சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 51

சீராக்கின் மகனான சேசு சர்வேசுரனுக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறார்.

1. சீராக்கின் மகனான சேசுவின் மன்றாட்டு: ஆண்டவரே, அரசரே, உமக்கு நான் மகிமை செலுத்துகிறேன்; என் இரட்சகராகிய கடவுளே உம்மைத் துதிக்கிறேன்.

2. உமது திருப்பெயருக்கு நான் மகிமை செலுத்துவேன்; ஏனென்றால் எனக்குத் துணைவரும் பாதுகாவலருமானீர்.

3. அழிவினின்றும், அக்கிரம நாவின் கண்ணியினின்றும், பொய்யை உருவாக்குபவர்களின் உதடுகளினின்றும் என் சரீரத்தை இரட்சித்தீர்; என் அருகில் நிற்பவர்களுக்கு முன்பாக நீர் எனக்குத் துணைவராய் இருந்திருக்கிறீர்.

4. உமது திருப்பெயரின் இரக்கப் பெருக்கத்திற்கேற்றபடி, எனக்கு எதிராகக் கர்ச்சித்தவர்களிடமிருந்தும், என்னை விழுங்க ஆயத்தமா யிருந்தவர்களிடமிருந்தும் என்னை விடுவித்தீர்.

5. என் உயிரைப் பறிக்கத் தேடியவர்களின் கைகளினின்றும், என்னைச் சுற்றிக்கொண்ட துன்பங்களின் வாயில்களினின்றும்,

6. என்னைச் சூழ்ந்துகொண்ட நெருப்பின் நெருக்குதலினின்றும் என்னை இரட்சித்தீர்; அக்கினியின் மத்தியில் எரிந்துபோகவில்லை.

7. நரகத்தின் வயிற்றின் ஆழத் தினின்றும், அசுத்த நாவினின்றும், பொய்யான வார்த்தையினின்றும், அநீத அரசனினின்றும், அவதூறான நாவினின்றும் என்னைக் காப்பாற் றினீர்.

8. மரணம் வரையும் கூட என் ஆத்துமம் ஆண்டவரைத் துதிக்கும்.

9. என் உயிரானது நரக பாதாளத்தின் அருகே நெருங்கிக் கொண்டிருந்தது.

10. அவை எல்லாப் பக்கத்திலும் என்னைச் சூழ்ந்துகொண்டன; எனக்கு உதவிசெய்பவன் ஒருவனும் இருக்கவில்லை; மனிதர்களின் உதவியைத் தேடினேன், ஆனால் ஒருவனும் இருக்கவில்லை.

11. ஆண்டவரே, உலகத்தின் தொடக்கம் முதலே இருந்து வருகிற உம் இரக்கத்தையும், உமது செயல்களையும் நான் நினைவுகூர்ந்தேன்.

12. ஆண்டவரே, உமக்காகக் காத்திருப்பவர்களை நீர் எப்படி விடுவிக்கிறீர், மக்களினங்களின் கைகளினின்று அவர்களை எப்படி இரட்சிக்கிறீர்!

13. நான் வசிக்கும் இடத்தைப் பூமியின்மீது உயர்த்தினீர்; மரணம் கடந்து போகும்படி நான் ஜெபித்தேன்.

14. என் துன்ப நாளில் ஆண்டவரும், என் ஆண்டவரின் பிதாவுமானவர் என்னை விட்டு விலகாதிருக்கும்படியும், ஆங்காரிகளின் காலத்தில் என்னைத் உதவியின்றி விட்டுவிடாதபடியும் என் ஆண்டவரின் பிதாவாகிய கடவுளை மன்றாடினேன்.

15. நான் இடைவிடாமல் உமது திருப்பெயரைத் துதிப்பேன், நன்றி யறிதலோடு அதைத் துதிப்பேன், என் ஜெபம் கேட்கப்பட்டது.

16. அழிவினின்று என்னை இரட் சித்தீர்; அக்கிரம காலத்தினின்று என்னை விடுவித்தீர்.

17. ஆகையால் நான் உமக்கு நன்றி கூறுவேன்; உம்மைத் துதிப்பேன், ஆண்டவருடைய திருப்பெயரை வாழ்த்துவேன்.

18. நான் இன்னும் வாலிபனா யிருந்த போதே, வழிதவறிப் போகு முன் வெளிப்படையாக என் ஜெபத்தில் ஞானத்தைத் தேடினேன்.

19. தேவாலயத்திற்கு முன்பாக அதற்காக மன்றாடினேன்; கடைசி வரைக்கும் நான் அதைத் தேடுவேன்; காலத்திற்கு முன் பழுக்கும் திராட் சைப் பழத்தைப்போல அது என்னில் பெருகியது.

20. என் இருதயம் அதில் இன்பம் கண்டது, என் பாதம் சரியான வழியில் நடந்தது. என் வாலிபமுதல் நான் அதைத் தேடினேன்.

21. என் செவியைச் சற்றே சாய்த்து அதைப் பெற்றுக் கொண்டேன்.

22. என்னில் நான் மிகுந்த ஞானத் தைக் கண்டேன், அதில் மிகுந்த ஆதாயம் அடைந்தேன்.

23. எனக்கு ஞானத்தைத் தருப வரை நான் மகிமைப்படுத்துவேன்.

24. அதைப் பின்பற்றத் தீர்மானம் செய்திருக்கிறேன்; நன்மையின் மீது நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன்; நான் கலக்கமடைய மாட்டேன்.

25. என் ஆத்துமம் அதற்காகப் போராடியது; அதைச் செய்வதில் நான் உறுதிப்படுத்தப்பட்டேன்.

26. உன்னதங்களை நோக்கி என் கரங்களை உயர்த்தி, ஞானத்தை நான் அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன்.

27. அதை நோக்கி; என் ஆத்து மத்தை நடத்தினேன்; அறிவில் அதைக் கண்டடைந்தேன்.

28. ஆரம்பத்திலிருந்தே அதனு டன் என் இருதயத்தைச் சுதந் தரித்துக் கொண்டேன்; ஆகையால் நான் கைவிடப்பட மாட்டேன்.

29. அதைத் தேடுவதில் என் உள்ளம் கலங்கினது; ஆகையால் ஒரு நல்ல உடைமையை நான் சுதந்தரித்துக்கொள்வேன்.

30. எனக்கு சம்பாவனையாக ஆண்டவர் எனக்கு ஒரு நாவைத் தந்திருக்கிறார்; அதைக் கொண்டு அவரைத் துதிப்பேன்.

31. கல்வியறிவற்றவர்களே! என் னிடம் நெருங்கி வாருங்கள்; நல்லொழுக்கத்தின் வீட்டில் ஒன்று கூடுங்கள்.

32. ஏன் இன்னும் தாமதிக்கிறீர்கள்? இந்தக் காரியங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? உங்கள் ஆத்துமங்கள் மிதமிஞ்சித் தாகமாயிருக்கின்றன.

33. நான் வாய்திறந்து பேசினேன்; பணமில்லாமல் (இலவசமாக) அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

34. உங்கள் கழுத்தை நுகத்தடிக் குக் கீழ்ப்படுத்துங்கள்; உங்கள் ஆத்துமம் நல்லொழுக்கத்தை ஏற்றுக்கொள்வதாக; ஏனெனில் கண்டுபிடிக்கப்படும்படி அது அண்மையில்தான் இருக்கிறது.

35. நான் எப்படி சிறிது வேலை செய்திருக்கிறேன் என்றும், எப்படி எனக்கென அதிகமான ஓய்வைக் கண்டடைந்திருக்கிறேன் என்றும் உங்கள் கண்களால் பாருங்கள்; 

36. பெரும் பணத்தொகைபோல நல்லொழுக்கத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்; திரளான பொன் னைப்போல் அதைச் சொந்தமாகக் கொண்டிருங்கள்.

37. ஆண்டவருடைய இரக்கத்தில் உங்கள் ஆத்துமம் அக்களிப்பதாக; அவருடைய புகழ்ச்சியில் நீங்கள் கலக்கம் அடையமாட்டீர்கள்.

38. காலத்திற்கு முந்தியே உங்கள் வேலையைச் செய்யுங்கள்; தமது காலத்தில் அவர் உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.