எந்த விதத்திலும் அலட்சியமாக இருத்தலாகாது.