சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 30

தன் பிள்ளைகளைக் கண்டிக்கவேண்டியது.

1. தன் மகனை நேசிப்பவன், அவனுடைய பிந்தைய முடிவில் அக்களிக்கும்படியாகவும், தன் அயலார்களின் வாசல்களைத் தடவித் திரியாதபடியும் அவனை அடிக்கடி தண்டிக்கிறான்.

2. தன் மகனுக்குக் கற்பிக்கிறவன், அவனில் புகழப்படுவான்; தன் வீட்டாரின் நடுவில் அவனால் மகிமையடைவான்.

3. தன் மகனுக்குக் கற்பிக்கிறவன், தன் எதிரி பொறாமை கொள்ளச் செய்கிறான். நண்பர்கள் நடுவில் அவனில் அவன் மகிமையடைவான்.

4. அவனது தகப்பன் மரித்தாலும், அவன் மரிக்காதது போல் இருக்கிறான்; ஏனெனில் தனக்கு ஒப்பான ஒருவனை அவன் விட்டுச் சென்றிருக்கிறான்.

5. தன் சீவியகாலத்தில் அவன் தன் மகனைக் கண்டு அவனில் அக்களிப்புக் கொண்டான்; தன் மரண சமயத்தில் அவன் துக்கப்படவில்லை; தன் பகைவர்முன் வெட்கிப் போகவு மில்லை.

6. ஏனெனில், பகையாளிகளுக்கு விரோதமாய்த் தன் வீட்டைக் காக்கிறவனும், தன் நண்பர்களுக்குப் பிரதி நன்றி செலுத்துபவனுமான ஒருவனை அவன் விட்டுச் சென்றிருக்கிறான். 

7. தன் புதல்வர்களின் ஆத்துமங்களுக்காக அவன் தன் காயங்களைக் கட்டுவான்; ஒவ்வொரு அலறலிலும் அவனுடைய வயிறு கலங்கும்.

8. அடித்துப் பழக்காத குதிரை பிடிவாதமுள்ளதாகிறது; கவனிப் பின்றி விடப்பட்ட மகன் தன் இஷ்டப்படி திரிபவன் ஆவான்.

9. உன் மகனை அவன் இஷ்டத் திற்கு நீ விட்டு விட்டால், நீ பயப் படும்படி அவன் செய்வான்; நீ அவனுடன் விளையாடினால் அவன் உன்னைத் துக்கப்படுத்துவான்.

10. நீ துயரப்படாதபடி அவனுடன் சேர்ந்து சிரிக்காதே; ஏனெனில், கடைசியில் உன் பற்களைக் கடிப்பாய்.

11. வாலிபத்தில் அவனுக்கு சுதந்திரம் கொடுக்காதே; அவனுடைய நடவடிக்கைகளைக் கண்டும் காணாதவனைப் போலிருக்காதே.

12. அவன் பிடிவாதக்காரன் ஆகாதபடியும், உன்னை அசட்டை செய்யாதபடியும், அதனால் உன் இருதயத்தின் துக்கமாக அவன் இராதபடியும், அவன் குழந்தையாய் இருக்கையிலேயே அவனுக்குப் பணிவைக் கற்பித்து, அவனை அடித்து வளர்ப்பாயாக.

13. உன் மகன் கெட்டுப் போய், அநாகரீகமாக நடந்து உன்னை நோகச் செய்யாதபடி, அவனுக்குப் போதித்து நல்வழியில் பழக்கு.

14. பலவீனனும் தீமைகளால் துன்பப்படுபவனுமாகிய செல்வந் தனைவிட, உடல் நலமும் சரீர பலமும் உள்ள ஏழை மேலானவன்.

15. நீதியின் பரிசுத்ததனத்திலுள்ள ஆத்துமத்தின் ஆரோக்கியம் எல்லாப் பொன்னையும் வெள்ளியையும் விட மேலானது; மிகுந்த வருமானங்களை விட ஆரோக்கியமுள்ள சரீரம் மேலானது.

16. உடல் நலமாகிய செல்வத்தை விட மேலான செல்வங்கள் இல்லை; இருதய சந்தோஷத்தை விட மேலான சந்தோஷமில்லை.

17. கசப்பான வாழ்வைவிட சாவு மேலானது; தீராத வியாதியை விட நித்திய இளைப்பாற்றி மேலானது.

18. பேசாமல் மூடியிருக்கிற வாயில் மறைந்திருக்கிற காரியங்கள்; கல்லறையைச் சுற்றிலும் வைக்கப் பட்ட ஏராளமான மாம்ச பதார்த்தங்கள் போலாம்.

19. சிலைக்குக் காணிக்கையால் வரும் நன்மை என்ன? அது சாப்பிடு வதுமில்லை, முகர்வதுமில்லை.

20. ஆண்டவரால் துன்புறுத்தப் பட்டு, தன் அக்கிரமத்தின் வெகுமதி யைச் சுமக்கிறவனும் அப்படிப் பட்டவனே.

21. கன்னிப் பெண்ணைத் தழுவிப் பெருமூச்சு விடும் அண்ணகனைப் போல், அவன் கண்களால் கண்டு வேதனையால் முனகுகிறான். 

22. உன் ஆத்துமத்தைத் துயரத் திற்குக் கையளிக்காதே; உன் சொந்த ஆலோசனையில் உன்னையே துன்பப்படுத்திக்கொள்ளாதே.

23. இருதய சந்தோஷமே மனித னின் வாழ்வும், ஒருபோதும் கை விடாத பரிசுத்தத்தின் பொக்கிஷமு மாகும். மனிதனுடைய சந்தோஷம், நீண்ட வாழ்வாகும்.

24. கடவுளுக்குப் பிரியப்பட உன் ஆத்துமத்தின் மட்டில் இரக்கமா யிருந்து, உன்னையே அடக்கு; அவரது பரிசுத்ததனத்தில் உன் இருதயத்தைச் ஒன்றுதிரட்டு; மனத் துயரை உன்னை விட்டுத் தூர அகற்று.

25. ஏனெனில், மனத்துயர் பலரைக் கொன்றது. அதில் ஆதாயம் ஏதுமில்லை.

26. பொறாமையும் கோபமும் மனிதனின் வாழ்நாட்களைக் குறைக் கின்றன; ஆழ்ந்த கவலை காலத்துக்கு முந்தியே முதிர்வயதைக் கூட்டி வரும்.

27. சந்தோஷ உற்சாகமும், நன்மைத்தனமும் உள்ள இருதயம் விருந்தாடுகிறது; ஏனெனில், அவனுடைய விருந்துகள் அக்கறை யோடு தயாரிக்கப்படுகின்றன.