சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 27

தரித்திரம், ஆஸ்தியின் மேல் ஆசை, வியாபாரம் ஆகியவை பாவத்தின் ஊற்றுகள்.

1. தரித்திரத்தால் பலர் பாவத்தில் விழுந்தார்கள்; செல்வந்தனாகத் தேடுபவன் தன் கண்ணைத் திருப்பிக் கொள்கிறான்.

2. கற்சுவர் மத்தியில் முளையடிக் கப்படுவதுபோல, விற்பதற்கும் வாங்குவதற்கும் மத்தியில் பாவம் நிற்கும்.

3. பாவம் பாவியோடு அழிந்து போகும்.

4. தேவ பயத்தில் நீ விழிப்போடு நிலைத்திராவிட்டால், வெகு சீக்கிரத் தில் உன் வீடு இடிபட்டுப் போகும்.

5. சல்லடையில் சலிக்கும்போது உமி தங்கிவிடுவதுபோல, மனிதனுடைய குழப்பம் அவனுடைய எண்ணங்களில் தங்கிவிடும்.

6. குயவன் பாண்டங்களைச் சூளை பரிசோதிக்கின்றது; துன்ப சோதனை நீதிமான்களைப்பரிசோதிக்கிறது.

7. மரத்தின் கிளைகள் கழிக்கப்படும்போது மறைந்துள்ள கனிகள் வெளித் தெரிவதுபோல, மனிதன் வாயினின்று புறப்படும் வார்த்தைகள் அவன் மனதிலுள்ள எண்ணத்தைக் காண்பிக்கும்.

8. ஒருவன் பேசு முன் அவனைப் புகழாதே. ஏனெனில், வார்த்தைகளைக் கொண்டுதான் அவனை அறியவேண்டும்.

9. நீ நீதியைப் பின்பற்றி நடந்தால் அதைக் கைக்கொள்வாய்; அதை மகத்துவத்தின் ஆடையாக அணிந்து கொள்வாய்; அதனோடு தங்கியிருப்பாய்; அது என்றென்றைக்கும் உன்னைக் காத்துக்கொள்ளும்; சகலமும் ஒப்புக்கொள்ளப்படும் நாளில் அதை உன் பலமான அஸ்திவாரமாகக் காண்பாய்.

10. பறவைகள் தங்களைப் போன் றவைகளோடு சேர்ந்துகொள்கின்றன; சத்தியமும் தன்னை அனுசரிப்பவர்களிடம் திரும்பி வரும். 

11. சிங்கம் இரைக்காக எப்போதும் பதுங்கியிருக்கிறது; அதுபோல் அக்கிரமங்கள் செய்பவர்களுக்காகப் பாவங்கள் காத்திருக்கின்றன.

12. பரிசுத்தனான மனிதன் சூரிய னைப் போல மாறாமல் ஞானத்தில் நிலைத்திருக்கிறான்; மூடனோ சந்திரனைப்போல மாறுபடுகிறான்.

13. மூடர்கள் மத்தியில் இருக்கும்போது, மவுனமாயிருந்து சமயம் அறிந்து பேசு; ஆனால் சிந்திப்பவர்கள் நடுவிலேயே எப்போதும் இரு.

14. பாவிகளின் பேச்சு வெறுப்புக் குரியது. பாவத்தின் இன்பங்களில் அவர்களுடைய சிரிப்பு இருக்கிறது.

15. அதிகம் ஆணையிடுபவனின் பேச்சு தலைமயிரை சிலிர்க்கச் செய்கிறது; அதிலுள்ள அவசங்கை காதுகளை மூடிக்கொள்ளச் செய்யும்.

16. ஆங்காரிகளின் சண்டைகளில் இரத்தம் சிந்தப்படுகிறது, அவர்களுடைய சாபமோ, கேட்பதற்கு வேதனை தரும்.

17. நண்பனின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறவன் நம்பிக்கையை இழக்கிறான்; தன் மனதுக்கேற்ற நண்பனை அவன் காண மாட்டான்.

18. உன் அயலானை நேசி; பிரமாணிக்கத்தோடு அவனுடன் ஒன்றித்திரு.

19. அவனது இரகசியங்களைக் கண்டுபிடிக்கிறாய் என்றால், இனி அவன் பின் செல்லாதே.

20. ஏனெனில் தன் நண்பனோடு தனக்குள்ள நட்பை அழிக்கிறவன் எப்படியோ, அப்படியேதான் தன் அயலானின் நட்பை அழிக்கிறவனும்.

21. தன் கையிலிருந்த பறவையைப் பறக்கவிடுபவன்போல, நீயும் உன் அயலானைப் போக விட்டு விட்டாய்; அவனை மீண்டும் நீ பிடிக்கமாட்டாய்.

22. இனி அவனைப் பின்செல்லாதே; ஏனெனில் அவன் வெகுதூரம் போய்விட்டான்; கண்ணியினின்று தப்பியோடும் ஆட்டுக்கடா போல ஓடி விட்டான்; ஏனெனில், அவனது ஆத்துமம் காயப்பட்டிருக்கிறது.

23. இனி அவனை நீ கட்டி வைக்க முடியாது; அதை விட சாபமிடுபவ னோடு மீண்டும் ஒன்றிப்பது எளிது.

24. ஆனால் நண்பனின் இரகசியங்களை வெளிப்படுத்துவதோ நிர்ப்பாக்கிய ஆத்துமத்திற்கு நம்பிக் கைக்கு இடமில்லாதபடி செய்கிறது.

25. கண்ணால் சாடை காண்பிக் கிறவன் தீய காரியங்களை உற்பத்தி செய்கிறான், எந்த மனிதனும் அவனைப் புறந்தள்ள மாட்டான்.

26. உன் கண்கள் முன் அவன் தன் வாயை இனிப்பாக்குவான். உன் வார்த் தைகளை வியந்து பாராட்டுவான். முடிவிலோ அவன் நாக்கு புரண்டு விடும்; உன் வார்த்தைகளின்மீது அவன் ஒரு தடைக்கல்லை வைப்பான்.

27. நான் பல காரியங்களை வெறுத்தேன்; ஆனால் அவனைப் போல் அல்ல; ஆண்டவர் அவனை வெறுப்பார்.

28. எவனாவது உயரத்தில் கல்லை எறிவான் என்றால், அது அவன் தலைமீதே விழும். வஞ்சகமுள்ள அடி வஞ்சகனையே காயப்படுத்தும்.

29. குழி தோண்டுபவன் அதிலேயே விழுவான், பிறனுக்காக இட்டு வைத்த கல்லில் அவனே கால் இடறு வான்; பிறருக்குக் கண்ணி வைக்கிற வன் தானே அதில் அழிவான். 

30. தீய ஆலோசனை அதைத் தந்தவன் மீதே உருண்டு விழும் எங்கிருந்து அது தன்னிடம் வந்தது என்று அவன் அறிய மாட்டான். 

31. பரிகாசமும், கண்டனமும் ஆங்காரியினுடையவை. பழிதீர்ப்பு ஒரு சிங்கத்தைப் போல் அவனுக் காகப் பதுங்கியிருக்கும்.

32. நீதிமான்களின் வீழ்ச்சியில் இன்பம் காண்பவர்கள், கண்ணியில் சிக்கி மடிவார்கள்; அவர்கள் சாகு முன் துயரம் அவர்களை விழுங்கும். 

33. கோபம், வெறி இரண்டும் அருவருப்புக்குரியவை; ஆனால் பாவ முள்ள மனிதன் அவற்றிற்குக் கீழ்ப்பட்டிருப்பான்.